செவ்வாய், 26 மே, 2020

சுலபமான முறையில் கடன் வழங்கும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களை வலுப்படுத்தும் வகையில் அரசு பணியாற்றி வருவதாக திரு. நிதின் கட்கரி தெரிவித்தார்.


சிறு தொழில் பிரிவுகளுக்கு கடன் வழங்கும் புதிய நிதி நிறுவனங்களை அரசு தேடி வருகிறது - திரு. நிதின் கட்கரி

சிறு தொழில் நிறுவனங்களுக்கு நிதி ஆதாரம் வழங்கும் புதிய கடன் அளிக்கும் நிதி நிறுவனங்களை மத்திய அரசு தேடி வருவதாக மத்திய சிறு, குறு, நடுத்தரத்தொழில் , சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி கூறியுள்ளார். சிறு தொழில் பிரிவுகளுக்கு தற்போதைய நிலையில், சுலபமான முறையில் கடன் வழங்கும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களை வலுப்படுத்தும் வகையில் அரசு பணியாற்றி வருவதாக திரு. கட்கரி தெரிவித்தார்.

சிறு, குறு, நடுத்தரப் பிரிவுத் தொழில்கள் மீது கொவிட்-19 தொற்றின் தாக்கம் குறித்து கொல்கத்தா வர்த்தக சபை உறுப்பினர்கள் இடையே, காணொளி வாயிலாக உரையாற்றிய அவர், சவால்களைச் சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி தெரிவித்தார்.

உறுப்பினர்கள் இடையே உரையாற்றிய திரு. கட்கரி, கொவிட்-19 தொற்றுக்கு எதிராகவும், அதனால் ஏற்பட்டுள்ள நிலையற்ற பொருளாதாரத் தன்மைக்கு எதிராகவும் போராட்டம் மேற்கொண்டுள்ள நமக்கு இது சோதனையான காலம் என்று குறிப்பிட்டார்.


மார்ச் 2020 வரை 6 லட்சம் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட்டதாகவும், 2020 டிசம்பர் முடிய மேலும் கூடுதலாக 25 லட்சம் நிறுவனங்களை சீரமைப்பதை அமைச்சகம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தற்போதைய ஏற்றுமதி பங்கு 48 சதவீதம் என்றும், இது 60 சதவீதமாக உயரக்கூடும் என்றும் அவர் கூறினார். இந்த நிறுவனங்கள் மூலம் தற்போது 11 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகவும், மேலும் 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்ற தகவலையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

ஏற்றுமதியை அதிகரிக்கும் பணியில் அதிக கவனம் செலுத்துவது இப்போதைய அவசியத் தேவை என்று மத்திய அமைச்சர் குறிப்பிட்டார். நமது உற்பத்தி மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளைக் குறைத்து, அதனை பொருளாதார ரீதியில் வாய்ப்புள்ளதாக மாற்றுவது அவசியம் என்று அவர் மேலும் கூறினார். கடந்த மூன்று ஆண்டுகளின் ஏற்றுமதி, இறக்குமதி விவரங்கள் அடங்கிய இரண்டு கையேடுகளை வெளியிட தமது அமைச்சகம் திட்டமிட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியின் போது கேட்கப்பட்ட கேள்விகளும், கூறப்பட்ட யோசனைகளும் வருமாறு; சிறு, குறு, நடுத்தரத் தொழில் பிரிவுகளுக்கு தாமதமாகச் செலுத்தப்படும் தொகையை சரியான நேரத்தில் வழங்குவதற்கு கூடுதல் கவனம் தேவை,  இந்த நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் 4 சதவீத வட்டி மானியம் வழங்குவதைக் கவனிப்பது, வாராக்கடன் வகையில் சென்றுவிடாமல் அவற்றைப் பாதுகாப்பது, உத்தேச நடவடிக்கைகளை வங்கிகள் எவ்வாறு முறையாக நடைமுறைப்படுத்துகின்றன என்பதை கவனிப்பது போன்ற யோசனைகள் தெரிவிக்கப்பட்டன.

கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த திரு.கட்கரி, அரசிடம் இருந்து இயன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக