சனி, 23 மே, 2020

பிரதமர் மோடி மற்றும் மொரிஷீயஸ் பிரதமருக்கு இடையிலான தொலைபேசி உரையாடல்


பிரதமர் மோடி மற்றும் மொரிஷீயஸ் பிரதமருக்கு இடையிலான தொலைபேசி உரையாடல்

பிரதமர் திரு.நரேந்திர மோடி, மொரீஷீயஸ் பிரதமர் திரு. பிரவிந்த் ஜுகநாத்தை இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாடினார். உம்பன் புயலால் இந்தியாவில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து பிரதமர் ஜுகநாத் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் மொரீஷியசுக்கு உதவ ‘ஆபரேசன் சாகர்’ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியk கடற்படையின் ‘கேசரி’ கப்பல் மூலம் மருந்துகளையும், 14 உறுப்பினர் மருத்துவக்குழுவையும் அனுப்பி வைத்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

இந்தியாவுக்கும், மொரீஷீயசுக்கும் இடையே நிலவும் மக்களுக்கு இடையிலான உறவுகளை பிரதமர் நினைவு கூர்ந்தார். இந்தச் சிக்கலான தருணத்தில் தனது நண்பர்களுக்கு உதவும் கடமைப்பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளதாக அவர் கூறினார்.


பிரதமர் ஜுகநாத்த்தின் தலைமையில் மொரீஷியஸ் கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் திறம்பட செயல்பட்டதால், கடந்த பல வாரங்களாக அங்கு புதிய பாதிப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதற்காக பிரதமர் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டார். மொரீஷியஸ் தனது சிறந்த நடைமுறைகளை ஆவணப்படுத்தி, மற்ற நாடுகளுக்கு , குறிப்பாக தீவு நாடுகளுக்கு, இது போன்ற சுகாதாரச் சிக்கல்களுக்குத் தீர்வு காண உதவலாம் என பிரதமர் யோசனை தெரிவித்தார்.

மொரீஷியஸ் நிதிப்பிரிவுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகள்  உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். ஆயுர்வேத மருத்துவப் படிப்பில் மொரீஷியஸ் இளைஞர்களுக்கு உதவுவது பற்றியும் இருவரும் ஆலோசித்தனர்.

மொரீஷியஸ் மக்களின் நலம் மற்றும் ஆரோக்கியம் குறித்து தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட பிரதமர், இருநாடுகளுக்கும் இடையே நிலவும் தனித்துவமான நல்லுறவுகளைப் பராமரிப்பதற்காக அவருக்குப் பாராட்டையும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக