ஞாயிறு, 17 மே, 2020

‘நீட்'டினால் ‘தகுதி திறமை' வளரும் - ஊழல் ஒழியும் என்று சொன்னதெல்லாம் உண்மையல்ல என்று இப்பொழுது நிரூபிக்கப்படவில்லையா? - கி.வீரமணி


ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூகநீதியை ஒழிப்பதே இதன் பின்னணி!
‘நீட்'டினால் ‘தகுதி திறமை' வளரும் - ஊழல் ஒழியும் என்று சொன்னதெல்லாம் உண்மையல்ல 
என்று இப்பொழுது நிரூபிக்கப்படவில்லையா?
பெரியார் பிறந்த சமூகநீதி மண் இதனை முறியடித்தே தீரும்! - கி.வீரமணி

சமூகநீதியை ஒழிப்பதே இந்த ‘நீட்’!

‘நீட்’ தேர்வு என்பது ஒரு சூழ்ச்சி வலை! ஒடுக்கப்பட்ட மக்கள், கிராமப் புறத்தி லிருந்து, முதல் தலைமுறையிலிருந்து படிக்க வரும் அடித்தட்டு ஏழை, எளிய மக்கள் இவர்களைத் தடுத்து, உயர்ஜாதி மனுதர்ம ஆதிக்கத்தை நிலை நிறுத்துவது! நீதிக்கட்சி என்ற திராவிடர் இயக்க ஆட்சி - ஒரு நூற்றாண்டுக்கு முன்னே கொண்டு வந்த சமூகநீதியை ஒழிப்பதே இந்த ‘நீட்’!

மாணவர்களுக்குள் ‘தகுதி திறமை'யை நன்கு வளர்க்கவும், ஏற்கெனவே பல தனியார் மருத்துவக் கல்லூரிகள் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு அதிக நன் கொடை  வாங்கிக் கொள் ளையடிப்பதைத் தடுக்கவுமே கொண்டு வரப்பட்டது தான் ‘நீட்’ என்று உச்சநீதி மன்றத்தையும் நம்ப வைத்தோ அல்லது அந்த உணர்வுள்ளவர்களுக்கேற்ப சீராய் வினையும் கொண்டுவந்தோ, ‘நீட்' தேர்வை உறுதிப்படுத்திய போதே, முதன்முதலில் இதற்கு எதிராகக் குரல் கொடுத்த இயக்கம் திராவிடர் கழகம் - இதனையொட்டி திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் கூட்டணிக் கட்சிகளும் குரல் கொடுத்தன.

‘நீட்’ தேர்வை எதிர்த்து சட்டப்படி ஓராண்டு விலக்கும் பெற்றார் முதலமைச்சர் ஜெயலலிதா!

தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ‘நீட்’ தேர்வை எதிர்த்துச் சட்டப்படி ஓராண்டு விலக்கும் பெற்றார் என்பது நினைவூட்டப்படவேண் டிய ஒரு முக்கிய செய்தியாகும்.
அதன்பின் அமைந்த அ.தி.மு.க. அரசு ‘நீட்’டை எதிர்ப்பதாக ஒருபுறம் கூறிக் கொண்டே, வலிமையான எதிர்ப்பைக் காட்டாமல், ஒப்புக்கு நடந்துகொண்டு, மறுபுறம் ‘நீட்’ தேர்வுக்கு நாங்களும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறோம் என்றும் கூறி, இரட்டை வேடம் போடவும், தயங்காத ஒரு வேதனையான நிலைப் பாட்டைக் கொண்டிருக்கிறது!

உண்மைகள் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளன!

ஆனால்,  ‘நீட்’ அறிவிக்கப்பட்ட நாள் முதலே இதனை எதிர்த்து  நாம் தமிழ் நாட்டில் பட்டிதொட்டியெல்லாம் செய்த பிரச்சாரத்தினால் - ‘நீட்' பற்றிய பெற்றோர்கள் பலரின் முதற்கட்ட ஆதரவு மனநிலையும் பனி விலகியது போல விலகி, இப்போது அதுபற்றிய பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளன!

ஓய்வு பெற்ற மூத்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் டாக்டர் ஜஸ்டிஸ் ஏ.கே.ராஜன், ஜஸ்டிஸ் அரிபரந்தாமன் போன்றவர்கள் பற்பல கட்டுரைகள், உரைகள்மூலம் இந்த ‘நீட்’ தேர்வு என்ற திட்டம், அரசமைப்புச் சட்ட விதிகளுக்கு முரண் - பல்கலைக் கழகங்களுக்கும், மத்திய அரசுகளுக்கும் உள்ள அதிகாரங்களை, ‘தானடித்த மூப் பாக’ப் பறிக்கும் செயல் என்பதைத் தமிழ்நாட்டில் விளக்கினார்கள்!


தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட்டிலிருந்து விலக்குக் கோரி ஒருமனதாக நிறைவேற்றப் பட்ட இரண்டு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் மறுக்கப்பட்ட செய் தியேகூட பல காலம் வெளிச்சத்துக்கு வராமல் இருந்து, பிறகே உயர்நீதிமன்றத் தினால் வெளியே வந்த நிலை ஏற்பட்டது!

மாநில உரிமைக்கும் எதிரானது - ஏழை, எளியவர்களுக்கும் எதிரானது

உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்குரை ஞரும் அரசமைப்புச் சட்ட நிபுணருமான ராஜீவ் தவான் அவர்கள் ‘நீட்’ - அரசியல் சட்ட விரோதம் (Anti-Constitution), கூட்டாட்சி மாநில உரிமைக்கு எதிர் (Anti-Federal) ஏழை, எளியவர்களுக்கு எதி ரானது (Anti People) என்று தெளிவாக எழுதினார்.

‘நீட்’ தேர்வுகள் நடந்த இந்த மூன்று ஆண்டுகளில் அதன் நோக்கமாக சொல்லப்பட்டடவை நிறைவேறியதா? மாணவர்களின் உண்மையான திறமை - அறிவுக் கூர்மை இதன்மூலம் வெளியாகிறது என்பதும், ஊழலை ஒழிக்கும் ‘சர்வரோக சஞ்சீவி’  இது என்பதும் எத்தகைய கடைந்தெடுத்த பித்தலாட்டங்கள் என்பதும் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்துள்ளன!

‘நீட்’ தேர்வின் ஓட்டைகளுக்குப் பரிகாரம் தேடி ஒரு விசித்திரமான தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம் கேள்வித் தாள்களில் மொழி பெயர்ப்பு என்ற பேரில் கேலிக்கூத்தான குளறுபடிகள், சென்னை உயர்நீதிமன்றமே இதனைச் சுட்டிக்காட்டி 49 கேள்விகளில் உள்ள தவறு களுக்கு, அதற்கு விடை எழுதியவர்களுக்கு தலா 4 மதிப்பெண்,  என்ற வகையில் 196 மதிப்பெண் (தமிழில் தேர்வு எழுதிய ஒரு லட்சம் பேருக்கு) வழங்கவேண்டும் என்று கூறியது. இதில் உச்சநீதிமன்றம் வலுக் கட்டாயமாக தலையிட்டு, அந்த ஆணையை ரத்து செய்து ‘நீட்’ தேர்வின் ஓட்டைகளுக்குப் பரிகாரம் தேடி ஒரு விசித்திரமான தீர்ப்பை வழங்கியது.

இதற்கிடையில் இந்த ‘நீட்’ தேர்வு காரணமாக தங்கள் மருத்துவக் கனவுகள் சிதைக்கப்பட்டதால், அனிதா தொடங்கி சுமார் 11 இளம் மாணவிகளின் பல தற் கொலைகள், உயிர்ப் பலிகள்  என்ற கொடு மையோ கொடுமைகள்! தேர்வு வரலாற்றில் காணப்படாத கறை படிந்த அத்தியாயங்கள் இவை!

முந்தைய முக்கிய தீர்ப்புகளுக்கு மாறான தீர்ப்பு!

11 நீதிபதிகளைக் கொண்டு அரசமைப்புச் சட்ட அமர்வுகளின் முந்தைய முக்கிய தீர்ப்புகளையெல்லாம், வெறும் இரண்டு, மூன்று நீதிபதிகள் அமர்வு - ஆட்சியாளரின் குரலைவிட மிக அழுத்தமான குரலில், ‘More Executive than Executive' என்பது போல மாறாக தீர்ப்பளித்தது, அது எவ் வகையில் சரியானது?
இப்போது இக்கேள்வி பல இடங்களி லிருந்தும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது!
நேற்றைய ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் பைசன் முஸ்தபா என்ற அரசமைப்புச் சட்ட நிபுணரால் எழுதப்பட்ட ஒரு முக்கிய கட்டுரையில், ‘நீட்’ தேர்வின் புரட்டுகள்பற்றி அலசி ஆராயப்பட்டுள்ளது. (https://viduthalai.page/StlXET.html).
இது மாணவர்களுக்கு எவ்வகையிலும் நன்மை செய்வதாகவோ, ஊழலை ஒழிப்ப தாகவோ இல்லை என்பதையும், திறமைக் குரிய அங்கீகாரமும் இதன்மூலம் கிட்ட வில்லை என்பதையும் மிகவும் துல்லியமாக எடுத்துக்காட்டியுள்ளது அச் சிறப்புக் கட்டுரை!

ஊழல் ஒழிப்பு என்னும் மாய்மாலத் திரை கிழித்தெறியப்படவில்லையா?

‘நீட்’ தேர்வில் சுமார் 100 பேருக்குமேல் ஆள் மாறாட்டம் நடைபெற்றதும், நீதி மன்றத்திலேயே வெளிப்பட்டதே!  அது நீட் தேர்வின் யோக்கியதையை விளக்கவில்லையா? இதுதான் ஊழல் ஒழிப்பின் லட் சணமா? இதன்மூலம் ஊழல் ஒழிப்பு என்ற மாய்மாலத் திரை கிழித்தெறியப்பட வில்லையா?

கார்ப்பரேட்டுகள் கோடி கோடியாகப் பணம் பறிக்கவில்லையா?

முன்பு தனியார் மருத்துவக் கல்லூரிகள் கொள்ளை அடிக்கின்றன - கோடிகளை நன்கொடையாக வாங்குகின்றன என்று கூறி, அதனை இந்த ‘நீட்’ ஒழிக்கும் என்றார்களே, அந்த நோக்கம் இப்போது ‘நீட்’மூலம் நிறைவேறியுள்ளதா?

உள்ளூர் மற்றும் வெளிநாட்டுக் கோச் சிங் மய்யங்கள் மூலம் கார்ப்பரேட்டுகள் கோடி கோடியாகப் பணம் பறிக்க வில்லையா?

முன்பு தனியார் மருத்துவக் கல்லூரிகள் -  குறைந்த மதிப்பெண் பெற்றவர்களிடம் நன்கொடை (Capitation Fees) மூலம் கருப்புப் பணமாக வாங்கியதை , இப்போது அதிகாரப்பூர்வமாக ஓராண்டு சம்பளக் கட்டணம் இரண்டு கோடி ரூபாய்  என்று வெள்ளைப் பணமாகவே வாங்கி, கணக்குக் காட்ட எந்த சிரமமும் இல்லாத வாய்ப்பு தானே இதன்மூலம் உருவாக்கப்பட்டுள்ளது? இதுதான் ஊழலை ஒழிப்பதா?

மின்மினியை மின்சாரம் என்று வர்ணிப்பதுபோன்ற
ஒரு வகை மோசடியே!

பொது விஞ்ஞான அறிவோ, மற்ற பாடங்களைப்பற்றிய செறிவோ, துளியும் தேவையின்றி - இந்த ‘நீட்’ தேர்வு அமைக்கப்பட்டுள்ளதால், இதன்மூலம் ‘திறமை' பளிச்சிடுவதாகக் கூறுவது மின்மினியை மின்சாரம் என்று வர்ணிப் பதுபோன்ற ஒரு வகை மோசடியே ஆகும்!

12 ஆண்டுகள் படித்த படிப்பு (+2 வரை), குப்பையில் தூக்கி எறியப்பட்டதுதான் ‘தகுதி திறமையா?' ‘நீட்’ தேர்வினை எதிர்த்து தமிழ்நாடு தான் குரல் கொடுக்கிறது என்றால், இது சமூகநீதி பூமி- பெரியார் மண்! இப்போது ‘நீட்' தேர்வின் கொடுமையும், புரட்டும் உலகுக்கே தெரியத் தொடங்கிவிட்டது! ‘ஜூனியர் விகடன்’ ஏட்டில் ஒரு தொடர் பலவித ஆதாரங்களோடு வந்துள்ளது! நமது அறப்போராட்டம் தொடர்ந்த வண்ணமே இருக்கும்!

இந்த மோசடித்தனத்தை ஒழிக்க - எத்தனை ஆண்டு காலம் ஆனாலும், எத்தனை வலிமைகளைக் கூட்டி வந்தாலும், நமது அறப்போராட்டம் தொடர்ந்த வண் ணமே இருக்கும். களங்கள் கனன்று கொண்டே இருக்கும்!
மக்கள் மன்றம்தான் எல்லா மன்றங் களுக்கும் மேலானது. அது இப்போது நன்கு புரியத் தொடங்கிவிட்டது. வெள்ளி முளைத்துவிட்டது; விடியலுக்கு வெகு தூரமில்லை.

ஓரணியில் திரள்வீர், சமூகநீதிக் காக்க - வெல்லுவோம் வாரீர்!

நம் பணி ஓயாது; எந்த விலையையும் கொடுக்க நாம் தயாராவோம்; ஒத்த கருத் துள்ள தோழர்களே, ஓரணியில் திரள்வீர், சமூகநீதிக் காக்க - வெல்லுவோம் வாரீர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக