திங்கள், 24 ஆகஸ்ட், 2020

14 கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்ட அறிவிப்பை கொடுத்திருக்கிறார்கள். டாஸ்மாக் ஊழியர்களின் இப்போராட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சி தனது ஆதரவை அளிக்கிறது. - டாக்டர் K. கிருஷ்ணசாமி


 பணி நிரந்தரம் - அரசு ஊழியர்களாக்கப் போராடும் டாஸ்மாக் ஊழியர்கள்! ஆதரவளிக்கும் புதிய தமிழகம் கட்சி!!

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது புதிய தமிழகம் கட்சியின் அடிப்படை கொள்கை ஆகும். எனவே, மதுவிலக்கை அமல்படுத்த எல்லாவிதமான பிரச்சாரங்களையும் தொடர்ந்து செய்து வருகிறோம். எனினும் தமிழகத்தில் 20 வருடங்களாக அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. 

தமிழகத்திலுள்ள 5530 மதுபான விற்பனை மையங்களில் உதவி விற்பனையாளர்கள், விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர் என ஏறக்குறைய 26,000-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகிறார்கள். பல வருடங்களாக அந்த மூன்று பிரிவினருக்கும் முறையே ரூ.9,500, ரூ.10,600, ரூ.12,600 என்ற அளவிலேயே சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. 

தமிழகத்தினுடைய வருவாயில் மிகப் பெரிய அளவில் பங்கு வகிப்பது தமிழக அரசின் மது விற்பனை மூலமாகத்தான். அரசுக்கு இந்த அளவிற்கு வருவாயை ஈட்டித் தரக்கூடிய அத்துறையில் பணியாற்றக் கூடியவர்களுக்கு பணிப்பாதுகாப்போ அல்லது வேறு எந்த சலுகைகளும் இல்லாத அளவிற்கு அவர்களின் நிலைமை மோசமாக உள்ளது. தமிழகத்தில் கரோனா தாக்குதல் பெரிய அளவிற்கு இருந்த சூழ்நிலையிலும், டாஸ்மாக் கடைகள் மட்டும் திறக்க வேண்டிய அளவிற்கு அது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.  

கரோனா பாதிப்பால் 7 டாஸ்மாக் ஊழியர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.  அரசு ஊழியர்கள் இறந்தால் வழங்கப்படுவதைப் போன்று ரூ.50 இலட்சம் நஷ்ட ஈடும் வழங்கப்படவில்லை. இதில் பணிபுரியக்கூடிய பெரும்பாலான ஊழியர்கள் BA, MA போன்ற உயர் பட்டதாரிகள் ஆவர். அவர்களுடைய படிப்புக்கேற்ற வேலை கிடைக்காத காரணத்தினால் இந்த வேலையைத் தேர்ந்தெடுத்து பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் அடித்தட்டு மற்றும் மத்தியத்தர குடும்பத்தின் பிள்ளைகள். எனவே,  இவர்களுக்குப் பணி பாதுகாப்பு என்பது மிக மிக அவசியம். மதுக்கடைகளை மூடினால் கூட, அவர்கள் இனிமேல் வேறு வேலைக்குச் செல்ல இயலாது. எனவே அவர்களுடைய பணியை நிரந்தரமாக்க வேண்டியது அரசின் கடமையாகும். 

இப்பொழுது 14 கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்ட  அறிவிப்பை கொடுத்திருக்கிறார்கள். டாஸ்மாக் ஊழியர்களின் இப்போராட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சி தனது ஆதரவை அளிக்கிறது. தமிழக அரசு, பணிபுரியக்கூடிய 26,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை நிரந்தரமாக்கி, அவர்களை அரசு ஊழியராக்க  வேண்டும். அவர்களுக்குச் சம்பள உயர்வு அளிக்கப்பட வேண்டும். அவர்கள் பணியின் போது மரணம் எய்தினால் ரூ.50 இலட்சம் நஷ்ட ஈடாக வழங்கப்பட வேண்டும். அதுபோல, டாஸ்மாக் கடைகளை அந்தந்த பகுதியில் ஆளுங்கட்சியின் கட்டிடங்களில் நடத்தாமல், பொதுவான இடங்களில் மட்டுமே கடைகளை இயக்க வேண்டும். 

ஆளுங்கட்சிப் பிரமுகர்களின் கட்டிடங்களில் டாஸ்மாக் கடைகளை இயக்குவதால் தரமற்ற போலி மதுபான விற்பனைக்குச் சாதகமாகிறது. எனவே, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றவும், டாஸ்மாக் கடைகளை ஆளுங்கட்சியின் பிடியிலிருந்து விடுவிக்கவும் 25.08.2020 அன்று டாஸ்மாக் ஊழியர்கள் நடத்தும், 2 மணி நேர அடையாள கடையடைப்பு போராட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சி தனது ஆதரவை அளிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக