வியாழன், 21 மே, 2020

அச்சு ஊடக உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்! - தொல். திருமாவளவன்


அச்சு ஊடக உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்! பிரதமர் மோடியிடம் விசிக வலியுறுத்துகிறோம்!
 - தொல். திருமாவளவன்

அச்சு ஊடக உரிமையாளர்கள் சார்பில் மத்திய அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ள நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு பிரதமர் மோடி அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

இன்று (21.05.2020) காலை 11 மணிக்கு சென்னையில் அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் அச்சு ஊடக உரிமையாளர்கள் சார்பில் இந்து  குழுமத்தின் இயக்குனர் திரு என்.ராம் , தினமலர் கோவை பதிப்பின் உரிமையாளர் ஆதிமூலம், தினகரன் குழுமத்தின் மேலாண்மை இயக்குனர் ஆர்.எம்.ஆர் ரமேஷ் ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.  அதில், இம்மூவருடன், தினத்தந்தி குழுமத்தின் மேலாண்மை இயக்குனர் திரு பாலசுப்பிரமணிய ஆதித்தன், எக்ஸ்பிரஸ் & தினமணி ஆகியவற்றின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் மனோஜ்குமார் சொந்தாலியா ஆகியோரும் கையொப்பமிட்டு இருந்தனர்.


அச்சு காகிதங்கள் மீதான சுங்க வரியை நீக்க வேண்டும்; நாளிதழ்களுக்கு மத்திய மாநில அரசுகளிடமிருந்து வரவேண்டிய விளம்பரக் கட்டண பாக்கிகளை உடனுக்குடன் கொடுக்க வேண்டும்; அரசு விளம்பரங்களுக்கான கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் முதலான கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்து இருப்பதாகவும் அந்த கோரிக்கைகளுக்கு விசிகவும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். கொரோனா  நோய்த்தொற்று பேரிடர் காலத்தில் அச்சு ஊடகங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில்  அவர்களது கோரிக்கைகள் நியாயமானவை என்பதால் அவற்றை விசிக முழுமையாக ஆதரிக்கிறது. அவற்றை நிறைவேற்ற மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று உறுதி அளித்தோம். அதனடிப்படையில்,பிரதமர் மோடி அவர்களுக்கு விசிக சார்பில் அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கடிதம் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

ஜனநாயக நாட்டில் ஊடகங்களின் பங்கு முக்கியமானதாகும். இந்தப் பேரிடர் காலத்தில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் , அரசாங்கத்தின் அறிவிப்புகளை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதிலும் அவை அளப்பரிய பங்களிப்பைச் செய்துகொண்டுள்ளன. 

எனவே, இந்த நியாயமான  கோரிக்கைகளை நிறைவேற்றி அச்சு ஊடகங்களைக் காப்பாற்ற அரசு உரிய  நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்துகிறோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக