வியாழன், 28 மே, 2020

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 72.40 மீட்டர் நீளம் கொண்ட மிகப்பெரிய காற்றாலை இறகைக் (windblade) கையாண்டு புதியசாதனை


வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 26.05.2020 அன்று இந்திய தயாரிப்பில் உருவான 72.40 மீட்டர் நீளம் கொண்ட மிகப்பெரிய காற்றாலை இறகைக் (windblade) கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.

ஜெர்மன் நாட்டு கொடியுடன் எம்.வி. மரியா (M.V. Maria) என்ற இக்கப்பல் 151.67 மீட்டர் நீளமும், 8.50 மீட்டர் மிதவை ஆழமும் கொண்டது. இக்கப்பல் 26.05.2020 அன்று மதியம் 1.24 மணியளவில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் வ.உ.சி. கப்பல் சரக்குதளம் 3-ஐ வந்தடைந்தது.

72.40 மீட்டர் நீளமுடைய காற்றாலை இறகு இக்கப்பலின் 3 ஹைட்ராலிக் பளுத்தூக்கி இயந்திரங்கள் மூலம் கையாளப்பட்டது. இக்கப்பலின் ஏற்றுமதியாளர்கள் திருவள்ளூரிலுள்ள நோர்டிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆவர். மேலும் ஜெர்மனியிலுள்ள நோர்டிக்ஸ் ஏனர்ஜி GMBH என்ற நிறுவனத்திற்காக பெல்ஜியத்திலுள்ள ஆன்டோப் துறைமுகத்திற்கு இக்கப்பலின் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இக்கப்பலின் சரக்கு கையாளுபவர்கள் மற்றும் கப்பல் முகவர்கள் ஆஸ்பின்வால் அன் கோ, தூத்துக்குடி ஆவர், இந்தக் காற்றாலை இறகு, சென்னை அருகாமையிலுள்ள மாப்பேடு என்ற இடத்திலிருந்து வ.உ.சிதம்பரனார் துறைமுகம் வரை பிரத்தியேக லாரிகள் மூலம் NTC லாஜிஸ்டிக்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் எடுத்து வந்தார்கள்.

வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் திரு தா.கி. ராமச்சந்திரன், காற்றாலை உதிரிபாகங்களைக் கையாளுவதற்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்பு இட வசதிகளும், துறைமுகத்தில் அமையப் பெற்றுள்ளது என்று கூறினார். மேலும் சாகர்மாலா திட்டத்தின்கீழ் வ.உ.சிதம்பரனார் துறைமுக நிலங்களில் தொழிற்சாலைகள் துவங்குவதற்காக ‘Tuticorin SPEEDZ’ (Smart Port Employment & Economic Develotpment Zone) என்ற திட்டத்தின் மூலம் தொழிற்பூங்கா அமைப்பதற்கு தேவையான 1000 ஏக்கர் பரப்பளவு நிலத்தினை ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தொழிற்சாலைகள் உருவாவதற்கு தேவையான அனைத்து வசதிகள் இடம்பெறுவது மட்டுமல்லாமல் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட பொருட்களை குறைந்த போக்குவரத்து செலவில் உலக சந்தையில் விநியோகம் செய்யலாம் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக