செவ்வாய், 7 ஜூலை, 2020

ஒன்றிய அரசின் வழிகாட்டும் நெறிமுறைகளுக்கும் எதிராக நடந்து, தான் மோடிக்கு எடுபிடிதான் என்கிறதா எடப்பாடி அரசு? - தி.வேல்முருகன்


நீதிமன்றம் பிணை வழங்கிய பிறகும், வெளிநாட்டு முஸ்லிம்களைச் சிறையிலேயே வைத்திருப்பு!  ஒன்றிய அரசின் வழிகாட்டும் நெறிமுறைகளுக்கும் எதிராக நடந்து, தான் மோடிக்கு எடுபிடிதான் என்கிறதா எடப்பாடி அரசு? - தி.வேல்முருகன்

இதனை வன்மையாகக் கண்டிப்பதோடு, வெளிநாட்டு முஸ்லிம்களின் வழக்கை முடித்துவைத்து, அவர்களைத் தம் சொந்த நாடு செல்லவிடுமாறு வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! 

வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்திருந்த முஸ்லிம்கள் பலர், இங்கு கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் முடக்கப்பட்டார்கள். 
சில மாநிலங்கள் அவர்களைக் கைது செய்தன. சில மாநிலங்கள் கைது செய்த அவர்களை விடுவித்துவிட்டன. சில மாநிலங்கள் அவர்களைக் கைது செய்யாமல் தனி இடங்களில் தங்க வைத்தன. பெங்களூரூவில் ஹஜ் இல்லத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டார்கள். ஹைதராபாத்தில் பள்ளிவாசல்களில் தங்க வைக்கப்பட்டார்கள். டெல்லியில் 10 தனியிடங்களில் தங்க வைக்கப்பட்டார்கள். 

மும்பையிலோ மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக, தங்கள் நாட்டுத் தூதரகங்களிடமே வெளிநாட்டு முஸ்லிம்கள் ஒப்படைக்கப்பட்டார்கள். ஆனால் தமிழ்நாடோ சட்டவிரோதமாக, ஒன்றிய அரசின் வழிகாட்டும் நெறிமுறைகளுக்கும் எதிராக அவர்களிடம் நடந்து கொண்டது, நடந்தும் கொள்கிறது. இந்தோனேசியா, பிரான்ஸ். மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 9 நாடுகளிலிருந்து வந்த 129 முஸ்லிம்கள் அவர்கள். அவர்களில் 12 பெண்கள். இவர்கள் மீது 15 காவல்நிலையங்களில் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளது.  

முதலில் அனைவரும் சென்னை புழல் சிறையில் உள்ள சிறார் சிறையில் அடைக்கப்பட்டனர். பிறகு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கிளை சிறைக்கு மாற்றப்பட்டார்கள். இத்தனைக்கும் அந்த சைதாப்பேட்டை கிளைச் சிறை வெளிநாட்டினரை அடைக்கும் சிறை அல்ல. இவர்களை பிணையில் விடுவிக்கக் கோரி மனு செய்யப்பட்டது. அப்படி 12 வழக்குகளில் கைது செய்யப்பட்ட 98 வெளிநாட்டினருக்கு பிணை வழங்கப்பட்டது. அவர்களை, மாநகராட்சி ஆணையரிடம் தங்கள் இருப்பிடத்தைத் தெரிவித்துவிட்டு சென்னைக்குள் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் சொந்த பிணையில் விடுவிக்க உத்தரவிட்டன நீதிமன்றங்கள். 

ஆனால் அப்படி விடுவிக்காமல், சென்னை புழல் சிறை வளாகத்தில் உள்ள சிறார் சிறையில் கொண்டுபோய் அடைத்தது தமிழக அரசு. அந்தச் சிறார் சிறையை, விசா விதிமுறைகளை மீறும் வெளிநாட்டினரைத் தடுத்து வைக்கும் சிறப்பு முகாம் என்று அறிவிக்கிறது. இது அப்பட்டமான விதிமீறலாகும்.தடுப்பு அல்லது சிறப்பு முகாம்களுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளை 2019 ஜனவரி 9இல் மாநில அரசுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது ஒன்றிய அரசு. அதில் இச்சிறப்பு முகாம்கள் சிறை வளாகத்திற்குள் இருக்கக் கூடாது என்று தெளிவாக உள்ளது. மேலும் அவர்களுக்குத் தனி சமையற்கூடங்களில் உணவு தயாரிக்கப்பட வேண்டும் என்றும் உள்ளது. 

ஆனால் பிணையில் விடுவிக்கப்பட்ட அந்த வெளிநாட்டு முஸ்லிம்களுக்கு புழல் சிறை உணவே வழங்கப்படுகிறது. இடவசதி, காற்று-வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகள் அங்கு இருக்க வேண்டும். ஆனால் ஒரே ஒரு கழிப்பறையுள்ள இடத்தில் 8 பெண்கள் உட்பட 98 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். ஆக, தடுப்பு அல்லது சிறப்பு முகாம்களுக்கான ஒன்றிய அரசின் நெறிமுறைகளை மீறி கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பிணையில் விடுவிக்கப்பட்ட அந்த வெளிநாட்டு முஸ்லிம்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

மீதி 4 பெண்கள் உட்பட 31 வெளிநாட்டினரின் வழக்கில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கடந்த ஜூன் 12இல் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் அவர்களுக்கும் பிணை கிடைத்தது; அவர்களை புழல் சிறப்பு முகாமில் வைப்பது சரியில்லை; சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள அரபிக் கல்லூரியிலோ அல்லது வேறு நல்ல இடத்திலோ தங்க வைக்கலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, அவர்கள் கொரோனா பரப்பியதற்கான ஆதாரம் இல்லை என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. அவர்கள் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தால் அவர்கள் வழக்கை முடித்துவைத்து, சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு உதவிட வேண்டும் என்றும் தெளிவாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 

ஆனால் நீதிமன்றத் தீர்ப்பை மாத்திரமல்ல, சட்டத்தையே மீறி, கொரோனா உள்ள புழல் சிறைவில் அவர்களை அடைத்து வைத்திருக்கிறது எடப்பாடி அரசு. 
கொரோனா பாதிப்பில் உலகில் மூன்றாவது இடத்தில் இந்தியா என்றால், கொரோனா பாதிப்பில் உலக நகரங்களில் இரண்டாவது இடத்தில் சென்னை, இந்தியாவிலும் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு என்பதுதான் உண்மை நிலை. 

ஆனால் இதையெல்லாம் மறைத்து, பழியை முஸ்லிம்கள் மீது போடும் மோசடி நோக்கில், மோடியின் சொல்படி எடுபிடி எடப்பாடி அரசு புழல் முகாமில் அடைத்துள்ளது. நீதிமன்றம் பிணை வழங்கிய பிறகும், வெளிநாட்டு முஸ்லிம்களைச் சிறையிலேயே வைத்திருப்பு! 

ஒன்றிய அரசின் வழிகாட்டும் நெறிமுறைகளுக்கும் எதிராக நடந்து, தான் மோடிக்கு எடுபிடிதான் என்கிறதா எடப்பாடி அரசு? 

இதனை வன்மையாகக் கண்டிப்பதோடு, வெளிநாட்டு முஸ்லிகளின் வழக்கை முடித்துவைத்து, அவர்களைத் தம் சொந்த நாடு செல்லவிடுமாறு வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக