திங்கள், 25 மே, 2020

மேற்குவங்கத்தில் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மத்திய அரசு ஆய்வு.


மேற்குவங்கத்தில் உம்பான் சூறாவளி புயல் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஒருங்கிணைத்து வரும், மத்திய அமைச்சரவைச் செயலர் திரு ராஜீவ் கௌபா தலைமையிலான தேசிய நெருக்கடி நிலை மேலாண்மைக் கமிட்டி (என்.சி.எம்.சி.) நான்காவது முறையாக இன்று கூடியது.

மேற்குவங்கத்தில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானத்தில் இருந்து பார்வையிட்ட பிறகு பிரதமர் திரு மோடி அறிவித்தபடி ரூ.1000 கோடி உதவித் தொகை ஏற்கெனவே மாநிலத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிவாரண மற்றும் சீரமைப்புப் பணிகளுக்கு உதவியமைக்காக மத்திய அரசுக்கு மேற்குவங்கத் தலைமைச் செயலாளர் நன்றி தெரிவித்துள்ளார். மின்சார விநியோகம், தொலைத் தொடர்பு கட்டமைப்புகளை சீரமைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவை மீண்டும் அளிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மின்விநியோகக் கட்டமைப்பு சேதம் காரணமாக சில பகுதிகளில் முழுமையாக மின்சார விநியோகம் பாதிக்கப் பட்டுள்ளது. மின் கட்டமைப்பை சீர் செய்யும் பணிகளில், அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து வந்துள்ள குழுக்களும், மத்திய அரசின் குழுக்களும் ஈடுபட்டுள்ளன.


சாலைகளை சீர் செய்வதற்கு தேசிய பேரிடர் நிவாரணக் குழு மற்றும் மாநில பேரிடர் நிவாரணக் குழுக்களுடன் உதவி செய்வதற்கு கொல்கத்தாவுக்கு ராணுவ குழுக்களும் சென்றுள்ளன.

சீரமைப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைக் கேட்டறிந்த அமைச்சரவைச் செயலாளர், மின்சார விநியோகம், தொலைத்தொடர்பு சேவைகள், குடிநீர் விநியோகம் ஆகியவை முன்னுரிமை அடிப்படையில் விரைந்து சீர் செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மாநிலத்துக்கு வேறு எந்த உதவி தேவைப்பட்டாலும், அவற்றை வழங்க மத்திய ஏஜென்சிகள் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார். மாநிலத்திடம் இருந்து கோரிக்கை வந்தால் உதவி செய்வதற்காக, போதிய அளவுக்கு உணவு தானியங்கள் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சூறாவளியால் ஏற்பட்டுள்ள சேதாரங்களை மதிப்பிட மத்திய உள்துறை அமைச்சகம் விரைவில் மத்திய குழுவை அனுப்பும் என்றும் அவர் கூறினார்.

வேறு ஏதும் தேவைகள் இருந்தால் அவற்றை மேற்குவங்க அரசு குறிப்பிடலாம் என்று கூறிய அமைச்சரவைச் செயலாளர், மத்திய அமைச்சகங்கள் / ஏஜென்சிகள் மாநில அரசுகளுடன் நெருக்கமாக ஒத்துழைத்து, தேவையான அனைத்து உதவிகளையும் விரைந்து வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

என்.சி.எம்.சி. கூட்டத்தில் காணொளி மூலம் மேற்குவங்கத் தலைமைச் செயலாளரும் கலந்து கொண்டார். உள்துறை, மின்சாரம், தொலைத்தொடர்பு, உணவு, பொது விநியோகம், சுகாதாரம், குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றல் அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள்,  HQ IDS, NDMA மற்றும் NDRF மூத்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக