திங்கள், 25 மே, 2020

சிற்பத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்! - தொல்.திருமாவளவன்



சிற்பத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்! தமிழக அரசுக்கு 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை! - தொல்.திருமாவளவன்

வரலாற்றுப் புகழ்வாய்ந்த மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறமுள்ள பகுதிகளில் சுமார் 2ஆயிரம் சிற்பக் கலைஞர்கள் சிற்பத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கொரோனா நோய்த்தொற்றுப் பேரிடர் காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை இல்லாததாலும், கோயில்களில் திருப்பணிகள் நிறுத்தப்பட்டு இருப்பதாலும் சிற்பக் தொழிலில் ஈடுபட்டுள்ள கலைஞர்கள் அனைவருமே வருமானமின்றிக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அமைப்புசாரா தொழிலாளர்களாகக் கருதி நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். 


கொரோனா பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்குத் தமிழக அரசு நிவாரண உதவிகளை அறிவித்து வழங்கி வருகிறது. அந்த வாரியத்தில் பதிவு செய்து கொள்ளாத தொழிலாளர்களுக்கும் கூட நிவாரணம் அளிக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். அதன்படி, மாமல்லபுரம் பகுதியில் சிற்பத் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற தொழிலாளர்களையும் அமைப்புசாராத் தொழிலாளர்களாகக் கருதி அவர்களுக்கும் அந்த நிவாரண உதவி வழங்குவதற்கு முன்வர வேண்டும். இது தொடர்பாக ஏற்கனவே மத்திய அரசின்கீழ் செயல்படும்  கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு வாரியத்தின் பிராந்திய ஆணையர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு 06.05.2020 அன்று பரிந்துரைக் கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கின்றார்.  நிவாரணம் பெறுவதற்குத் தகுதி வாய்ந்த தொழிலாளர்களுடைய முதல் பட்டியல் ஒன்றை  அவர் இணைத்து அனுப்பி வைத்திருக்கின்றார்.  அந்தப் பரிந்துரையையும் கவனத்தில் கொண்டு பதிவு செய்து கொள்ளாத சிற்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நிவாரணநிதி கிடைத்திட உரிய ஆணையை வழங்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக