புதன், 15 ஜூலை, 2020

எஸ்.ஜி.முருகையன் படுகொலை! கொலையாளிகள் குறித்து திடுக்கிடும் புதிய தகவல்கள்!! மத்திய, மாநில அரசுகளே! மறு விசாரணையை தொடங்குங்கள்!! - டாக்டர் K. கிருஷ்ணசாமி


1979-ல் நாகை MP எஸ்.ஜி.முருகையன் படுகொலை! கொலையாளிகள் குறித்து திடுக்கிடும் புதிய தகவல்கள்!!
மத்திய, மாநில அரசுகளே! மறு விசாரணையை தொடங்குங்கள்!! 
டாக்டர் K. கிருஷ்ணசாமி

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பொறுப்பாளராகவும், 1977-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் எஸ்.ஜி.முருகையன் ஆவார். அவர் அந்த பகுதியில் விவாசயத் தொழிலாளர்களை ஒன்று திரட்டி, நில பிரபுகளுக்கு எதிராக சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக குரல் கொடுத்து வந்தார். எனவே, அந்த பகுதியில் மிகவும் செல்வாக்கு மிக்க மனிதராக விளங்கினார். இவர் நாகை நாடாளுமன்றத் தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்தவர் ஆவார்.

அவருடைய வளர்ச்சி கண்டு பொறுக்காத நில பிரபுக்களும், சாதிய மேலாதிக்க மனநிலை கொண்டோரும் ஒருங்கிணைந்து, அவரை 1979, ஜனவரி 5-ஆம் தேதியன்று படுகொலை செய்தனர். தஞ்சை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் கொலையில் சமபந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி குற்றவாளிகள் அனைவரும் விடுதலை பெற்றுக் கொண்டார்கள். அவர் கொலையுண்ட போது இது அரசியல் பகையா? தனிப்பட்ட விரோதமா? நிலத் தகராறா? என பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. 

இப்பொழுது கொலையாளிகள் குறித்து புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளன. அது முழுக்க முழுக்க அஇஅதிமுக தொண்டர்களால் செய்யப்பட்டதாக ஒரு கருத்தை, எம்.ஜி.ஆர் அவர்களிடமும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களிடமும் மிகவும் நெருக்கமாக இருந்த சசிகலா அவர்களுடைய குடும்பத்தை சேர்ந்த திவாகரன் அவர்களுடைய புதல்வர் ஜெய் ஆனந்த், ஜீன் - 20 அன்று தனது முகநூல் பதிவில் 

‘’எம்.பி ஆக தேர்வுசெய்யப்பெற்ற எஸ்.ஜி.முருகையன் எம்.ஜி.ஆரை அரசியல் ரீதியாக மிகவும் தரைகுறைவாக திட்டத் தொடங்கினார். இதனால் அ.இ.அ.தி.மு.க தொண்டர்களின் தீராப்பகைக்கு ஆளானார். கம்யூனிஸ்ட்டு எம்.ஜி.ஆர் தொண்டர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. வேளாண் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் தங்கவேல் தாத்தாவின் பார்வைக்கு நிலவரத்தைக் கொண்டு சென்றார். நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜி. முருகையன்னை கண்டித்தார் தங்கவேல் தாத்தா. இரு கட்சியினரிடையே ஏற்பட்ட கைகலப்பின் நீட்சியாக எம்.பி. படுகொலை செய்யப்பட்டார் ‘’

என மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். 41 ஆண்டுகாலத்திற்கு பிறகு, திவாகரனின் புதல்வர் ஜெய் ஆனந்த் மிகவும் பிரசித்திப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜி.முருகையன் கொலை குறித்து எழுதுகிறார் என்றால், அதை எளிதாக  எடுத்துக்கொள்ள முடியாது. நெருப்பில்லாமல் புகையாது. ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலும், தேவேந்திரகுல வேளாளர்கள் மத்தியிலும் குரல் எழுப்புவதற்கு அன்று வலுவான அமைப்புகள் இல்லாததால் அந்த நிகழ்வு அப்படியே கடந்து சென்று விட்டது. இருந்தாலும், 1957-ல் தியாகி இம்மானுவேல் தேவேந்திரர் படுகொலை, 1968-ல் கீழவெண்மணி படுகொலைகளைப் போல, எஸ்.ஜி.முருகையன் அவர்களுடைய படுகொலையும் நீங்கா வடுவாக இருந்து வருகிறது. இந்தியப் பொதுவுடைமைவாதிகளை பற்றி அனைவருக்கும் தெரியும்; நம்மால் அவ்வாறு கடந்து செல்ல முடியாது. எஸ்.ஜி.முருகையன் படுகொலைக்கு நீதியை நிலைநாட்டியே தீர வேண்டும். எனவே, கொலையாளிகள் குறித்து தற்போது வெளிவர தொடங்கியுள்ள புதிய திடுக்கிடும் தகவல்களை கருத்தில் கொண்டு இந்த வழக்கு மீண்டும் முழு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். மாநில அரசு சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். ஒருவேளை மாநில அரசு பரிந்துரை செய்யாவிட்டாலும் மத்திய அரசு சட்ட விதிமுறைகளை தளர்த்தி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக