நாடு ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைக்கு மத்திய அரசின் 2 ஆம் கட்ட அறிவிப்புகளில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு தொலை நோக்குப்பார்வையோடும்,
விவசாயிகளுக்கு மேலும் நம்பிக்கை அளிக்கும் வகையிலும், தொழிலாளர்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் ஊக்கம் அளிக்கும் வகையிலும் உள்ள திட்டங்கள் பலன் தரும்.
சுயசார்பு இந்தியா திட்டத்தின் புதிய அறிவிப்புகள் புலம் பெயர் தொழிலாளர்கள், விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், மீனவர்கள், பழங்குடியினர் ஆகியோருக்கு பயனுள்ளதாக அமையும்.
குறிப்பாக ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்க அனுமதிக்கப்படும், எந்த மாநிலத்துக்குச் சென்றாலும் நலத்திட்டத்தின் பயன்களை பெற முடியும், ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணி செய்ய முடியும், அடுத்த 2 மாதங்களுக்கு விலையில்லா உணவுப் பொருட்கள் பெற முடியும், வீடு கட்டிக்கொடுத்து குறைந்த வாடகைக்கு குடியிருக்க முடியும், 100 நாள் வேலை திட்டத்தில் நாள் ஒன்றுக்கு ரூ. 182 என இருந்த சம்பளம் ரூ. 202 ஆக உயர்த்தப்படும் போன்ற அறிவிப்புகளால் 8 கோடி புலம் பெயர் தொழிலாளர்கள் பயனடைவார்கள்.
எனவே புலம் பெயர் தொழிலாளர்களுக்கு தொலைநோக்குப் பார்வையோடு அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்புகள் அவர்கள் எந்த மாநிலத்துக்குச் சென்று வேலை செய்தாலும் தங்கள் மாநிலத்தில் இருப்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்துவதோடு வேலை வாய்ப்பு பெறவும், வருங்கால வாழ்வு மேம்படவும், பொருளாதாரத்தை சேமிக்கவும் உதவும்.
சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்கான வட்டி மே 31 ஆம் தேதி வரை தள்ளுபடி செய்துள்ளதால் விவசாயிகளுக்கு மேலும் நம்பிக்கை அளித்துள்ளது. நபார்டு வங்கியின் மூலம் ரூ. 30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க இருப்பதால் 3 கோடி விவசாயிகள் பயனடைவார்கள். மேலும் கிசான் கிரெடிட் கார்டு திட்டத்திற்கு 2 இலட்சம் கோடி நிதி ஒதுக்கி மீனவர்களுக்கும், கால்நடை வளர்ப்பவர்களுக்கும் கடன் வழங்க இருப்பதன் மூலம் 2.5 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
சாலையோர வியாபாரிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படும் என்பதும், நடைபாதை வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கப்படும் என்பதும் அவர்களின் அன்றாட பிழைப்புக்கு ஊக்கமளிப்பதோடு, தற்போதைய பொருளாதார சிரமத்தில் இருந்து மீண்டு மீண்டும் தொழில் செய்து முன்னேற முடியும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
அதே போல நடுத்தர வர்க்கத்தினருக்கு மலிவு விலையில் வீடு வாங்குவதற்கு வட்டி மானியம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பதால் கட்டுமானத் தொழில் வளரும், வேலை வாய்ப்பும் பெருகும், நடுத்தர வர்க்கத்தினரும் முன்னேற்றம் அடைவார்கள்.
தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் கிடைப்பதற்கும், தொழிலாளர் ஈட்டுறுதி திட்டம் (ESI) அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படுவதற்கும், குறிப்பிட்ட வேலையைச் செய்யும் அனைவருக்கும் ஒரே மாதிரியான சம்பளம் கிடைப்பதற்கும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொழிலாளர் நலன் சார்ந்த நடவடிக்கைகளாகும்.
பழங்குடியின மக்களுக்கு வேலை வாய்ப்பை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ. 6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும் என்பது அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர வழி வகுக்கும்.
எனவே சுயசார்பு இந்தியா திட்டம் சார்ந்த மத்திய அரசின் இன்றைய 2 ஆம் கட்ட அறிவிப்புகள் விரைவில் செயல்பாட்டுக்கு வந்து அவரவர் சார்ந்த துறையில் மீண்டும் நம்பிக்கையோடு ஈடுபட்டு முன்னேற்றம் அடைய வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக