வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

சாமானியர்கள் கேள்வி கேட்கக்கூடிய வாய்ப்புள்ள கிராமசபை கூட்டங்களை ரத்து செய்ததை கண்டிக்கிறோம். - E.R.ஈஸ்வரன்


சாமானியர்கள் கேள்வி கேட்கக்கூடிய வாய்ப்புள்ள கிராமசபை கூட்டங்களை ரத்து செய்ததை கண்டிக்கிறோம். - E.R.ஈஸ்வரன்

ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடக்கும் போது தான் கிராமத்தில் என்ன பணிகள் நடக்கிறது என்றும், ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி எப்படி செலவு செய்யப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றியும் சாமானிய கிராம மக்களுக்கு அறிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும். ஊராட்சிகளில் நடக்கின்ற தரமில்லாத பணிகளை சுட்டிக்காட்டி கேள்வி கேட்கவும் வாய்ப்பாக அமையும். கடந்த கிராமசபை கூட்டங்களில் ஊராட்சிகளில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகளை மக்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. கிராம மக்களின் முக்கியத்துவம் வாய்ந்த கிராமசபை கூட்டங்களை தனிமனித இடைவெளியுடன் நடத்துவதற்கு அனுமதித்திருக்க வேண்டும்.

1. முதலமைச்சரும், அமைச்சர்களும் புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கும், முடிந்த திட்டத்தை திறந்து வைப்பதற்கும் கூட்டம் சேர்த்துகிறார்களே அதனால் கொரோனா பரவாதா ?. 

2. முதலமைச்சர் மாவட்டங்களுக்கு ஆய்வு கூட்டத்திற்காக செல்லும் போது மாவட்ட எல்லையில் வரவேற்பு கொடுக்க திரட்டுகின்ற கூட்டாத்தால் கொரோனா பரவாதா ?.

3.அமைச்சர்கள் ஆயிரக்கணக்கானவர்களை கூட்டி கூட்டங்கள் நடத்தும் போது கொரோனா பரவாதா ?.

4. டாஸ்மாக்கை திறந்துவிட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக கூடும் போது கொரோனா பரவாதா ?. 

5.அதிகாரிகளே திறந்து வைக்க வேண்டிய நீர்த்தேக்க அணைகளை  பாசனத்திற்காக திறக்கிறோம் என்று தனிநபர் இடைவெளி இல்லாமல் நிகழ்ச்சிகளை அமைச்சர்கள் நடத்தும் போது கொரோனா பரவாதா ?. 

6.எல்லா ஒன்றியங்களிலும் அதிமுகவினுடைய கட்சி கூட்டங்கள் கட்டுப்பாடுகளை மதிக்காமல் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் கொரோனா  பரவாதா  ?.

7.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து மருத்துவமனைகளில் இருந்து திரும்புகின்ற அமைச்சரை வரவேற்க சேர்க்கின்ற கூட்டத்தால் கொரோனா பரவாதா ?.

கொரோனா பரவல் என்ற காரணத்தை காட்டி சாதாரண மக்களுடைய கேள்விகளிலிருந்து அரசு தப்பிக்க பார்க்கிறது. கிராம ஊராட்சிகளில் எதிர்க்கட்சிகளை சார்ந்தவர்கள் தலைவர்களாக இருந்தாலும் ஆளுங்கட்சியினருடைய தலையீடு அதிகமாக இருக்கின்றது. அதை பற்றிய புகார்கள் தமிழகம் பூராவும் குவிந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கிராமசபை கூட்டங்களை தவிர்த்திருப்பது ஆட்சியாளர்கள் உள்நோக்கம் கொண்டு செயல்படுவதாகவே புரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக