வியாழன், 13 ஆகஸ்ட், 2020

தமிழக அரசும் மத்திய அரசும் சேர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ. 7,500/- வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கே.பாலகிருஷ்ணன் CPIM

விலையில்லாத சமையல் எண்ணெய், பருப்பு, சர்க்கரை 
கொரோனா காலம் முழுவதும் தொடர்ந்து வழங்கிட 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதம் முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாத அரிசியுடன், ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், ஒரு கிலோ சர்க்கரை வழங்கி வந்தது. ஆனால் தற்போது அரிசியைத் தவிர இத பொருட்கள் இலவசமாக வழங்குவதை நிறுத்தி அறிவித்துள்ளதானது ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் செயல்.

தமிழகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு வாழ்க்கை ஆதாரமாக உள்ள இந்த உணவுப் பொருட்களை வழங்குவதற்கு ஒரு மாதத்திற்கு ரூ. 450 கோடி செலவு செய்வது தமிழக அரசுக்கு முடியாத காரியமல்ல.

தமிழக அரசு கொரோனா நோய்த் தடுப்பு சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் இதர துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை மாற்றி செலவு செய்ய வேண்டுமென தொடர்ந்து வற்புறுத்தப்பட்டு வருகிறது. இது நெருக்கடியிலிருக்கும் மக்களை காப்பாற்ற பேருதவியாக அமையும். 

ஆனால் தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை போன்ற துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 15 ஆயிரம் கோடிக்கு மேல் டெண்டர் விடுவதிலேயே முனைப்புக் காட்டி வருகிறது. இந்த தொகையினை மக்கள் நிவாரணப் பணிகளுக்கு செலவிட்டால் பசி, பட்டினியில் வாடும் மக்களை பெருமளவு காப்பாற்ற முடியும். 

எனவே, தமிழக அரசு பசி, பட்டினியில் வாடும் மக்களை காப்பாற்றும் வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தரமான அரிசி, சமையல் எண்ணெய், சர்க்கரை, துவரம் பருப்பு ஆகிய பொருட்களை விலையில்லாமல் கொரோனா காலம் முடியும் வரை வழங்குவதோடு, மத்திய அரசும் சேர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ. 7,500/- வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக