சனி, 16 மே, 2020

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினர், இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் சென்னை பன்னாட்டு மையம் ஆகிய அமைப்புகள் சார்ந்த தொழில் முனைவோரிடையே எடப்பாடி K. பழனிசாமி உரை


குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினர், இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் சென்னை பன்னாட்டு மையம் ஆகிய அமைப்புகள் சார்ந்த தொழில் முனைவோரிடையே 15.5.2020 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் ஆற்றிய உரை

உலகத் தொற்று நோயான கொரோனா வைரஸ் பரவல் சமீப காலங்களில் மனித குல வரலாற்றிலேயே மிகப்பெரிய, சவாலான பேரிடராக உள்ளது. உலகெங்கும் லட்சக்கணக்கில் மக்கள் பாதிப்புக்குள்ளாகி, பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உலகப் பொருளாதாரத்திலும் இதன் தாக்கம் மிகப் பெரிய அளவில் உள்ளது. 

நமது தமிழ்நாட்டிலும் இந்நோய் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

மக்களைக் காப்பதையே ஒரே நோக்கமாகக் கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, இந்நோயை எதிர்த்துப் போராடுவதற்கான அனைத்து கட்டமைப்புகளையும் திறம்பட உருவாக்கியுள்ளது. மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், பிற அரசு துறை பணியாளர்கள், தொழில் துறையினர் மற்றும் பொதுமக்கள் என அனைவருடனும் இணைந்து, அரசு நோய்த் தடுப்பில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இச்சூழலில், கொரோனா நோய் தடுப்புக்குத் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை தமிழ்நாட்டில் தயாரிக்க ஊக்கமளிக்கும் வகையில், சிறப்பு சலுகைகளை நான் அறிவித்திருந்தேன். அதன் விளைவாகவும், தொழில் முனைவோரின் சிறப்பான முயற்சிகளின் விளைவாகவும், இன்றைக்கு சுமார் 1500 நிறுவனங்கள் இப்பொருட்களின் உற்பத்தியை துவங்கி இந்தியா முழுவதும் வழங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த ஒரு அவசரச் சூழலிலும், பேரிடரிலும் நாட்டிற்கே துணையாக இருப்பது தமிழ்நாடு. குறிப்பாக நம் மாநில தொழில் துறையினரின் திறன் இதன் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது

அரசின் நடவடிக்கைகளுக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக தொழில் துறையினர் பலர் மனமுவந்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பெருமளவில் நிதியுதவிகள் வழங்கியுள்ளீர்கள். இதற்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் அதே நேரத்தில், மக்களின் வாழ்வாதாரத்திற்கான பல்வேறு அடிப்படை உதவிகளையும் அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அதன் அடுத்தகட்டமாக, பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தற்போது படிப்படியாக தளர்த்தி வருகிறது.

 ஊரடங்கு காலத்திலும் கூட, தொழில் நிறுவனங்கள் தங்களது முக்கியமான இயந்திரங்களின் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள, தகுந்த அனுமதிகளை வழங்கிய ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே. மேலும், அவசர காலத்தில் தேவைப்படும் பொருட்கள் உற்பத்தி, பத்து வகையான தொடர் செயல்பாட்டுத் தொழிற்சாலைகளின் இயக்கம் ஆகியவற்றையும் அரசு அனுமதித்திருந்தால்.

ஊரடங்கை படிப்படியாகத் தளர்த்துவதற்காக, அரசு அலுவலர்கள், பொது சுகாதார வல்லுநர்கள், தொழில் துறையினர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த வல்லுநர் குழு ஆய்வு செய்து வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டன.

தற்போது, சென்னை தவிர்த்து தமிழ்நாட்டின் பிறபகுதிகளில் உள்ள நிறுவனங்கள் செயல்படத் துவங்கியுள்ள நிலையில், அனைத்து தொழிற்சாலைகளும் அரசு அளித்த பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட்டு வருவதைப் பாராட்டுகிறேன். சூழ்நிலையைப் பொருத்து மேலும் தளர்வுகளை அரசு படிப்படியாக வழங்கும். தொழில் துறையினர் விழிப்போடு இருந்து, நோய் பரவலைத் தடுத்து, தகுந்த பாதுகாப்புடன் உற்பத்தியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நேரம் இதுவாகும்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நிவாரணம் வழங்குவதற்காக, பிணை சொத்தின்றி உடனடிக் கடன் வழங்கும் திட்டத்திற்காக 200 கோடி ரூபாயை ஒதுக்கி, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) மூலம், கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டம் (CORUS) திட்டத்தை 31.3.2020 அன்று அறிவித்திருந்தேன். இத்திட்டம் மூலம் இதுவரை 799 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் 102 கோடி ரூபாய் அளவிற்கு கடன் உதவி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கடன் வழங்க, சிட்பி (SIDBI) மூலம், தேவையான நிதியினை தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்திற்கு ஒதுக்கிட வலியுறுத்தி மத்திய நிதியமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு நிவாரணம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கும், மத்திய அமைச்சர் திரு. நிதின் கட்கரி அவர்களுக்கும் கடிதங்கள் எழுதியுள்ளேன். அதன் விளைவாக, மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.

இச்சலுகைகளை தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பெற்று பயன்பெறுவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அவற்றை ஊக்குவித்திட, தலைமைச் செயலாளர் மற்றும் துறை செயலாளர்களுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். மாநில அளவிலான வங்கிகளின் கூட்டத்தைக் கூட்டி, இத்திட்டங்களின் செயல்பாடுகளை முடுக்கிவிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

கொரோனா வைரஸ் பரவல், உலகப் பொருளாதாரச் சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடம் பெயர முடிவு செய்துள்ளன. இது போன்ற சோதனையான தருணங்கள்தான் பல வரலாற்றுத் திருப்பங்களை ஏற்படுத்தித் தரும். எனவே, இடம்பெயரும் நிறுவனங்களை, தமிழ்நாட்டிற்கு ஈர்க்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள, தலைமைச் செயலாளர் தலைமையில், அரசு அலுவலர்கள், ஜப்பான், கொரியா, சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் தைவான் ஆகிய நாடுகளைச் சார்ந்த தொழில் கூட்டமைப்பினர் அடங்கிய சிறப்பு பணிக் குழுவை ஏற்படுத்தி உள்ளேன்.

கொரோனா பாதிப்புக்குப் பின், நீண்டகால நோக்கில், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மறுகட்டமைப்பு செய்திடும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் டாக்டர்.சி. ரங்கராஜன் அவர்களின் தலைமையில், பொருளாதார நிபுணர்கள், தொழில் முனைவோர், அரசு அலுவலர்கள் அடங்கிய உயர்மட்ட குழு ஒன்றையும் அமைத்துள்ளேன்.

தொழில்துறையினர் அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உள்ளீர்கள். இக்கூட்டத்திலும் பல கருத்துக்களைத் தெரிவிக்க உள்ளீர்கள். மாநில அரசின் நிதிநிலை மற்றும் அதிகார வரம்பிற்கு உட்பட்டு, இக்கோரிக்கைகளை அரசு கனிவுடன் பரிசீலிக்கும் என்பதை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

இக்காலத்தில், தொழில் துறையைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு அரசின் செயல்திட்டமாக நான்கு முக்கிய இனங்களில் கவனம் செலுத்துமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் நான் அறிவுறுத்தியுள்ளார்.

  • தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து, தற்போதைய பாதிப்பிலிருந்து மீட்டெடுத்தல்.
  • புதிய முதலீடுகளை ஈர்த்தல்.
  • அரசு அனுமதிகள் மற்றும் நடைமுறைகளை மேலும் எளிதாகி, விரைவாக ஒப்புதல் வழங்குதல்.
  • கடன் வழங்கும் நடைமுறைகளை எளிதாக்கி, தொழில்களுக்கு தேவையான பணப்புழக்கத்தை அதிகரித்தல்.
மேலும்,

  • தொழில் முனைவோர் என்னை நேரில் சந்தித்து பேசவேண்டுமென்று விரும்பினால், 24 மணிநேரத்தில் அதற்கு நேரம் ஒதுக்கித் தரப்படும். அதே நாளில் தலைமை செயலாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் தங்களை சந்திப்பார்கள்
  • மருத்துவம், பாதுகாப்பு, மின்சார வாகனங்கள், ESDM மற்றும் ஜவுளி போன்ற துறைகளுக்கு ஒரு சிறப்பு தொகுப்பு உருவாக்கப்படும்.

இச்செயல்பாடுகளில் முனைப்புடன் ஈடுபடுவதன் மூலம், புதிய தொழில்கள் மற்றும் ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தொழில்கள் மேலும் சிறப்புடன் செயல்படவும், கொரோனா வைரஸ் நமக்கு இட்டுள்ள சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளவும் இயலும் என்பதில் ஐயமில்லை.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் தொழில்கள் தொடங்க உள்ளதால், அரசின் விதி முறைகளை முழுமையாக கடை பிடித்து, தொழில் வளர்ச்சி மற்றும் பணிப் பாதுகாப்பை, உறுதி செய்திடும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றிட உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

தொழில் முனைவோருக்கும், தொழில் துறையினருக்கும் தமிழ்நாடு அரசு என்றைக்கும் பாதுகாப்பு அரணாக இருந்து, தொழில் வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக