வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

தமிழ்நாட்டிலுள்ள ஒன்றிய அரசுப் பணிகளில், திட்டமிட்டு வட“இந்தி”யரைத் திணிக்காதே! தமிழ்நாட்டிலும் தேசிய அளவிலும் தமிழர்களுக்கான ஒன்றியப் பணிவாய்ப்பைப் பறிக்காதே! - தி.வேல்முருகன்


தமிழ்நாட்டிலுள்ள ஒன்றிய அரசுப் பணிகளில், திட்டமிட்டு வட“இந்தி”யரைத் திணிக்காதே!
தமிழ்நாட்டிலும் தேசிய அளவிலும் தமிழர்களுக்கான ஒன்றியப் பணிவாய்ப்பைப் பறிக்காதே!
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ நெறிப்படி வாழும் தமிழர்கள், ‘அவனவன் ஊரில் அவனவன் வாழ்க!’ எனும் புரட்சிப் பாவலரின் நெறியையும் புகட்டுவோம்!

16.08.2020 ஞாயிறு அன்று அவரவர் வீட்டு முன் இக்கோரிக்கைகளை ஏந்தி சமூக இடைவெளி விட்டு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாபெரும் எச்சரிக்கைப் போராட்டம்!

ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் அஞ்சல்துறைப் பணிக்கான போட்டித் தேர்வு நடைபெற்றது. அதில் தமிழ்ப் பாடத்தில், தமிழே தெரியாத ஹரியானாவைச் சேர்ந்த மாணவர்கள் 96% மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்தனர். இது, தமிழ்நாட்டு அஞ்சல் பணியில் சேர திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஓர் முன்னேற்பாடன்றி வேறெதுவாக இருக்க முடியும்?

தமிழ்நாட்டிலுள்ள ஒன்றிய அரசுப் பணிகளில் சேர, தேர்வெழுதும் 99% தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. ஆனால் டெல்லி, உத்தரப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய இந்த 4 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் தேர்வில் அதிகளவில் வெற்றி பெற்று தமிழ்நாடு உள்பட இந்தியா முழுக்க ஒன்றிய அரசுப் பணிகளில் அமர்கிறார்கள்.

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தில் எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், மெக்கானிக், வெல்டர் உள்ளிட்ட தொழில் பழகுநர் இடங்களுக்கு 1,765 பேர் தேர்வு செய்யப்பட்டதில் 1,600 பேர் வட இந்தியர். தவிர, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமான என்எல்சி, பாரத மிகுமின் நிறுவனம், வங்கிகள், வருமானவரித்துறை, சுங்க இலாகா போன்ற அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களே அதிகம்.

நாடு முழுவதும் 2011ஆம் ஆண்டிலிருந்து இதுவரை ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் பணியமர்த்தப்பட்டவர்களில் 99 சதவீதத்தினர் வட இந்தியர்கள்தான். வெறும் 0.5 சதவீதம்தான் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் எனப் புள்ளிவிவரம் கூறுகிறது. 
டெல்லி, உத்தரப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் அதிகளவில் தேர்வில் வெற்றிபெற்று இந்தியா முழுவதும் ஒன்றிய அரசுப் பணிகளில் அமர்வது எப்படிச் சாத்தியம்? திட்டமிட்டு இது அரங்கேற்றப்படுகிறதா? இதற்கு ஆம் என்பதுதான் பதில்.

2014 நவம்பரில் குரூப்-டி பணிகளுக்கான தேர்வை தெற்கு ரயில்வே நடத்தியது. இதற்காக தமிழ் நாளிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், வேலைக்கான விண்ணபத்துடன் இணைக்கும் சான்றிதழ் நகல்களுக்கு அரசு அதிகாரிகளின் ஒப்பம் பெறும் விதி (Attestation) நீக்கப்பட்டிருந்தது. அதாவது, அதுபோன்ற சான்றொப்பம் பெறத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆங்கில நாளிதழில், 'விண்ணப்பத்துடன் அத்தாட்சி சான்றிதழ் இணைத்திட வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தது. 

தமிழ் நாளிதழை நம்பி, அத்தாட்சி பெறாமல் விண்ணப்பித்த தமிழகத்தைச் சேர்ந்த இரண்டரை லட்சம் பேரின் விண்ணப்பங்கள் தெற்கு ரயில்வே நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டன. ஆனால் பிகார் உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்து விண்ணப்பித்தவர்களுக்குத் தேர்வு நடத்தி டிராக் மேன், போர்ட் மேன், சபாய் வாலா, கலாசி போன்ற பணிகளில் சேர்க்கப்பட்டனர்.

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்பில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குஜராத், மத்தியப் பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் தனிச் சட்டமே இயற்றியுள்ளன. ஆனால் தமிழகத்தில் அப்படி இயற்றப்படவில்லை. ஆனால் பிற மாநிலத்தவர் தமிழகத்தில் பணிகளில் சேரலாம் என்றே அரசாணை இயற்றப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிந்தோர் எண்ணிக்கை சுமார் 90 லட்சமாகும். 

இந்நிலையில், வெளிமாநிலத்தவரை இங்குள்ள ஒன்றியப் பணிகளில் திணிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது; ஏற்கவே முடியாதது.
ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி தேர்வுகளிலும் தென்னிந்தியர்களின் தேர்ச்சி விகிதம் மிகமிகக் குறைவாகும். 2019 யுபிஎஸ்சி தேர்வில் தேர்வான தமிழர்கள் வெறும் 35 பேர் மட்டுமே. கடந்த பத்தாண்டுகளில் இதுதான் மிகவும் குறைந்த எண்ணிக்கை எனத் தெரியவந்துள்ளது. 

ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகளைத் தேர்வு செய்யும் குடிமைப்பணி தேர்வில் கடந்த 2010ஆம் ஆண்டில் 12 சதவீதமாக இருந்த தமிழக இளைஞர்களின் தேர்ச்சி, தற்போது 5 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த 2020ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 900 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் தேர்வானவர் நாலைந்து பேர்தான். மீதியுள்ளவர்களெல்லாம் எந்தெந்த மாநிலங்களைச் சேர்ந்தோர் என இணையத்தைத் தேடு தேடு என நாள் முழுவதும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் அனைவரும், வழக்கமாகத் திட்டமிட்டு முன்னேற்பாடு செய்யப்பட்ட “இந்தி”யர் மற்றும் மேல்ஜாதியர் என்ற முடிவுக்குத்தான் வர முடிந்தது. 

ரயில்வேத் துறையில் தமிழ்நாட்டில் 2013-2014இல் 83% வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணியமர்த்தப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் உள்ள வருமானவரித் துறை அலுவலகங்களில் 2014ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்த 78 பேரில், 3 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

எஸ்எஸ்சி எனப்படும் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள் முன்பு மண்டல வாரியாக நடத்தப்பட்டது. இதனால் அந்தந்தப் பகுதி மாணவரே பங்கேற்றனர். ஆனால் தற்போது நாடு முழுவதும் ஒரே தேர்வாக நடைபெறுகிறது. இதனால் அனைத்து மாணவர்களும் தேர்வில் பங்கேற்று எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் பணியில் அமரலாம் என்ற சூழல் உள்ளது.

மேலும், தேசிய அளவில் நடைபெறும் தேர்வுகளில் டெல்லியை மையப்படுத்திய பாடத்திட்டக் கேள்விகளே கேட்கப்படுகின்றன. இது வட இந்திய மாணவர்களுக்குச் சாதகமாகவும் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாணவர்களுக்குப் பாதகமாகவும் உள்ளது. எனவே மண்டல வாரியான தேர்வு அல்லது மாநில வாரியான தேர்வே நடத்தப்பட வேண்டும்.

ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வுகளை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும்தான் எழுத முடியும். இது இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு நல்வாய்ப்பாகவும் தமிழர் உள்ளிட்ட தென்னிந்தியர்களுக்கு கெடுவாய்ப்பாகவும் ஆகிவிடுகிறது.
எனவே தமிழ்நாட்டில் தமிழக அரசுச் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளைப் போல, ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வுகளையும் தமிழிலேயே நடத்த வேண்டும்.

மேலும், தேர்வுகளில் முறைகேடுகள் மற்றும் தில்லுமுல்லுகள் செய்தும் பிற மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் ஒன்றிய அரசுப் பணி நியமனம் பெறுகிறார்கள் என்ற நிலையும் உள்ளது. குறிப்பாக பிகார், மேற்கு உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மாநில மாணவர்கள் தேர்வுகளில் காப்பியடிப்பது, வினாத்தாள் முன்கூட்டியே வெளியாவது, வட மாநில அதிகாரிகள் தங்கள் மாநில மாணவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவது போன்ற மோசடிகளும் நடைபெறுகின்றன.

2016ஆம் ஆண்டு ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வு ஆன்லைனில் நடத்தப்பட்டது. அப்போது முறைகேடுகள், தில்லுமுல்லுகள் குறைவாக இருந்தது. ஆனாலும் ஒப்பீட்டளவில் தமிழக மாணவர்கள்தான் அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர். 

அவ்வளவுதான், அடுத்த ஆண்டு ஆன்லைன் தேர்வில் வட இந்திய மாணவர்கள் முறைகேடு மற்றும் தில்லுமுல்லுகளின் உச்சத்திற்கே சென்றனர். இதனால் அந்த ஆண்டின் எஸ்எஸ்சி தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மற்றும் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ஆகிய இரு நகரங்களிலும் நீட் மட்டுமின்றி, அரசுப் பணியாளர் தேர்வுக்கான பயிற்சி நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. 

ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வுகளில் தேர்வாகும் மாணவர்களில் பெரும்பாலானோர் இந்த மையங்களில் படித்தவர்களாகவே உள்ளனர். அங்கு இவர்களுக்கு குறுக்கு வழியில் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் சொல்லித் தரப்படுவதாகக் கூறப்படுகிறது. ஒன்றிய அரசு அதிகாரிகளின் தொடர்பில் இந்தக் குறுக்கு வழிகளைத் தெரிந்துகொள்வதாகத் தெரிகிறது.

சென்னை பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் பணிக்கான தேர்வுகளிலும் வட இந்தியரை வெற்றி பெறச் செய்வதற்காக முறைகேடுகள் செய்யப்படுகின்றன. இதற்கு சென்னை பெட்ரோலிய நிறுவன நிர்வாகமே துணை போகிறது.

இது நம்முடைய இடத்தை வட இந்தியர்கள் ஆக்கிரமித்து வருகிறார்கள் என்பதை உறுதியாக்குகிறது. அதேநேரம் தமிழகத்திற்கு வந்து குவியும் வடஇந்தியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. கொரோனாவுக்கு முன் உள்ள நிலவரப்படி நம்மூரில் இருந்த வட இந்தியரின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகமாகும். அவர்கள் தங்களுக்கான உரிமை என்று ஒன்றிணையும் நாளில் இனக்கலவரம் ஏற்படும் சாத்தியக்கூறும் உள்ளது. 

தமிழ்நாட்டிலுள்ள ஒன்றிய அரசுப் பணிகளில், திட்டமிட்டு வட“இந்தி”யரைத் திணிப்பதன் மூலம், தமிழர்களுக்கான பணிவாய்ப்பு 99% பறிக்கப்படுகிறது! 
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ நெறியைக் கையாளும் தமிழர்கள், ‘அவனவன் ஊரில் அவனவன் வாழ்க!’ எனும் புரட்சிப் பாவலரின் நெறியையும் கையிலெடுக்க நேரிடும்! 

திணிக்காதே திணிக்காதே! 
தமிழக ஒன்றியப் பணிகளில் வட“இந்தி”யரைத் திணிக்காதே! 
பறிக்காதே பறிக்காதே! 
ஒன்றியத் துறைகளில் தமிழரின் வேலைவாய்ப்பைப் பறிக்காதே! 
ஒன்றிய அரசு தேர்வுகளை தமிழகத்தில் நடத்து! தமிழிலும் நடத்து!
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது தமிழ்நெறி! 
அவனவன் ஊரில் அவனவன் வாழ்க என்பதும் தமிழ்நெறிதான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக