வெள்ளி, 8 மே, 2020

சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு மூன்று மாத காலத்திற்கு உரிய மின் கட்டணத்தை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.- E.R.ஈஸ்வரன்


சிறு, குறு, நடுத்தர (MSME) தொழிற்துறையினரை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் அழைத்துப் பேசி குறைகள் கேட்டதற்கு நன்றியோடு பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினரும் அதனைச் சார்ந்து இருக்கின்ற தொழிலாளர்களும் அதிக அளவில் பாதிப்படைந்திருக்கிறார்கள். 

கொரோனா பாதிப்பால் திடீரென்று ஊரடங்கு அறிவித்ததால் முடிவடையும் தருவாயில் இருந்த உற்பத்திப் பொருட்களை கூட முடிக்க முடியாமல் அப்படியே விட்டுவிட்டார்கள். நிலைமை எப்படியிருக்குமென்று தெரியாமல் கொடுக்கப்பட்டிருந்த ஆர்டர்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. மீண்டும் தொழிற்சாலைகள் துவங்க வேண்டுமென்றால், பொருளாதார வசதிகள் இன்றி தவிக்கிறார்கள். வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களையும் ஊரடங்கு முடியும் தருவாயில் ரயிலேத்தி அனுப்புவதால் வேலைக்கு ஆட்களும் இல்லை. 

இந்த பிரச்சனைகளையெல்லாம் கேட்க முதலமைச்சர் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் சார்ந்த சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசவே இல்லை. பெரு முதலாளிகளை அழைத்துப் பேசிய முதல்வர் சிறு குறு தொழிலில் இருப்பவர்களை, 50 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை கொடுப்பவர்களை அழைத்து பேசாதது வருத்தமளிக்கிறது. பலமுறை கோரிக்கைகள் வைக்கப்பட்டும் முதலமைச்சர் செவிமடுக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் சிறு, குறு, நடுத்தர (MSME) தொழிற்துறையினரை அழைத்து பேசி குறைகளைக் கேட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கேட்டதோடு மட்டுமில்லாமல் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்திருப்பதை வரவேற்கின்றோம். 

முக்கியமான கோரிக்கையாகிய சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு மூன்று மாத காலத்திற்கு உரிய மின் கட்டணத்தை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். இதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு மின்கட்டணத்தை தள்ளுபடி செய்து இருப்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக