வியாழன், 21 மே, 2020

பத்திரிக்கை துறையின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் - ஜி.கே.வாசன்


அரசாங்கங்களுக்கும், மக்களுக்கும் இணைப்புச் சங்கிலியாக செயல்படுகின்ற, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற பத்திரிக்கை துறையின் கோரிக்கைகளை 
மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று 
த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன். 
- ஜி.கே.வாசன்

நம் நாட்டில் பத்திரிக்கை துறை என்பது ஜனநாயகத்தின் 4 ஆவது தூண். மத்திய மாநில அரசுகளுக்கும் – மக்களுக்கும் இணைப்புச் சங்கிலியாக செயல்படுகின்ற, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற துறை பத்திரிக்கை துறை. 

பாராளுமன்றம், சட்டமன்றம் கூட சில காலங்கள் முடங்கிப்போகலாம். ஆனால் எக்காலக்கட்டத்திலும் – பத்திரிக்கை துறை இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும். 

அது தான் மக்களாட்சியின் உண்மையான உயிர் நாடி, மூச்சு, பேச்சு.
தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கை அமல்படுத்திக்கொண்டிருக்கிற இச்சூழலில் பத்திரிக்கை துறை பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. 


அதனுடைய செயல்பாடு குறைந்தும், சிரமத்திலும், நஷ்டத்திலும் தன்னுடைய பணியை நாட்டு மக்களுக்காக ஆற்றிக்கொண்டிருக்கிறது. 
எனவே பத்திரிக்கை துறை எதிர்கொண்டு வரும் பெரும் பிரச்சனைகளிலிருந்து அதனை விடுவிக்க வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமை. 
நான் நாடாளுமன்ற உறுப்பினராக - அடுத்த மாதம் டெல்லிக்கு செல்லும் போது – பாரதப் பிரதமரை நேரில் சந்தித்து - தமிழ்நாட்டின் பிரதான கோரிக்கைகளில் – பத்திரிக்கை துறை சார்ந்த கோரிக்கையை முதன்மையான கோரிக்கையாக கொடுத்து நிறைவேற்ற வலியுறுத்துவேன். 

மேலும் தமிழக முதல்வர், துணை முதல்வர் – ஆகியோருக்கு – பத்திரிக்கை துறையின் கோரிக்கைகளை அனுப்பி வைத்து நிறைவேற்ற வலியுறுத்துவேன்.

ஆகவே பத்திரிக்கை நிறுவனங்களின் அமைப்பு அரசாங்கங்களுக்கு அளித்துள்ள நியாயமான கோரிக்கைகளான பத்திரிக்கைகளை அச்சிடும் செய்தித்தாளுக்கான சுங்க வரியை ரத்து செய்ய வேண்டும், நிலுவையில் உள்ள விளம்பர பாக்கிகளை உடனடியாக வழங்க வேண்டும், பத்திரிக்கைகளுக்கான விளம்பரக் கட்டணத்தை 100 சதவீதம் உடனே உயர்த்த வேண்டும், அரசு அறிவிப்புகளை வெளியிடுவதில் அச்சு ஊடகங்களின் உபயோகத்தை அதிகரிக்க வேண்டும், அடுத்த 2 நிதியாண்டுகளுக்கு வரியில்லா விடுப்பு காலகட்டமாக அறிவிக்க வேண்டும் என்பனவற்றை – மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்றி பத்திரிக்கை துறை தொடர்ந்து இலாபகரமாக இயங்கிட உதவிட வேண்டும் என்பது தான் த.மா.கா வின் வேண்டுகோளாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக