வியாழன், 28 மே, 2020

கரோனாவால் புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு உதவியும், பாதுகாப்பும் தேவை! - கி.வீரமணி


கரோனாவால் புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு உதவியும், பாதுகாப்பும் தேவை! இதுகுறித்த மனுவின்மீது, ‘‘அது அரசின் கொள்கை முடிவு’’ என்று உச்சநீதிமன்றம் கூறலாமா?
 மக்களின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றமே இப்படிக் கூறலாமா? 
பிரபல 10 வழக்குரைஞர்களின் கடிதத்தினையடுத்து புலம் பெயர்வோர்மீது அக்கறை செலுத்தியது வரவேற்கத்தக்கது! - கி.வீரமணி

நமது ஜனநாயக அமைப்பில், நிர்வாகத் துறை, சட்டமியற்றும் துறை ஆகிய இரண்டு துறைகளின் அதிகார எல்லை, சட்டங்கள் - முடிவுகள்பற்றி ஆராய்ந்து தீர்ப்பளித்து அவர்களுக்குரிய கடமைகளை முறையாக நிறைவேற்ற வைக்கும் முழுப் பொறுப்பும் மூன்றாவது துறையான நீதித் துறைக்கு - குறிப்பாக உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றத்திற்கு உரிய கடமைகளாகும்.

உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்குமூலம்...

ஆனால், நாடு ‘கண்ணுக்குத் தெரியாத மிகப்பெரும் எதிரியான கரோனா  (கோவிட் 19) வைரசுடன்’ ஒரு தொடர் போரை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், நான்கு ஊரடங்குகள், வீட்டுக்குள் முடக்கம், பல லட்சக்கணக்கில் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்மையால் ஏற்பட்ட வறுமை, பசி - நோய் அச்சத்தையே பின்னுக்குத் தள்ளி, பசியுடனும், பிறந்த மண்ணுக்குச் சென்றாவது உறவுக்காரர்களுடன்  வாழும் முடிவை எடுத்துள்ளனர்.  

இதுவரை இரண்டாம் உலக யுத்தப் போரில் வெளிநாடுகளான பர்மா போன்ற நாடுகளிலிருந்தும், 1947 வட நாட்டில் மதக் கலவரங்களின்போது கால்நடையாக பல்லாயிரக்கணக்கில் அகதிகளாக குடும்பம் குடும்பமாக நடந்து சென்ற பழைய காட்சிகளையெல்லாம் வெகு ‘சின்னக் கோடு’களாக்கி விட்டதைப்போல, பல லட்சக்கணக்கில் சொந்த மாநிலத்திற்குக் கால்நடையாகப் புறப்பட்டுச் செல்லும் - கொடுமையான நிலையில், உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குமூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு அவர்கள் மனிதாபிமான அடிப்படையில் மட்டுமல்ல, நமது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஜீவாதார உரிமைகளுடன் (Fundamental Rights) வாழும் உரிமை படைத்த மக்களுக்குரிய வாழ்வாதாரப் பாதுகாப்புத் தர வேண்டுகோள் விடுத்து  வழக்குரைஞர்கள் சிலர் வாதாடியபோது,

அரசு சார்பில் வாதாடிய மத்திய அரசு வழக்குரைஞர் (Solicitor General) ‘‘எந்தத் தொழிலாளியும் சொந்த மாநிலம் செல்ல - யாரும் நடந்து செல்லவில்லை என்றும், இது ஒரு பொய்யான செய்தி (Fake News) என்றும்‘’  உச்சநீதிமன்றத்தில் தெரிவித்ததும் (31.3.2020), அதைக் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘‘அது அரசுகளின் கொள்கை முடிவு -  (Policy Decision) நாங்கள் இதற்காக உத்தரவு போட முடியாது’’ என்று கைவிரித்ததும், மக்களாட்சியின் கடைசி நம்பிக்கையும் காணாமற்போகச் செய்த ஒரு கருப்பு அவலமேயாகும்!

(பிறகு அடுத்து வந்த வேறு வழக்கில் சில நம்பிக்கை துளிர்க்கும் உச்சநீதிமன்ற கேள்விகளும் மெல்ல மெல்ல தலைகாட்டியுள்ளன என்பது சற்று ஆறுதலான செய்தி!)

மூத்த வழக்குரைஞர்களின் கடிதம் மூலம்...

கருணையையும், சட்ட அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்க வேண்டிய உச்சநீதிமன்றத்தின் மேற்காட்டிய போக்கு - ‘‘அரசின் கொள்கை முடிவு - நாங்கள் அதில் தலையிட்டு உத்தரவிட முடியாது’’ என்ற தவறானப் போக்கினைச் சுட்டிக்காட்டி,

உச்சநீதிமன்றத்தின் 10 மூத்த வழக்குரைஞர்கள் டில்லி, மும்பை போன்ற நீதிமன்றங்களில் வாதாடுபவர்கள் - மனிதநேயம் ஒளிர வேண்டிய நேரத்தில், பொறுப்பை தாங்களே தட்டிக் கழித்தல், இதற்கு ஆணை பிறப்பிக்க மனமில்லாமல், அலட்சியமான போக்கே என்ற தோற்றம் - இவைகளை காட்டிய நீதிப்போக்குபற்றி, மூத்த வழக்குரைஞர்கள் ப.சிதம்பரம், கபில்சிபல், பிரசாந்த் பூஷன், இந்திரா ஜெய்சிங், விகாஸ்சிங், இக்பால் சாவ்லா, நவ்ரேஸ் சீர்வாய், ஆனந்த்குரோவர், மோகன் கட்டார்கி, சித்தார்த் லூத்ரா, சந்தோஷ் பால், மகாலட்சுமி பாவ்னல், சி.யூ.சிங், ஆஸ்பில்சினாய், மிகிர்தேசாய், ஜானக் துவராகதாஸ், ரஜனி அய்யர், யூசூப் மக்ஹாலா, ராஜீவ் பாட்டீல், காய்த்ரி சிங், சஞ்சய் சிங்வி.

உச்சநீதிமன்றத்திற்கு, இவர்கள் கையெழுத்திட்டு அனுப்பிய  இக்கடிதம் சென்ற திங்கள்கிழமை (25.5.2020) கிடைத்த பிறகு, அடுத்த நாள் - 26.5.2020 (செவ்வாய்க்கிழமை) ஒரு வகையான நிவாரண நடவடிக்கைகளில் உள்ள போதாமை (inadequate - பல செயல்படாது விட்ட நிலைகள்)பற்றி இப்போது உச்சநீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது.
இன்று வியாழன் (28.5.2020) மீண்டும் விசாரணைக்குப் போடப்பட்டுள்ளது என்றும் செய்தி வெளிவந்துள்ளது.

பல லட்சக்கணக்கான புலம் பெயர்ந்த ஏழை தொழிலாளர்களின் வாழ்வாதார உரிமைகளை அலட்சியப்படுத்துதல் ஏற்கத்தக்கதா? அது அரசின் கொள்கை முடிவு தலையிட முடியாது என்பதா? அரசமைப்புச் சட்டத்தின் 142 ஆவது பிரிவினை அலட்சியப்படுத்தி- கவனிக்கத் தவறிய நீதி மறுப்பு ஆகும் என்பதை இந்த மூத்த வழக்குரைஞர்கள் சுட்டிக்காட்டியதற்கு நமது பாராட்டுதல்கள்.
சுதந்திரமாக இயங்க வேண்டியது  நீதித்துறை கடமை.

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை  (குறள் 541)

என்ற நிலையிலிருந்து, உச்சநீதிமன்றத்தின் போக்கு சரிகிறதோ என்ற எண்ணம் பரவலாக மக்களுக்கு உருவாகலாமா?

இராமர் கோவில் கட்ட அவசர அவசரமாக நாள்தோறும் விசாரித்து தீர்ப்பளித்தபோது தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய், ஒரு மாநிலங்களவை உறுப்பினராக ஓய்வு பெற்ற சில மாதங்களில், அரசின் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டார் - அதுவும் ஒரு பெரும் விமர்சனப் புயலுக்கிடையில்...

இதுவரை இதற்குமுன் எந்த ஒரு உறுப்பினர் பதவிப் பிரமாணம் எடுக்கும்போதும் அவையில் பலத்த எதிர்ப்புக் குரல்கள் எழுந்ததில்லை. ‘புதிய வரலாறு’ - முன்மாதிரி  - இதன்மூலம் உருவானது மகாவெட்கக்கேடு.  நாடாளுமன்றத்தின் வரலாற்றில் இதற்குமுன் இப்படி ஒரு பதிவு தேடினாலும் கிடைக்குமா என்பது சந்தேகமே!
இதற்கு முன்மாதிரி உள்ளது என்பதுதான்...

நீதிபதிகள் பதவி ஏற்கும்போது ‘without fear or favour’ என்று உறுதிமொழி வாசகத்தினைக் கூறித்தானே அரசமைப்புச் சட்டப்படி பதவி ஏற்கிறார்கள்.
பிறகு இராமர் கோவில் தீர்ப்பு போன்றவற்றில் யார் தீர்ப்பு எழுதினார் என்ற கையெழுத்து விவரம் காணவில்லையே!  அனைத்து நீதிபதிகளும் சேர்ந்தே கையெழுத்திட்டு உள்ளனர் என்பதுதான் இதற்கு ஒரே பதில். இதற்கு முன்மாதிரி Precedent உள்ளது என்பதும் மற்றொரு வியாக்கியானம்.

தொடரட்டும் உங்கள் நீதி காக்கும்
நெடிய பயணம்!

இப்படி நீதிப் போக்கு  - அதுவும் மக்களின் கடைசி நம்பிக்கையாக உள்ள  உச்சநீதிமன்றத்தின் இந்தப் போக்கு இப்படி இருப்பது மக்களுக்கு, ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையை - அதைவிட நீதித் துறையின் நடுநிலையை - சார்பற்ற பொதுத் தன்மையான நீதியின் ஆட்சியின்மீதுள்ள அசையாத நம்பிக்கையைக் காணாமற்போகச் செய்யாதா? ‘‘வேலிகளே பயிரை மேய்கிறதோ’’ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தலாமா?

மூத்த வழக்குரைஞர்களை வாழ்த்துகிறோம் - தொடரட்டும் உங்கள் நீதி காக்கும் நெடிய பயணம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக