சனி, 16 மே, 2020

விழுப்புரம் மாவட்டத்தில் அஞ்சல் ஊழியர்கள் ரூ.7.83 கோடி நேரில் பட்டுவாடா


கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அஞ்சல் துறையின் ஊழியர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் மக்களை நேரடியாகச் சந்தித்து 7 கோடியே 83 லட்சம் ரூபாயைப் பட்டுவாடா செய்து உள்ளனர்.  மார்ச் 25 முதல் நாட்டில் ஊரடங்கு அமலில் உள்ளது.  மூன்று கட்டங்களாக ஊரடங்கு 50 நாட்களைத் தாண்டியும் நீண்டு கொண்டிருக்கிறது.  கொரோனா தாக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு பிரதம மந்திரி கரீப் கல்யாண் நிவாரணத் தொகுப்பை அறிவித்தது. பலபிரிவு மக்களுக்கும் நேரடியாகப் பண உதவி வழங்கப்பட்டு உள்ளது.

அனைத்து நிதி உதவிகளும் பயனாளிகளின் வங்கிக் கணக்கில்தான் வரவு வைக்கப்பட்டு உள்ளன.  மாநில அரசும் நிவாரணத் தொகையை வழங்கி உள்ளது.  கொரோனா அச்சுறுத்தலால் வீட்டை விட்டு வெளியே வரவே மக்கள் தயங்கும் போது அவர்களால் வங்கிக்கு / ஏ.டி.எம் மையத்திற்குச் சென்று பணம் எடுப்பது கனவாகவே இருந்தது.  அதிலும் நோய்த்தொற்று இருந்து கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படும் பகுதியில் உள்ள மக்கள் பொதுவாக வெளியில் செல்லவே முடியாது.


இந்தச் சூழலில்தான் அஞ்சலக ஊழியர்கள் ஆதார் அடிப்படையில் பணம் வழங்கும் திட்டத்தின் கீழ் மக்கள் இருக்கும் இடங்களுக்கே சென்று பணம் பட்டுவாடா செய்யத் தொடங்கினர்.  ”வீட்டு வாசலில் வங்கிச் சேவை” என்ற பெயரிலான இந்தச் சேவை மூலம் அஞ்சல் ஊழியர்கள் பணப்பட்டுவாடா செய்கின்றனர்.  எந்த ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தாலும் பணம் எடுக்க முடியும்.  ஆனால் வாடிக்கையாளர் தனது வங்கிக் கணக்குடன் ஆதார் எண், மொபைல் எண் இரண்டையும் இணைத்திருக்க வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தில் நான்கு அஞ்சலக உட்கோட்டங்கள் உள்ளன.  அந்தந்த உட்கோட்ட அஞ்சலக உதவி கண்காணிப்பாளர்களைத் தொடர்பு கொண்டு பணம் பட்டுவாடா குறித்துக் கேட்டோம்.  மார்ச் 25 முதல் மே 13 வரை உள்ள ஊரடங்கு காலத்தில் பணப்பட்டுவாடா குறித்த தகவலை அவர்கள் தெரிவித்தனர்.  விழுப்புரம் உட்கோட்ட அஞ்சல் உதவி கண்காணிப்பாளர் திரு எஸ்.முருகன் தனது உட்கோட்டத்தில் எட்டு டெலிவரி அஞ்சலகங்கள் இருப்பதாகவும் ஊரடங்கின் போது 19,398 பணப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவற்றின் மதிப்பு ரூ.4,68,02,218 என்றும் தெரிவித்தார்.

திண்டிவனம் உட்கோட்ட அஞ்சலக உதவி கண்காணிப்பாளர் திரு.சி.முருகன் தனது உட்கோட்டத்தில் 7095 பணப் பரிமாற்றங்கள் நடைபெற்றதாகவும் அவற்றின் மதிப்பு ரூ.1,41,57,856 என்றும் தெரிவித்தார்.

செஞ்சி உட்கோட்ட அஞ்சலக ஆய்வாளர் திரு.ஜா.ராஜ்குமார்  ரூ.1.16 கோடி மதிப்பில் 5258 பணப்பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று தெரிவித்தார்.

புதுச்சேரி தெற்கு உட்கோட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தின் 5 கிளை அஞ்சலகங்கள் வருகின்றன.  இந்த உட்கோட்டத்தின் உதவி கண்காணிப்பாளர் அ.முத்துமாரி இந்த 5 அஞ்சலகங்களின் மூலம் 2034 பணப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அவற்றின் மதிப்பு ரூ.57,92,390 என்றும் தெரிவித்தார்.

மொத்தமாகப் பார்த்தால் விழுப்புரம் மாவட்டத்தில் அஞ்சலக ஊழியர்கள் 33,785 பணப்பரிமாற்றங்கள் மூலம் ரூ.7 கோடியே 83 லட்சம் தொகையை பொதுமக்களுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று வழங்கி உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக