ஞாயிறு, 24 மே, 2020

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். - DR.S.ராமதாஸ்


திருக்குரான் வழங்கப்பட்ட மாதத்தின் நிறைவாக இரமலான் திருநாளைக் கொண்டாடும் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். - DR.S.ராமதாஸ்

‘‘நோன்பு பாவங்களிலிருந்து காக்கின்ற கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்; தேவையற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்; யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் ‘நான் நோன்பாளி!’ என்று இருமுறை கூறட்டும்; என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அந்த இறைவன் மேல் ஆணையாக, நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாவிடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும். ‘எனக்காக நோன்பாளி தம் உணவையும், பானத்தையும், இச்சையையும்விட்டு விடுகிறார். அதற்கு நானே கூலி கொடுப்பேன். ஒரு நன்மை செய்வது அது போன்ற பத்து மடங்கு நன்மைகளை பெற்றுத் தரும்’’ என்று இறைதூதர் கூறியதாக இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.


தூய்மையாக இருக்க வேண்டும்; நல்ல வார்த்தைகளையே பேச வேண்டும்; எதிரிகளையும் மன்னிக்க வேண்டும்; அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்பது தான் இரமலான் நோன்பு போதிக்கும் பாடங்களாகும். இவை தான் இஸ்லாமிய மக்களை அவர்களின் வாழ்க்கை முறையில் புடம் போட்ட தங்கங்களாக மாற்றுகின்றன. 

மற்ற அனைத்து மதங்களையும் போலவே இஸ்லாமும் நன்மைகளை மட்டுமே போதிக்கிறது; அமைதியையும், ஈகையையும் வலியுறுத்துகிறது. இவை தான் உலகில் அமைதியையும், வளர்ச்சியையும் ஏற்படுத்தும். இதை  உணர்ந்து மக்களிடையே நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம் ஆகியவை பெருகவும், நாட்டில் அமைதி, வளம் ஆகியவை அதிகரித்து மக்கள் மகிழ்ச்சியாக வாழவும் பாடுபட உறுதியேற்றுக் கொள்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக