சனி, 15 ஆகஸ்ட், 2020

நாட்டில் மிகப்பெரிய வன்முறையை கட்டவிழ்த்து விடுவதற்கான முன்னோட்ட நடவடிக்கையாகவே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. - டாக்டர் K. கிருஷ்ணசாமி


கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் மீது நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது!
‘நாட்டில் மிகப்பெரிய வன்முறையை கட்டவிழ்த்து விடுவதற்கான முன்னோட்ட நடவடிக்கையாகவே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.’

கர்நாடக மாநிலம் பெங்களூர் மாநகராட்சிக்கு உட்பட்ட புலிகேசிநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. அகண்ட ஸ்ரீனிவாசமூர்த்தி ஆவார். அவருடைய பூர்வீகம் கோவை மாவட்டம் ஆகும். போயர்கள் என்று அழைக்கப்படக்கூடிய கட்டிட தொழில் செய்யும் மிகமிக பின்தங்கிய சமுதாயத்தைச் சேர்ந்த இந்து-தமிழர் ஆவார். 

நேற்று முன்தினம் அவர் மீதும் அவருடைய குடும்பத்தின் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அவருடைய வீட்டின் அருகில் குடியிருந்த அவருடைய உற்றார் உறவினர் வீடுகளும் சூறையாடப்பட்டு, அவர்களுடைய சொத்து சுகங்களும் களவாடப்பட்டுள்ளன. ஸ்ரீனிவாசமூர்த்தி மற்றும் அவருடைய உறவினர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 

கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு அவருடைய சகோதரி மகன் நவீன் என்பவருடைய முகநூல் பக்கத்தில் இருந்து இஸ்லாமியர்கள் குறித்து செய்தி வந்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரண்டு தினங்களுக்கு முன்பு, இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டு காவல் நிலையத்திற்கு மனு கொடுக்க வந்ததாகவும், அந்த நேரத்தில் அந்த பகுதியில் இருந்த இரண்டு காவல் நிலையங்கள், ஸ்ரீனிவாசமூர்த்தி அவர்களின் வீடு, அவரது உற்றார் உறவினர்களின் வீடுகள், ஆயிரக்கணக்கான வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. 

முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் தாங்கள் சார்ந்த இனத்தையோ, மதத்தையோ குறிப்பிட்டு செய்திகள் வருகின்ற போது அது குறித்து அந்தந்தப் பகுதி காவல் நிலையங்கள் மற்றும் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்க வேண்டும். அதை எந்த நபர் அனுப்பினாரோ? அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியே புகார்கள் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் ஒன்றரை மாதத்திற்கு முன்பு அனுப்பிய ஒரு செய்திக்கு அப்பொழுதே புகார் அளிக்காமல், மாதக்கணக்கில் காலம் தாழ்த்தி அதுவும் பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டிக் கொண்டு வந்து புகார் கொடுக்க வந்துள்ளனர்.  யார் மீது புகார் அளிக்க வந்தார்களோ? அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதை விட்டுவிட்டு, எளிய சமுதாயத்தை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீனிவாசமூர்த்தியை குறிவைத்து தாக்கியதனுடைய நோக்கம் என்ன? பின்னணி என்ன? 

நாட்டில் மிகப்பெரிய வன்முறையை கட்டவிழ்த்து விடுவதற்கான முன்னோட்ட நடவடிக்கையாகவே இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. எனவே ஸ்ரீனிவாசமூர்த்தி அவர்கள் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடத்த காரணமாக இருந்த வன்முறை கும்பல் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அவர்களுடன் தொடர்புடையவர்கள் எங்கு பரவியிருந்தாலும், கண்டறிந்து வேரோடு களைய வேண்டிய கடமை கர்நாடக மாநில அரசுக்கு மட்டுமல்ல, மத்திய அரசுக்கும் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

இவ்வளவு பெரிய சம்பவம் நடந்திருக்கிறது. அவர் சார்ந்த கட்சியிடமிருந்தும் எவ்வித  கண்டன குரலும் எழவில்லை. அவர் தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட தமிழர். எளிய சமுதாயத்தைச் சேர்ந்தவர். இன்னும் சிலருடைய பார்வையில் திராவிடர். ஆனால் தமிழகத்திலிருந்து யாருமே அவருக்காகக் குரல் கொடுக்காததும் அரசியல் என்பது வெட்ட வெளிச்சமாகிறது. தமிழகம் மட்டுமல்ல, வேறு மாநில மட்டுமின்றி, உலகம் முழுவதும் பிறப்பால், மொழியால், இனத்தால், நிறத்தால், பொருளாதாரத்தால் சுரண்டப்பட்ட மக்களுக்காக புதிய தமிழகம் கட்சி ஓங்கி குரல் கொடுக்கும் என்ற அடிப்படையில் ஸ்ரீனிவாசமூர்த்தி அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு புதிய தமிழகம் கட்சி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. புதிய தமிழகம் கட்சி அவருக்கும், எளிய மக்கள் எவருக்கும் என்றும் துணை நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 

அவர் மீதும், அவரது உற்றார் உறவினர்கள் மீதும் தாக்குதல் நடத்தி சொத்து சுகங்களை சூறையாடிச் சென்றவர்களை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்பது மட்டுமல்லாமல், சூறையாடிய கலவரக்காரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து, ஸ்ரீனிவாசமூர்த்திக்கு நட்ட ஈடு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக