திங்கள், 18 மே, 2020

கடன் மட்டும் மக்களுக்கு... கனிம வளங்கள் தனியாருக்கா? - டாக்டர்.K.கிருஷ்ணசாமி


கடன் மட்டும் மக்களுக்கு... 
கனிம வளங்கள் தனியாருக்கா? - டாக்டர்.K.கிருஷ்ணசாமி

கனிம வள மற்றும் தாது வளச் சுரங்கங்களை தனியார்களுக்கு ஏலம் விட முடிவெடுத்திருப்பது இடைப்பட்ட காலத்தில் தடுக்கப்பட்டிருக்கக்கூடிய கனிம வளம் கொள்ளையர்களை ஊக்குவிப்பதற்கு வாய்ப்பளித்து விடும். கனிம மற்றும் தாது வளங்களை பொருத்தமட்டிலும் கடந்த கால வரலாறுகள் மிகவும் கசப்பானவை. 

கரோனா முழுமுடக்கத்தால் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய இழப்பை ஈடு செய்ய அரசின் நிதி உதவியும், அரசின் நம்பிக்கையூட்டும் செயல்களுமே மீட்டெடுக்கும் வழிகளாகும். அதைவிட்டு விட்டு முற்றிலும் வேறு பாதைக்கு திரும்புவது புதிய பிரச்சினைகளை கொண்டுவர வழிவகுக்கும்.

ஒட்டுமொத்த இந்தியாவினுடைய அனைத்து கனிம, தாது வளங்களையும், விமான நிலையங்களையும் விரல் விட்டு எண்ணக்கூடிய பெரும் செல்வந்தர்கள் கொள்ளையடித்து செல்ல அனுமதி அளித்திருப்பது எவ்வித்தில் நியாயம்? கரோனா பாதிப்பிலிருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், உதவுவதற்கும் தானே 20 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டதாக சொல்லபட்டது? அந்த செயலுக்கும், நிலக்கரி மற்றும் தாது வளங்களையும், விமான நிலையங்களையும் சில தனி நபர்களுக்கு தாரை வார்ப்பதற்கும் என்ன தொடர்பிருக்கிறது? கடந்த இரண்டு மாத கால முழு முடக்கம் இந்தியாவின் முழு முகத்தை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறதே. நூற்றுக்கு 50 சதவிகித மக்கள் எந்தவிதமான சேமிப்பும் அற்றவர்களாகவே இருக்கிறார்கள் என்பது தானே உண்மை. பணிக்குச் செல்லவில்லையென்றால் ஒருவார காலம் கூட தாக்குப்பிடிக்க முடியாத நிலையிலையே 70 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இந்தியாவில் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் உள்ள இடைவெளி நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்ற ஆபத்தைக்கூட  இந்த அரசு உணரவில்லையா?

கடந்த காலங்களில் கனிம வளங்களை தனியாருக்கு தாரை வார்த்ததும், அதனால் அடிமட்ட அளவில் மக்களுக்கு பாதிப்புகளுமே பல மாநில அரசுகள் வீழச்சியடைய காரணமாக அமைந்திருக்கின்றன. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடுகள் தான் கடந்த காலங்களில் மத்திய ஆட்சியையும் பதம் பார்த்தது என்பதையும் மறந்து விடக் கூடாது. கடந்த ஆறு வருடங்களாக எந்த ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத மோடி அரசின் மீது  கனிம வளங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சிகளால் கரும்புள்ளிகள் உருவாகலாம், கறையும் படிய வாய்ப்பிருக்கிறது. 

எச்சரிக்கை செய்ய வேண்டியது எங்கள் கடமை.

கரோனாவிலிருந்து மக்களை காப்பாற்றுங்கள்! ஆனால், கனிம வளங்களை நாட்டு மக்களுக்கு விட்டு விடுங்கள்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக