ஞாயிறு, 17 மே, 2020

கரோனாவிலிருந்து மக்களை காப்பாற்றுங்கள்! ஆனால், கனிம வளங்களை நாட்டு மக்களுக்கு விட்டு விடுங்கள்!! - டாக்டர் K. கிருஷ்ணசாமி


கரோனாவிலிருந்து மக்களை காப்பாற்றுங்கள்!
கனிம வளங்களை நாட்டு மக்களுக்கு விட்டு விடுங்கள்!!

நான்காவது தினமான இன்று கனிம வளங்கள், தாதுக்கள், இராணுவ தளவாடங்கள், விமான நிலையங்கள், வான்வெளி ஆகியன குறித்து கொள்கை ரீதியான அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்திருக்கிறார். இதுவரையிலும் இறக்குமதி செய்யப்பட்ட பல ராணுவ தளவாடங்கள் மற்றும் உதிரி பாகங்களின் இறக்குமதிக்கு தடை விதித்து, அதை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய அந்நிய முதலீட்டை 47% இருந்து 74%-ஆக உயர்த்தியிருக்கிறார். 

உள்நாட்டு விமானங்களை இயக்க தவறான நடைமுறைகள், கொள்கைகள் காரணமாக இந்தியாவினுடைய வான்வெளியில் 40% பயன்படுத்தப்படாத நிலையில் இருந்தது. இதன் காரணமாக 40 நிமிடத்தில் பயணிக்க வேண்டிய தூரத்தை, ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக பயணிக்கும் நிலை உள்ளது. இதனால் எரிபொருள் செலவும், இதர செலவுகளும் அதிகமாகி பயண கட்டணம் உயருகிறது. கோவையிலே ஒரு விமானம் கிளம்பி ஈரோடு, சேலம், காஞ்சிபுரம் வாயிலாக சென்னை சென்றடைய 40 நிமிடங்கள் தான் ஆகும். அதே விமானத்தை கோவையிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், கடலூர், பாண்டிச்சேரி வழியாக சுற்றி சென்னை செல்கிறபோது நேரமும் அதிகமாகும். எரிபொருளும் வீணாகும். இதுபோல எல்லா பகுதிகளுக்கும் வான்வழிப் பாதையை முறையாக ஒழுங்குபடுத்தினால், விமான கம்பெனிகளுக்கும் செலவினங்கள் குறையும். பயணிகளுக்கும் கட்டணமும் குறையும். ஏறக்குறைய ஆண்டு ஒன்றிற்கு  1000 கோடி ரூபாய் இதன் மூலம் மிச்சப்படுத்த முடியும் என்று கணக்கிட்டு அதற்கான கொள்கையை மாற்றியமைத்து இருப்பது வரவேற்கத்தக்கது.

இன்றைய அறிவிப்பில் கனிம வள மற்றும் தாது வளச் சுரங்கங்களை தனியார்களுக்கு ஏலம் விட முடிவெடுத்திருப்பது இடைப்பட்ட காலத்தில் தடுக்கப்பட்டிருக்கக்கூடிய கனிம வளம், தாது கொள்ளையர்களை ஊக்குவிப்பதற்கு வாய்ப்பளித்து விடும். கனிம மற்றும் தாது வளங்களை பொருத்தமட்டிலும் கடந்த கால வரலாறுகள் மிகவும் கசப்பானவை. தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் தாது மணல் எடுக்க கொடுத்த அனுமதியை காட்டிலும் பல ஆயிரக்கணக்கான மடங்கு எடுத்ததன் விளைவாக தமிழகத்தின் ஆயிரம் கிலோமீட்டர் நீள கடற்கரை கடல் அரிப்புக்கு ஆளானது. மீன் வளங்கள் பாதிக்கப்பட்டன. இலட்சக்கணக்கான மீனவர்கள் தங்களுடைய வாழ்வை இழந்தார்கள். ஒரு லோடு மணலுக்கு கணக்கு காட்டி, ஆயிரம் ஆயிரம் லோடுகள் கப்பல் கப்பலாக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டன. 

மதுரையை சுற்றி செயல்பட்ட கிரானைட் சுரங்கங்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களை தாண்டி கிராம கண்மாய்கள், சுடுகாடுகளையும் விட்டுவைக்காமல் சூரையாடியதை தமிழக மக்கள் அறிவர். தமிழகத்தின் மிக முக்கியமான நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய காவிரி ஆற்றில் மூன்றடி மணல் மட்டுமே எடுத்திட அனுமதி பெற்று, காவிரி ஆற்றின் அடி வரையிலும் சுரண்டி எடுத்து காவிரியைக் அழித்த வரலாறும், தாமிரபரணி, வைகை, பாலாறு உள்ளிட்ட ஆறுகளை பாழாக்கியதும் அனைவரும் அறிந்ததே. 


கர்நாடகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இரண்டு மாவட்டங்களில் பரவிகிடந்த இரும்பு தாதுக்களை கப்பல் கப்பலாக கொள்ளையடித்து சென்றதை நீதிமன்றத்தின் தலையீட்டால் மட்டுமே தடுக்க முடிந்தது. அசோக சக்கரவத்தியின் கலிங்கப்போர் புகழ்பெற்ற ஒடிசா மாநிலத்திலும், ஜார்கண்ட் மாநிலத்திலும் ஏறக்குறைய நூறு ஆண்டுகளாக இரண்டு பெரிய கார்ப்ரேட் கம்பெனிகளும், எண்ணற்ற சிறிய நிறுவனங்களும் பாழங்கள் பாழங்களாக இரும்பு தாதுக்களை வெட்டி எடுத்து வருகின்றனர். அதனால், காலம் காலமாக அந்த பகுதியில் வாழக்கூடிய பழங்குடியின மக்களுக்கு எந்தவிதமான பலனும் இல்லை.  அம்மாநிலங்களில் அவர்கள் தங்களுடைய பூர்விக நிலங்களை இழந்து தற்போது நிர்கதியாய் நிற்கிறார்கள். தமிழகத்தின் நெய்வேலி பகுதியில் நிலக்கரி சுரங்கம் தோண்ட நிலம் கொடுத்த விவசாயிகள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கேட்டு நடையாய் நடக்கிறார்கள். 

கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு கிருஷ்ணா, கோதாவரி படுகைகளில் இந்திய அரசின் ONGC-யின் ஆழ்குழாய்க் கிணறுகளின் அருகாமையிலேயே, இந்தியாவின் முதன்மை  பணக்கார குடும்பத்திற்கும் வாயு எடுக்கவும், எண்ணெய் எடுக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள், அவர்களுடைய கிணற்றிலிருந்து வாயுவையும், எண்ணெயையும்  எடுக்காமல், அவற்றை அப்படியே வைத்துவிட்டு, மத்திய அரசின் ONGC கிணறுகளிலிருந்து கள்ளத்தனமாக எடுத்து விற்றதற்காக ஆயிரம் கோடிக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

இந்தியாவினுடைய பெருமையை நிலைநாட்ட கூடிய வகையில் ஏர் இந்தியா விமானங்களும், இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்களும் உருவாக்கப்பட்டன. தனியார்மயம் என்று துவங்கிய பின் லாபம் தரக்கூடிய பாதைகளையும் முக்கியமான பயண நேரங்களையும் தனியார் விமான கம்பெனிகளுக்கு விட்டுக்கொடுத்து, விமானங்களை இயக்கியதன் விளைவாக, ஏர் இந்தியா விமான நிறுவனங்களுக்கு பெரும் நட்டம் ஏற்பட்டது. இப்பொழுது அந்நிறுவனங்களை வாங்கக்கூட ஆளில்லாமல் அதோகதியாகியிருக்கிறது. ஆனால் கரோனா ஆபத்தான, மிக முக்கியமான இக்காலகட்டத்தில் சிக்கித் தவித்த இந்தியர்களை பிற நாடுகளிலிருந்து அழைத்து வரவும், மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லவும் ஏர் இந்தியா விமானங்களே பெரிதும் பயன்பட்டன. 

கரோனா முழுமுடக்கத்தால் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய இழப்பை ஈடு செய்ய அரசின் நிதி உதவியும், அரசின் நம்பிக்கையூட்டும் செயல்களுமே மீட்டெடுக்கும் வழிகளாகும். அதைவிட்டு விட்டு முற்றிலும் வேறு பாதைக்கு திரும்புவது புதிய பிரச்சினைகளை கொண்டுவர வழிவகுக்கும்.
முதல் மூன்று நாட்கள் சிறு, குறு தொழில் முனைவோருக்கு கடன் வசதிகளை அறிவித்துவிட்டு, நான்காவது நாளான இன்று ஒட்டுமொத்த இந்தியாவினுடைய அனைத்து கனிம, தாது வளங்களையும், விமான நிலையங்களையும் விரல் விட்டு எண்ணக்கூடிய பெரும் செல்வந்தர்கள் கொள்ளையடித்து செல்ல அனுமதி அளித்திருப்பது எவ்வித்தில் நியாயம்? கரோனா பாதிப்பிலிருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், உதவுவதற்கும் தானே 20 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டதாக சொல்லபட்டது? அந்த செயலுக்கும், நிலக்கரி மற்றும் தாது வளங்களையும், விமான நிலையங்களையும் சில தனி நபர்களுக்கு தாரை வார்ப்பதற்கும் என்ன தொடர்பிருக்கிறது? கடந்த இரண்டு மாத கால முழு முடக்கம் இந்தியாவின் முழு முகத்தை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறதே. நூற்றுக்கு 50 சதவிகித மக்கள் எந்தவிதமான சேமிப்பும் அற்றவர்களாகவே இருக்கிறார்கள் என்பது தானே உண்மை. பணிக்குச் செல்லவில்லையென்றால் ஒருவார காலம் கூட தாக்குப்பிடிக்க முடியாத நிலையிலையே 70 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இந்தியாவில் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் உள்ள இடைவெளி நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்ற ஆபத்தைக்கூட  இந்த அரசு உணரவில்லையா?

சிறு குறு தொழில்கள், விவசாயிகள், கால்நடைகள், மாநிலத்திற்கு மாநிலம் இடம் பெயரும் தொழிலாளர்களின் நலன்களில் முதலில் அக்கரை காட்டிய அரசு, இந்தியாவினுடைய அனைத்து மக்களின் சொத்தாக கருதப்படும் கனிம வளங்களையும், பொதுத்துறை நிறுவனங்களையும் ஒரு சிலருக்கு தாரை வார்க்க முயற்சிப்பது ஏன்? கனிம, தாது வளங்களை ஏலத்திற்கு விடுவது ஊழலுக்கு வழிவகுக்கும். நாட்டின் சுற்றுப்புற சூழலை பாதிக்கும். மீனவர்கள், விவசாயிகள், கிராமப்புற மக்கள், பழங்குடியினர் என அனைத்து தரப்பு மக்களுடைய வாழ்வுரிமையும் பறிபோகும்.  எனவே, எக்காரணங்களை கொண்டும் நிலக்கரி மற்றும் பிற தாதுக்களையும், விமான நிலையங்களையும் தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என்பதே பெரும்பான்மை மக்களின் எதிர் பார்ப்பாகும்.
கடந்த காலங்களில் கனிம வளங்களை தனியாருக்கு தாரை வார்த்ததும், அதனால் அடிமட்ட அளவில் மக்களுக்கு பாதிப்புகளுமே பல மாநில அரசுகள் வீழச்சியடைய காரணமாக அமைந்திருக்கின்றன. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடுகள் தான் கடந்த காலங்களில் மத்திய ஆட்சியையும் பதம் பார்த்தது என்பதையும் மறந்து விடக் கூடாது. கடந்த ஆறு வருடங்களாக எந்த ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத மோடி அரசின் மீது  கனிம வளங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சிகளால் கரும்புள்ளிகள் உருவாகலாம், கறையும் படிய வாய்ப்பிருக்கிறது. எச்சரிக்கை செய்ய வேண்டியது எங்கள் கடமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக