செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

”தூய்மைத் திருவிழா” என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்வில் மிகச் சிறப்பாக செயல்பட்ட நகரங்கள், மாநிலங்களுக்கு மொத்தம் 129 விருதுகள் வழங்கப்படும்.- நரேந்திர மோடி

 

2020ஆம் ஆண்டின் தூய்மைக்கான கள ஆய்வின் முடிவுகளை 2020 ஆகஸ்ட் 20 வியாழக்கிழமை அன்று காலை 11 மணியளவில் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவிப்பார். நாட்டின் தூய்மை நிலவரம் குறித்த கள ஆய்வின் ஐந்தாவது பதிப்பாகும் இது.

”தூய்மைத் திருவிழா” என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்வில் மிகச் சிறப்பாக செயல்பட்ட நகரங்கள், மாநிலங்களுக்கு மொத்தம் 129 விருதுகள் வழங்கப்படும்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தூய்மையான நகர்ப்புற இந்தியா இயக்கத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள், தூய்மை இயக்க வீரர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருடன் காணொளிக் காட்சியின் மூலம் பிரதமர் உரையாடுவார்.

அத்தருணத்தில் 2020ஆம் ஆண்டிற்கான தூய்மைக்கான கள ஆய்வு முடிவுகளைத் தெரிவிக்கும் இணையவழி அறிவிப்புப் பலகையை பிரதமர் தொடங்கி வைப்பார்.

2020ஆம் ஆண்டின் தூய்மைக்கான கள ஆய்வு உலகத்திலேயே தூய்மை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலேயே மிகப்பெரியதாகும். மொத்தம் 4,242 நகரங்கள், 62 ராணுவ குடியிருப்புப் பகுதிகள், கங்கை நதியோரம் அமைந்துள்ள 92 சிறு நகரங்கள் ஆகியவற்றின் தரவரிசையைத் தெரிவிப்பதாக இந்தக் கள ஆய்வு அமைகிறது. இதுவரை கண்டிராத வகையில் இந்த ஆய்வில் 1.87 கோடி பேர் பங்கேற்றுள்ளனர்.

இந்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

தூய்மைக்கான இயக்கத்தில் பெருமளவில் மக்கள் பங்கேற்பினை உறுதி செய்யும் நோக்கத்துடன் அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட  தூய்மைக்கான இந்தக் கள ஆய்வு, இந்தியாவின் தூய்மையான நகரங்களாக மாறுவதற்கான நல்லதொரு போட்டி உணர்வை நகரங்களுக்கு இடையே வளர்த்தெடுப்பதையும் நோக்கமாகக்  கொண்டதாகும்.

மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகத்தினால் மேற்கொள்ளப்படும் 2016ஆம் ஆண்டின் தூய்மைக்கான கள ஆய்வு 73 முக்கிய நகரங்களை தரவரிசைப்படுத்தியது; 2017 ஜனவரி-பிப்ரவரியில் மேற்கொள்ளப்பட்ட  2017ஆம் ஆண்டின் கள ஆய்வு 434 நகரங்களை தரவரிசைப்படுத்தியது; 2018ஆம் ஆண்டின் கள ஆய்வு 4,203 நகரங்களை தரவரிசைப்படுத்தியது; அதைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வு 4,237 நகரங்களில் மேற்கொள்ளப்பட்டது மட்டுமின்றி முதன்முறையாக முற்றிலும் டிஜிட்டல் வகையிலான கள ஆய்வாகவும் அமைந்ததோடு, 28 நாட்களில் முடிவடைந்தது.

2020ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைக்கான கள ஆய்வு நகரங்களின் கள அளவிலான நிலைத்தன்மை மற்றும் தொடர்ச்சியான மதிப்பீட்டினை உறுதிப்படுத்தவும் தொடர்ந்து மூன்று காலாண்டுப் பகுதிகளிலும் நகரங்கள்/சிறு நகரங்களின் தூய்மை குறித்த தூய்மைக்கான கள ஆய்வு லீக் எனும் காலாண்டு அளவிலான  மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆண்டுக்கான தூய்மைக்கான கள ஆய்வின் இறுதி முடிவுக்கு நகரங்களின் மூன்று காலாண்டு மதிப்பீட்டுடன் 25 சதவீதம் சேர்க்கப்பட்டு இறுதிப்படுத்தப்படும்.

தூய்மைக்கான கள ஆய்வானது மக்களின் கவனத்தையும், இந்த இயக்கத்தினால் பெரிதும் பயனடைவோரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் ஒவ்வோர் ஆண்டும் இதில் பங்கேற்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதும் நகரப்பகுதிகளில் தூய்மையான நிலையை பொதுமக்கள் எந்த அளவிற்கு தமது கடமையாகக் கருதுகிறார்கள் என்பதற்கும் அடையாளமாக விளங்குகிறது.

தூய்மைக்கான கள ஆய்வு தூய்மை என்பதை அனைவரது ஊக்கத்திற்கும் பெருமைக்குமான ஒரு விஷயமாக, அனைவரும் எதிர்நோக்குகின்ற, விரும்புகின்ற ஒரு விஷயமாக இன்று மாறியுள்ளது. இந்தக் கள ஆய்வின் முதல் பதிப்பில் 2016ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகத் தூய்மையான நகரம் என்ற விருதை மைசூரு நகரம் வென்றது எனில், அதைத் தொடர்ந்த மூன்று ஆண்டுகளுக்கு (2017, 2018, 2019 ஆண்டுகளில்) இந்த முதல் நிலையை இந்தோர் நகரம் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு வருகிறது. அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து வரும் 2020ஆம் ஆண்டுக்கான முடிவுகள் 2020 ஆகஸ்ட் 20 அன்று அறிவிக்கப்படும். தற்போது நீடித்து வரும் கொரோனா பெருந்தொற்று சூழ்நிலையின் விளைவாக இதில் தாமதம் ஏற்பட்டது.

2020ஆம் ஆண்டின் தூய்மைக்கான கள ஆய்வு 28 நாட்களில் நிறைவு பெற்றது மட்டுமின்றி பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாகவும் விளங்குகிறது. அவற்றில் சில வருமாறு:

தூய்மைக்கான கைபேசி செயலியில் 1.7 கோடி பேர் பதிவு செய்துள்ளனர்.

இதுபற்றி சமூக ஊடகங்களில் 11 கோடிக்கும் மேலாக பதிவுகள் இடப்பட்டுள்ளன.

5.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சமூக நலத் திட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர். மேலும் 84,000க்கும் மேற்பட்ட முறைப்படுத்தப்படாத குப்பை சேகரிப்போர் பொது வாழ்க்கையுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

குப்பை தொடர்பான பலவீனமான 21,000க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அவை சீரமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வின் மற்றொரு முக்கிய அம்சம் என்பது இந்த தூய்மையான நகர்ப்புற இந்தியாவிற்கான இயக்கத்தில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகத்துடன் இணைந்து பணியாற்றி வரும் அமைப்புகளான சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகமை (யு.எஸ். எய்ட்), பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, கூகுள் போன்ற அமைப்புகளுக்கு பாராட்டு தெரிவிப்பதும் ஆகும்.

2014ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதில் இருந்தே சுகாதாரம் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகிய இரண்டு துறைகளிலுமே தூய்மையான நகர்ப்புற இந்தியாவிற்கான இயக்கம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் நெறிமுறைகளின்படி பொது இடங்களில் மலம் கழிப்பது என்ற வழக்கம் நீங்கியதாக 4,324 நகரங்களும், இதில் மேலும் சிறப்பான செயல்பட்டமைக்காக 1,319 நகரங்களும், இதில் தலைசிறந்த செயல்பாட்டிற்காக  489 நகரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 66 லட்சத்திற்கும் மேற்பட்ட தனிப்பட்ட வீட்டுக் கழிப்பறைகள், 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பொது/சமூக கழிப்பறைகள் ஆகியவற்றை கட்டி முடித்ததன் மூலமே இதனை சாதிக்க முடிந்துள்ளது. இது தூய்மைக்கான இயக்கத்தின் இலக்கினை விட அதிகமாகும். மேலும் கூடுதலாக 2900க்கும் மேற்பட்ட நகரங்களில் 59,900 கழிப்பறைகளின் இருப்பிடத்தை உடனடியாக கண்டறியும் வசதியும் கூகுள் மேப்ஸ் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. திடக் கழிவு மேலாண்மையில், 96 சதவீத வார்டுகள் வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரிக்கும் வசதி பெற்றவையாக மாறியுள்ளன என்பதோடு, இவ்வாறு சேகரிக்கப்படும் மொத்த குப்பையில் 66 சதவீதம் உடனடியாக செயல்முறைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. 2014ஆம் ஆண்டில் இது 18 சதவீதமாக இருந்தது. இப்போது கிட்டத்தட்ட  நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. (இந்தோர், அம்பிகாபூர், நவி மும்பை, சூரத், ராஜ்காட், மைசூரு ஆகிய) ஆறு நகரங்கள் 5 நட்சத்திரத் தர வரிசை கொண்டதாகவும், 86 நகரங்கள் 3 நட்சத்திரத் தரவரிசை கொண்டவையாகவும், 64 நகரங்கள் ஒரு நட்சத்திரத் தரவரிசை கொண்டதாகவும்  குப்பையில்லாத நகரங்களுக்கான மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான விதிமுறைகளின்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த தூய்மைத் திருவிழா நிகழ்வில் 2020ஆம் ஆண்டின் தூய்மைக்கான கள ஆய்வு அறிக்கையோடு கூடவே, தூய்மைக்கான கள ஆய்விற்கான புதுமைகள் மற்றும் சிறப்பான செயல்பாடுகள் ஆகியவை குறித்த அறிக்கைகள், தூய்மைக்கான கள ஆய்வு பற்றி சமூக ஊடக அறிக்கை, கங்கை நதி ஓரத்தில் இருக்கும் நகரங்களின் குறித்த அறிக்கை ஆகியவையும் வெளியிடப்படும்.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் தனிப்பொறுப்பு அமைச்சரான திரு. ஹர்தீப் சிங் புரி, இந்த அமைச்சகத்தின் செயலாளர் திரு. துர்கா சங்கர் மிஷ்ரா ஆகியோரும், நகர்ப்புற சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகிய விவகாரங்களில் ஈடுபட்டு வரும் பல்வேறு நகர மேயர்கள், மாநில அளவிலான இயக்கத்தின் இயக்குநர்கள், நகராட்சி ஆணையர்கள் ஆகியோரும், இந்த இயக்கத்தில் பங்கேற்று வருவோருடன் இணைந்து இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக