திங்கள், 18 மே, 2020

கொவிட்-19 பற்றிய சமீபத்திய தகவல்கள் தற்போதைய நிலவரம்:


கொவிட்-19 தடுப்பு, கட்டுப்படுத்துதல் மற்றும் மேலாண்மைக்காக முன்னெச்சரிக்கை மற்றும் செயல்மிகு அணுகுமுறை மூலம் இந்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொவிட்-19 மேலாண்மை முயற்சிகள் உயர்மட்ட அளவில் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் தற்போது 56,316 பாதிக்கப்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். இது வரை, கொவிட்-19இல் இருந்து 36,824 பேர் குணமடைந்துள்ளனர். 2,715 நோயாளிகள் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் குணமடைந்துள்ளனர். நமது தற்போதைய குணமாகும் விகிதம் 38.29 சதவீதம் ஆகும்.

ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளோர் விகிதத்தை வைத்துப் பார்க்கும் போது, உலகளாவிய விகிதமான ஒரு லட்சத்துக்கு 60 பேர் என்பதோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் ஒரு லட்சத்துக்கு 7.1 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். உலக சுகாதார நிறுவனத்தின் 118வது அறிக்கையின் படி, அதிக அளவிலான பாதிப்புகள் உள்ள நாடுகளில் ஒரு லட்சத்துக்கு எத்தனை பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனும் விவரம் வருமாறு:

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல்கள்


சிகப்பு/ஆரஞ்சு/பச்சை மண்டலங்களை வகைப்படுத்துவதற்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் 17.05.2020 அன்று மாநிலங்களுக்கு வழங்கியது. இந்த வழிகாட்டுதல்களின் படி, தங்களது கள மதிப்பீட்டுக்கு ஏற்றவாறு, மாவட்டங்கள்/மாநகராட்சிகள், அல்லது தேவைப்படின் துணைப் பிரிவு/வார்டு அல்லது எந்த நிர்வாகப் பிரிவையும்  சிகப்பு/ஆரஞ்சு/பச்சை மண்டலங்களாக வகைப்படுத்த மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டன.

தற்போதுள்ள மொத்த பாதிப்புகள், ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, இரட்டிப்பாகும் வீதம் (7 நாட்களுக்கு ஒரு முறை கணக்கிடப்பட வேண்டும்), இறப்பு விகிதம், பரிசோதனை அளவு மற்றும் உறுதி செய்யப்படும் விகிதம் ஆகிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அளவுருக்களின் பலக்கூறு மதிப்பீட்டின் அடிப்படையில் இது செய்யப்பட வேண்டும்.

கள நடவடிக்கையைப் பொருத்தவரை, கட்டுப்பாட்டு மண்டலங்களையும் இடையக மண்டலங்களையும் திறமையான முறையில் வரையறுக்குமாறு மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இத்தகைய கட்டுப்பாட்டு மண்டலங்களில் கண்டிப்பான முறையில் தடுப்புத் திட்டங்களை அமல்படுத்துமாறு மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

கட்டுப்பாட்டு மண்டலங்களில், சிறப்புக் குழுக்கள் வீடு வீடாகச் சென்று பாதிக்கப்பட்டுள்ளோர் உள்ளனரா என்று செயல்திறனுடன் கண்காணித்தல், மாதிரிகளுக்கான வழிகாட்டுதல்களின் படி அனைத்து நபர்களையும் பரிசோதித்தல், தொடர்பு கண்டறிதல், அனைத்து பாதிக்கப்பட்ட நபர்களின் மருத்துவ மேலாண்மை ஆகியவை முன்னுரிமைச் செயல்பாடுகளாகும். இது தொடர்பாக சமூகத்தின் செயல்மிகு பங்குபெறுதலை வேண்டலாம்.

மேலும், ஒவ்வொரு கட்டுப்பாட்டு மண்டலத்தை சுற்றியும் ஒரு இடையக மண்டலத்தை வரையறுத்து, அருகில் உள்ளப் பகுதிகளுக்குத் தொற்று பரவாமல் இருக்க உறுதி செய்ய வேண்டும். குளிர் காய்ச்சல் போன்ற உடல்நலக் குறைவு/தீவிர மூச்சு விடும் பாதிப்பு (ILI/SARI) உள்ளவர்களை சுகாதார மையங்களில் வைத்து கண்காணித்தல் போன்ற தீவிர கண்காணிப்பு இடையக மண்டலங்களில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

தனிநபர் சுகாதாரம், கைகளின் சுத்தம், மூச்சு விடும் முறை, முகக்கவசம் அணிதலை ஊக்குவித்தல் மற்றும் அதிகரிக்கப்பட்ட தகவல், கல்வி, தகவல் தொடர்பு (IEC) நடவடிக்கைகள் போன்ற தடுப்பு செயல்பாடுகள் மூலம், சமூக அளவிலான விழிப்புணர்வு சிறப்பான முறையில் ஏற்படுவதை உறுதி செய்தல் முக்கியமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக