வியாழன், 28 மே, 2020

தமிழக அரசு – தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஜி.கே.வாசன்



தமிழக அரசு – தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சுமார் 7,700 செவிலியர்களை பணி வரன் முறை செய்ய பரிசீலனை செய்து செவிலியர்களின் வாழ்வு மேம்பட வழி வகுக்க வேண்டும். - ஜி.கே.வாசன்

தமிழக அரசு – தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கடந்த 2015 ஆம் ஆண்டில் மருத்துவ பணிகள் தேர்வாணையம் மூலம் சுமார் 11,000 செவிலியர்கள் போட்டித் தேர்வின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி புரிந்துவருகின்றனர். 

ஆனால் 2015 ல் பணியில் சேர்ந்த இவர்களில் இன்னும் சுமார் 7,700 பேர் பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருப்பதால் மன வேதனையில் இருக்கிறார்கள். அதாவது 2018 லேயே இவர்களை பணி நிரந்தரம் செய்திருக்க வேண்டும். ஆனால் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பாக 7,700 செவிலியர்களில் 70 சதவீதம் பேர் அரசு மருத்துவமனைகளிலும், 30 சதவீதம் பேர் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பணி நிரந்தரம் எப்போது என்ற எதிர்பார்ப்பில் தொடர்ந்து சேவை மனப்பான்மையோடு மக்கள் உடல்நலன் காக்கும் சுகாதாரப் பணிகளை செய்து வருகிறார்கள். 

மேலும் தற்போதைய கொரோனா வைரஸ் பரவலிலும், ஊரடங்கு காலத்திலும் தங்கள் இன்னுயிரை பணயம் வைத்து வேலைக்கு வருவதும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதும் பெரிதும் பாராட்டத்தக்கது. இவர்களின் பிரதான கோரிக்கையே சமவேலை செய்யும் போது சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது தான். 

அது மட்டுமல்ல பணிக்கு சேரும் போதே 2 வருடம் முடிந்த பிறகு தொகுப்பு ஊதியத்திலிருந்து காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்ற அரசின் உறுதியும் கேள்விக்குறியாக இருப்பதும் கவனத்துக்குரியது. அந்த தொகுப்பூதியமும் மாதம் தோறும் 5 ஆம் தேதிக்குள் வழங்கப்படவில்லை என்ற குறையும் உள்ளது. அதே போல தொகுப்பூதிய செவிலியர்களுக்கு உரிய மருத்துவப்படி, வீட்டு வாடகைப்படி, அகவிலைப்படி மற்றும் விடுப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கின்றனர். 

இப்படி பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையிலும் நாள் தோறும் தங்கள் பணி சேவைப்பணி என்று வேலைக்குச் செல்லும் செவிலியர்கள் தாயுள்ளம் கொண்டவர்கள். இந்நிலையில் அனைத்து செவிலியர்களுக்கும் தமிழக அரசு ஒரு மாத சம்பளம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்தும் அதுவும் இன்னும் முறையாக கிடைக்கவில்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர். 

மேலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் நேற்று முன் தினம் முதல் இம்மாதம் 30 ஆம் தேதி வரை கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுகிறார்கள். இத்தகைய அசாதாரண சூழலில் தமிழக அரசு முதற்கட்டமாக 2015 ல் பணியில் சேர்ந்து இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள செவிலியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்வது இப்போதைய கொரோனா காலத்தில் மட்டுமல்ல அவர்கள் உள்ளிட்ட அனைத்து செவிலியர்களுக்கும் வருங்கால வாழ்விற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் அமையும். 

மேலும் செவிலியர்களாக பணிபுரிபவர்கள் அனைவருக்கும் மாத ஊதியமும், ஊக்கத்தொகையும் காலத்தே கிடைத்திட தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே அரசு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள செவிலியர்களின் அர்பணிப்பான பணிக்கும், சேவை பணிக்கும், மக்கள் உடல்நலன் காக்கும் பணிக்கும் அங்கீகாரமும், மதிப்பும், மரியாதையும் கொடுக்கும் அரசு நம் தமிழக அரசு என்ற நோக்கத்தில் பணி வரன்முறை செய்ய பரிசீலனை செய்து செவிலியர்களின் வாழ்வு மேம்பட வழி வகுக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக