மைக்ரோ சிறுபான்மை உயர்ஜாதியர் தவிர, பெரும்பான்மை பிற்படுத்தப்பட்டோருக்கு முதுநிலை மருத்துவப் படிப்பில் இடமில்லை என்கிறார் மோடி! - தி.வேல்முருகன்
இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்; விகிதாச்சாரப்படி, பிற்படுத்தப்பட்டோருக்கு இடம் வழங்கு என எச்சரிக்கிறோம்! - தமிழக வாழ்வுரிமைக் கட்சி!
முதுநிலை மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள் அபகரிப்பு! அதாவது சமூக நீதிக்கு மோடி வைத்த வேட்டு! நீட் நுழைவுத் தேர்வைத் திணித்து, பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடி, மலைவாசி, ஏழை எளிய, கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பை மறுத்த மோடி, தப்பித் தவறி நீட் தேர்வில் வெற்றி பெற்று எம்பிபிஎஸ் முடித்த பிற்படுத்தப்பட்ட மாணவருக்கு முதுநிலை மருத்துவம், அதாவது மருத்துவ மேற்படிப்பு படிக்க இடம் கிடையாது என்கிறார்.
இத்தனைக்கும் மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களில் 50 விழுக்காடு ஒன்றியத் தொகுப்புக்கு வழங்கப்படுகிறது. அப்படி தமிழ்நாட்டில் உள்ள இடங்கள் 1758இல் 50% அதாவது 879 இடங்கள் ஒன்றியத் தொகுப்புக்குப் போகிறது. இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்கிறார் மோடி.
இந்தியா முழுவதும் மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் மேற்படிப்புக்கான மொத்த இடம் 19,100. இதில் 50 விழுக்காடான 9,550 இடங்கள் ஒன்றியத் தொகுப்புக்கு; அதேபோல் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் மேற்படிப்புக்கான மொத்த இடம் 1352. இதில் 50 விழுக்காடான 676 இடங்கள் ஒன்றியத் தொகுப்புக்கு!
இப்படி ஒன்றியத் தொகுப்புக்கு அளிக்கப்படும் 9,550 மருத்துவ மேற்படிப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடாக 2,578 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் வெறும் 371 இடங்களே ஒதுக்கப்பட்டுள்ளது. இது 3.8 விழுக்காடே ஆகும். ஆனால் உயர் வகுப்பினருக்கு 635 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசமைப்புச் சட்டப்படி, இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இடங்களை மோடி கபளீகரம் செய்து, சமூக நீதியைப் புதைக்க குழி தோண்டியிருக்கிறார். ஆக 3 ஆண்டுகளாக, 2017-2018இல் 3101 இடங்கள், 2018-19இல் 2,429 இடங்கள், 2019-20இல் 2,207 இடங்கள் என பிற்படுத்தப்பட்டோருக்கான மொத்தம் 7,737 இடங்களை மோடி பறித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர் என்று சொல்லிக்கொள்ளும் மோடியே நாட்டின் பெரும்பான்மையினரான பிற்படுத்தப்பட்டோரின் நலனுக்கு விரோதமாக ஏன் செயல்படுகிறார்? இதற்கு பதில் சொல்வதென்றால்; (1) அவர் தான் பிற்படுத்தப்பட்டவர் என்று பச்சைப்பொய்யைச் சொல்லியிருக்க வேண்டும்; அல்லது (2) வர்ணாசிரம சங்கியான அவர், உயர்ஜாதி ஆர்எஸ்எஸ் ஃபாசிஸ்ட்களின் அடிவருடியாக, அவர்கள் இடும் கட்டளைகளை நிறைவேற்றும் எடுபிடியாக இருக்க வேண்டும்.
அதனால்தான் மைக்ரோ சிறுபான்மை உயர்ஜாதியர் தவிர, பெரும்பான்மை பிற்படுத்தப்பட்டோருக்கு முதுநிலை மருத்துவப் படிப்பில் இடமில்லை என்கிறார் மோடி! இதனை வன்மையாகக் கண்டிப்பதோடு, விகிதாச்சாரப்படி, பிற்படுத்தப்பட்டோருக்கு இடம் வழங்கு என எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக