ஞாயிறு, 17 மே, 2020

மே 31 நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு வரைமுறைகளுடனும், தளர்வுகளுடனும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்யப்படுகிறது.


பல்வேறு கட்ட ஆலோசனை முடிவுகளின் அடிப்படையில், தமிழகத்தில் 31.5.2020 நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு வரைமுறைகளுடனும், தளர்வுகளுடனும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்யப்படுகிறது. 

நீலகிரி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலா தலத்திற்குவெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment Zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் தனியார் மற்றும் வியாபார நிறுவனங்களின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளுக்காக மட்டும் குறைந்தபட்சம் பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதி. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத் தாள்களை திருத்தும் பணி மட்டும் நடைபெற விலக்களிக்கப்படுகிறது.

வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்புவதற்கு முடியாமல் தவித்த தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் மத்திய அரசின் "வந்தே பாரத்" திட்டத்தின் கீழ், 10 சிறப்பு வானூர்திகள் மூலம் 1,665 நபர்களும், 2 கப்பல்கள் மூலம் 264 நபர்களும் தமிழ்நாடு திரும்பியுள்ளனர்.


வெளிநாட்டிலிருந்து தமிழ்நாடு திரும்ப விரும்பும் மேலும் பல தமிழர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து அவர்களையும் அழைத்து வர உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர்,நாகப்பட்டினம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு மட்டும், அந்தந்த மாவட்டங்களுக்குள் போக்குவரத்து இயக்கத்திற்கு மட்டும் TN e-pass இல்லாமல் இயக்க தளர்வு அளிக்கப்படுகிறது. மாவட்டத்திற்குள் நோய் தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கும், அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் சென்று வர போக்குவரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு சென்றுவர TN e-pass பெற்று செல்லும் தற்போதைய நடைமுறையே தொடரும். மாவட்டங்களுக்குள் போக்குவரத்து அனுமதிக்கப்படாத 12 மாவட்டங்களில் TN e-pass உடன் மருத்துவ சிகிச்சைக்கு சென்று வர பயன்படுத்தப்படும் டாக்ஸி, ஆட்டோவுக்கு விலக்கு உண்டு.

புதுடில்லியிலிருந்து இந்த வாரம் 2 முறை ராஜதானி விரைவு இரயில் இயக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் வாரத்திற்கு 2 நாட்கள் இந்த விரைவு இரயில் இயக்க மத்திய அரசின் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக