செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

மூணாறு தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் மரணத்தில் பாகுபாடு காட்டும் கேரள- தமிழக அரசுகளை கண்டித்து புதிய தமிழகம் போராட்டம்! - டாக்டர் k. கிருஷ்ணசாமி


மூணாறு தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் மரணத்தில் பாகுபாடு காட்டும் கேரள- தமிழக அரசுகளை கண்டித்து புதிய தமிழகம் போராட்டம்! 

15 மணி நேர அவகாசத்தில் மூணாறு தமிழர்களுக்காக மாவட்ட  தலைநகரங்களில் போராட்டம் நடத்திய புதிய தமிழகம் கட்சியின் மாவீரர்களுக்கு எனது வாழ்த்துக்களும்.! நன்றிகளும்..!!

கேரள மாநிலம், மூணாறு தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்த 30 குடும்பங்களைச் சேர்ந்த 83 தமிழர்கள் அப்பகுதியில் பெய்து வந்த தொடர் மழை மற்றும் மண் சரிவால் மாண்டு போயினர். ஐந்து நாட்களாகியும் இன்றுவரை இறந்தவர்களின் முழு விபரங்களை வெளியிடாத கேரள அரசை கண்டித்தும், மண்ணுக்குள் புதைந்து கிடக்கக்கூடிய அவர்களது உடல்களை உடனடியாக மீட்டெடுக்கவும், அவர்களை நல்லடக்கம் செய்ய உடல்களை தமிழகத்தில் உள்ள உற்றார் உறவினர்களிடம் ஒப்படைக்கவும், இறந்தவரின் குடும்பத்திற்கு அரசு மற்றும் டாடா நிறுவனம் தலா 50 இலட்சம் வழங்கவும், தமிழக அரசு அவர்களுடைய பிரேதங்களை தமிழகத்திற்குக் கொண்டு வர கேரள அரசுடன் இணைந்து செயல்படவும், மூணாறு தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் மரணத்தில் பாகுபாட்டுடன் நடந்து கொள்ளக்கூடிய இரு மாநில அரசுகளை கண்டித்தும் நேற்று காலை நடைபெற்ற புதிய தமிழகம் கட்சியின் காணொளி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

அதன்பின் நேற்று (09/08/2020) இரவு 11 மணிக்கு மேல், இன்று (10/08/2020) மதியம் 3 மணிக்கு அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, வெறும் 15 மணி நேர அவகாசம் மட்டுமே இருந்தாலும் கூட, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வெற்றிகரமாக போராட்டம் நடத்திய புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்கும், 

மூணாறில் உள்ள தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் மழை மற்றும் மண் சரிவால் மரணமெய்தி ஐந்து நாட்களாகியும் சமூக வலைதளங்களில் குரல் எழுப்பப்படமால் இருந்த போதிலும், இன்று #JusticeForMunnarTamils என்ற ஹாஸ்டேக்கை டிவிட்டரில் ட்ரெண்ட் செய்து இந்திய அளவில் பேசும் பொருளாக மாற்றிய புதிய தமிழகம் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கும் எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக