சனி, 4 ஜூலை, 2020

தேசப் பாதுகாப்பு பணியில் உறுதியான நிலைப்பாட்டை மேற்கொண்டு வரும் பிரதமரின் முயற்சிக்கு மக்கள் துணை நிற்க வேண்டும்.- ஜி.கே.வாசன்

“தேசப் பாதுகாப்பு பணியில் உறுதியான நிலைப்பாட்டை மேற்கொண்டு வரும் பிரதமரின் முயற்சிக்கு மக்கள் துணை நிற்க வேண்டும்”.
 - ஜி.கே.வாசன்

இந்திய, சீன எல்லைப் பகுதியில் மோதல் சூழல் நிலவுகிற நிலையில் நம் இராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.  இந்நிலையில் நம் பாரதப் பிரதமர் முப்படைத் தளபதிகளையும் அழைத்துக் கொண்டு அப்பகுதிகளுக்குச் சென்றுள்ளார். படை வீரர்களைச் சந்தித்து அவர்களது தீர தியாக உணர்வுகளைப் பாராட்டியுள்ளார். 

இச்செயல் நமது இராணுவ வீரர்களுக்கு புதிய உற்சாகத்தையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அங்கே மருத்துவமனையில் மருத்துவ சிசிச்சை பெற்றுவரும் இராணுவ வீரர்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். உங்கள் தியாக உணர்வை ஓட்டுமொத்த தேசமே உணர்ந்துள்ளது. உங்கள் நலனையும், உங்கள் குடும்ப நலனையும் தேசம் பாதுகாக்கும் எனப் பேசியுள்ளார்.

இது தாக்குதலுக்கு உள்ளான படைவீரர்களின் மனதுக்கு மருந்தாகவும், மேலும் கூடுதல் நம்பிக்கையும் கொடுத்துள்ளது. "அமைதியை நாடும் தேசம் நம் இந்தியா. ஆனால் அமைதிக்குப் பங்கம் ஏற்பட்டால் தக்க பதிலடியும் தருவோம்” என்ற உறுதியான நிலைப்பாட்டை உலகுக்கு, எதிரி நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இது தேசத்தின் வலிமையை வெளிப்படுத்தும் வரவேற்புக்குரிய செயல். அதோடு இமயத்தின் உச்சியில் நின்று கொண்டு, வீரம், மானம், நல்ல திட்டமிடல், நம்பிக்கை என்ற நான்கு பண்புகளை நம் படையின் திறன்கள் என்ற
பொருள் அடங்கிய "மறம்மானம் மான்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு” - என்ற திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள்காட்டிப் பேசியுள்ளார். 

இதன் மூலம் இமயத்தில் நின்று கொண்டு தமிழின் பெருமையையும், தெய்வப்புலவர் திருவள்ளுவர் காட்டும் படைமாட்சியை உலகிற்கு உணர்த்தியுள்ளார். இது தமிழுக்கும், தமிழனுக்கும் பெருமை. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள படை வீரர்களுக்கு உற்சாகமூட்டுவது, பாதிப்புக்கு உள்ளான வீரர்களுக்கு பாதுகாப்பு உணர்வை, உறுதிமொழியைத் தருவது, தேசத்தின் உறுதிப்பாட்டை உலகிற்கு உணர்த்துவது, தமிழின் பெருமையையும், நம் படைச் சிறப்பின் மாண்பையும், மலை உச்சியிலும் மறக்காமல் பறைசாற்றுவது என்ற நான்கு நல்ல செய்திகளை, சமிச்சைகளை உலகிற்கு அளித்த நம் பாரத பிரதமருக்கு வாழ்த்துக்கள்.  தேசப் பாதுகாப்பு பணியில் உறுதியான நிலைப்பாட்டை மேற்கொண்டு வரும் பிரதமரின் முயற்சிக்கு மக்கள் துணை நிற்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக