சனி, 16 மே, 2020

'ஒன்றிணைவோம் வா' திட்டத்தை நோட்டம் விடுவதற்காக போன் செய்தவர்கள் வீட்டுக்கும் பொருட்கள் சேர்ந்துள்ளது. - மு.க.ஸ்டாலின்

தி.மு.க.வின் களப்பணிகள் தொய்வின்றித் தொடரும் ! - மு.க.ஸ்டாலின் 

தி.மு.க.,வின் இலட்சியப் பயணத்தில், இதுவரை இப்படி ஒரு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது இல்லை என்னும்படியாக காணொலிக் காட்சி மூலமாக கூட்டம் நடத்தப்பட்டது.

கொரோனா காலத்தில் உழலும் மக்களைப் பற்றி உளப் பூர்வமாகக் கவலைப்பட்ட தி.மு.கழகம், நோய் பரவுகிறது என வீட்டுக்குள் முடங்கவில்லை ! ஊர் தோறும் வீடுவீடாகச் சென்று சிறப்பாக சேவை செய்த மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகளை செவியாரக் கேட்பதற்காக இன்றைய கூட்டம் நடைபெற்றது.

'ஒன்றிணைவோம் வா' மூலம் இலட்சக்கணக்கான மக்களுக்கு- சாதி, மதம், கட்சி பேதமில்லாமல் செய்யப்பட்டுள்ள சீரிய தொண்டை மாவட்டச் செயலாளர்கள் விளக்கினார்கள். இன்னும் சொன்னால், திட்டத்தை நோட்டம் விடுவதற்காக போன் செய்தவர்கள் வீட்டுக்கும் பொருட்கள் சேர்ந்துள்ளது.

'ஏழைகளுக்கு உணவளிப்போம்', 'நல்லோர் கூடம்' என்ற திட்டங்களின் வழியாக உணவைத் தயாரித்து, அதனைக் காலத்தே கொண்டு போய்க் கொடுத்துப் பசி போக்கிய மக்கள் சேவை குறித்தும் மாவட்டச் செயலாளர்கள் விளக்கிச் சொன்னார்கள்.

உணவு, மருந்துகளுக்கான தேவையை இயன்றளவுக்குச் செய்திருக்கிறோம். அரசாங்கம் செய்ய வேண்டிய காரியங்களை தொகுத்து தலைமைச் செயலாளரிடம் கொடுத்துள்ளோம். அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடமும் கொடுத்துள்ளோம். கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தரும் வரையிலும் தொடர்ந்து வலியுறுத்துவோம்!

மக்களின் கோரிக்கைகளைப் பார்க்கும் போது, ஆட்சி என்ற ஒன்று இருக்கிறதா, முதலமைச்சர் என்ற ஒருவர் இருக்கிறாரா, அமைச்சர்கள் செயல்படுகிறார்களா என்ற ஐயப்பாடே எழுகிறது!

தமிழக அரசு இன்னமும் மெத்தனமாக செயல்படுகிறது- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை; பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரோக்கியமான உணவு தரப்படுவதில்லை; மருத்துவமனைகள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை; மருத்துவர்களுக்கே நோய்த்தடுப்பு உபகரணங்கள் இல்லை .

கோயம்பேடு சந்தைக்கு மாற்று இடத்தை ஏற்பாடு செய்திருந்தால் அல்லது முறையாக கண்காணித்திருந்தால் கொரோனா பரவாமல் தடுத்திருக்கலாம். அயலகங்களில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வரும் முயற்சியையும் எடுக்கவில்லை . அவர்களது குடும்பத்தினர் தவிக்கிறார்கள். ஆனால் மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு திட்டமிட்ட முயற்சி எதுவும் எடுக்காத தமிழக அரசு, மதுக் கடைத் திறப்புக்கு திருவிழா ஏற்பாடுகளைப் போல துரிதமாகச் செயல்படுகிறது என்பதையெல்லாம் மாவட்டச் செயலாளர்கள் பகிர்ந்து கொண்டார்கள்.

அரசாங்கமும், பல ஆயிரம் தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து செய்ய வேண்டிய அளவில் பெரிய செயலை, தி.மு.கழகம் செய்து காட்டியுள்ளது இந்தியாவில், வேறு எந்த மாநிலத்திலும் இப்படியொரு மக்கள் சேவையை எந்த அரசியல் கட்சியும் செய்ததாகத் தகவல் இல்லை !

பெரும்பணி ஆற்றிய மாவட்டச் செயலாளர்களுக்கும், அவர்களுக்கு தோளோடு தோள் கொடுத்து துணை நின்ற நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

பேராபத்து காலத்தில் தி.மு.க எப்படிச் செயல்படும் என்பதை எடுத்துக்காட்டி இருக்கிறோம். இன்னும் ஏராளமான பணிகள் அணிவகுத்து நிற்கின்றன. அப்பணிகள் குறித்த திட்டமிடுதல்களுடன் கூட்டத்தை நிறைவு செய்துள்ளோம்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆசைப்படும் அரும் பணியாளர்களாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் விரும்பும் களப்பணியாளர்களாக தி.மு.க.,வினர் செம்மாந்து நிற்பதைப் பார்த்து, இயக்கத்தை வழிநடத்தும் தலைமைத் தொண்டனாக மகிழ்கிறேன்; அனைவருடைய தொண்டுள்ளத்துக்கும் தலைவணங்குகிறேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக