சனி, 9 மே, 2020

ஒன்றிய அரசின் புதிய மின்சாரத் திருத்தச் சட்டமா? அதை மாநிலங்களில் திணித்து அவற்றின் உரிமைகளை முற்றாகப் பறிப்பதா?- தி.வேல்முருகன்


பொதுப்பட்டியலில் உள்ள மின்சாரத்தில், ஒன்றிய அரசின் புதிய மின்சாரத் திருத்தச் சட்டமா? அதை மாநிலங்களில் திணித்து அவற்றின் உரிமைகளை முற்றாகப் பறிப்பதா? - தி.வேல்முருகன்

கூட்டாட்சிக்கே வைக்கும் இந்த வேட்டு, உதய் மின் திட்டத்திற்கு அதிமுக கையெழுத்திட்டதால் வந்த வினையே தவிர, வேறில்லை! இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

ஒன்றிய அரசே, புதிய மின்சாரத் திருத்த மசோதாவை உடனடியாகத் திரும்பப்பெறு! அதிமுக அரசே, இதற்குத் துணைபோகாதே! எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

இந்திய அரசமைப்புச் சட்டம் ஜனநாயகம் மற்றும் சமத்துவத்தையே வலியுறுத்துகிறது. ஆனால் அதற்குத் தகுதியானவர்தான் அதனை நடைமுறைப்படுத்த முடியும் என்றார் அண்ணல் அம்பேத்கர். இந்த உண்மையை 2014க்குப் பிறகுதான் நாம் புரிந்துகொண்டோம். 2014இல் ஒன்றிய ஆட்சியைப் பிடித்த ஆர்எஸ்எஸ்-பாஜக நரேந்திர மோடி, ஜனநாயகம், சமத்துவத்தை மட்டுமல்ல; அண்ணல் அம்பேத்கர் யாத்த அரசமைப்புச் சட்டத்தையே ஓரங்கட்டுவதில்தான் முனைப்பாக உள்ளார்; கூட்டாட்சித் தத்துவத்திற்கே வேட்டு வைக்கும் விதமாக, மாநில உரிமைகளை முற்றாகப் பறிப்பதில் இறங்கியுள்ளார். 

நமது அரசியலமைப்பில் மாநிலப்பட்டியல், மத்தியப்பட்டியல், பொதுப்பட்டியல் என 3 வகைகளில் அதிகாரங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில்பொதுப்பட்டியலில் உள்ளவை மாநில அரசுகளுக்கும் ஒன்றிய அரசுக்குமான பொதுவான அதிகாரங்களாகும். ஆனால் நடப்பு அப்படியல்ல; பொதுப்பட்டியல் அதிகாரங்கள் அனைத்தையும் ஒன்றிய அரசே கையாளுகிறது. 

பொதுப்பட்டியலில்தான் மருத்துவம், கல்வி, மின்சாரம் முதலிய முதன்மையான, முக்கியமான அதிகாரங்கள் உள்ளன. இந்தக் கல்வி, மருத்துவம், மின்சாரம் இன்றி தனிமனிதனோ, சமூகமோ, ஏன் உலகமே இயங்காது என்பதுதான் உண்மை. ஆனால் இம்மூன்றையும் ஒன்றிய அரசே கபளீகரம் செய்துள்ளது. 

“நீட்” மற்றும் இதர நுழைவுத் தேர்வுகள், கவுன்சிலிங் என்று பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி, மலைவாசி மக்கள் மருத்துவம் மற்றும் கல்வியினின்றும் அப்புறப்படுத்தப்படுகிறார்கள். 
மின்சாரம் இன்றி வாழ்க்கையும் இல்லை; வாழ்வாதார சிறு, குறு, உறு தொழில்களும் இல்லை. அந்த மின்சாரத்தை விலையேறப்பெற்ற பொருளாக மாற்றவே “புதிய மின்சார திருத்தச் சட்டம்” என்பதைக் கொண்டுவரப் பார்க்கிறது மோடி அரசு. அதற்காக ‘மின்சார சட்ட திருத்த மசோதா - 2020’ஐ, இந்தக் கொரோனா சமயம் பார்த்து, கடந்த ஏப்ரல் 17 அன்று, மாநிலங்களின் கருத்தறிய என்று மோடி அரசு அனுப்பியது. இதற்குமுழு முதல் காரணமே, உதய் மின்திட்டத்தில் அதிமுக அரசு கையெழுத்திட்டதுதான். 

இதே மசோதாவை 2014 மற்றும் 2018இலும் மோடி அனுப்பி மாநிலங்கள்  அதைப் புறந்தள்ளின. இப்போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருப்பதாலேயே இதை முன்னெடுக்கிறார் மோடி.

இந்தப் புதிய மின்சாரச் சட்டத்தால், தமிழ்நாட்டில், விவசாயிகளின் இலவச மின்சாரத் திட்டத்துக்கும் ஏழைகளின் 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்துக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. நீண்ட நாள் கோரிக்கையான இந்த இலவச மின்சாரத்தைப் பெற தமிழக விவசாயிகள் மாபெரும் போராட்டமே நடத்த வேண்டியிருந்தது; அதில் 64 விவசாயிகள் தம் இன்னுயிரை இழந்தனர். கடைசியில் முதல்வர் கலைஞர் விவசாயிகளின் இலவச மின்சாரத் திட்டத்தையும், ஏழைகளின் 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தையும் கொண்டுவந்து சமூக நீதியை நிலைநாட்டினார். இதனால் சிறு  விவசாயம், கைத்தறி நெசவுத் தொழில்கள், ஏழை எளிய மக்கள் பயன் பெற்று வந்தனர். 

இதையெல்லாம் ஒழித்துக்கட்டவே ஒன்றிய அரசு இப்போது ‘மின்சார சட்ட திருத்த மசோதா - 2020’ஐ அனுப்பியுள்ளது.  இந்த மசோதாவில், மாநில மின்சார வாரியங்களைப் பிரித்து, வெறும் விநியோக நிறுவனங்களாக மாற்றும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. விநியோக நிறுவனங்களாக மாற்றுவது என்பது, தனியாருக்கே விநியோகிக்கும் உரிமையைத் தாரைவார்ப்பதாகும். அப்போது மின் கட்டணம் வசூலிக்கும் உரிமையும் மின் கட்டணத்தைத் தீர்மானிக்கும் அதிகாரமும் கூட தனியாருக்கே வந்துசேரும். ஆக, சேவைத் துறையாக இருந்துவரும் மின்துறை வர்த்தகத் துறையாகிவிடும் என்பது மட்டுமல்ல; மின் கட்டணமும் நம் கையை மீறி உயர்ந்துவிடும். 

பொதுப்பட்டியலில் உள்ள மின்சாரம் தொடர்பான அனைத்து அதிகாரங்களையும் ஒன்றிய அரசே அபகரித்துக்கொள்ளும் சர்வாதிகார, ஃபாசிசப் போக்கின் விளைவுதான் இந்த மின்சார சட்ட திருத்த மசோதா - 2020. இதைத் திருப்பி அனுப்புவதுடன், கண்டிக்கத்தக்க இந்த மசோதாவை அடியோடு புறந்தள்ளுகிறோம் என்று சாட்டையடியும் கொடுத்திருக்க வேண்டும் தமிழக அரசு. ஆனால் அந்த மசோதா வந்திருப்பதைக் கூட மக்களிடம் தெரியப்படுத்தாமல் இருக்கிறது அதிமுக அரசு. இப்படி சந்தேகத்திற்கு இடம்கொடாமல் அந்த மசோதாவைத் திருப்பிக் கடாச வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். இப்படிச் செய்து, உதய் மின்திட்டத்தில் செய்த பாவத்துக்கு பரிகாரம் தேடிக்கொள்ளுமாறும் வேண்டுகிறோம். 

பொதுப்பட்டியலில் உள்ள மின்சாரத்தில், ஒன்றிய அரசின் புதிய மின்சாரத் திருத்தச் சட்டமா? அதை மாநிலங்களில் திணித்து அவற்றின் உரிமைகளை முற்றாகப் பறிப்பதா? கூட்டாட்சிக்கே வைக்கும் இந்த வேட்டு, உதய் மின் திட்டத்திற்கு அதிமுக கையெழுத்திட்டதால் வந்த வினையே தவிர, வேறில்லை! இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்! 

ஒன்றிய அரசே, புதிய மின்சாரத் திருத்த மசோதாவை உடனடியாகத் திரும்பப்பெறு! அதிமுக அரசே, இதற்குத் துணைபோகாதே! எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக