ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

திரைப்படத் தயாரிப்புக்கான தர நிலைப்படுத்திய செயல்பாட்டு நடைமுறைகளை வெளியிட்டது தகவல் ஒலிபரப்பு அமைச்சகம்

 

திரைப்படத் தயாரிப்புக்கான தரநிலைப்படுத்திய செயல்பாட்டு நடைமுறைகளை வெளியிட்டது தகவல், ஒலிபரப்பு அமைச்சகம்

திரைப்படத் தயாரிப்புகள் நமது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்போது கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவல் உள்ள சூழ்நிலையில், தங்கள் பணிகளை மீண்டும் தொடங்கி, தொடரும் போது, திரைப்படத் தயாரிப்பில் தொடர்புடைய பல்வேறு துறையினரும், நோய்த் தொற்று பரவாமல் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

திரைப்படத் தயாரிப்புப் பணிகளில் மேற்கொள்ள வேண்டிய, தரநிலைப்படுத்திய செயல்பாட்டு நடைமுறைகள் (எஸ்.ஓ.பி.) மற்றும் வழிகாட்டி கோட்பாடுகளை, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஆலோசனையுடன், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. இவற்றை தகவல் ஒலிபரப்பு அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் இன்று புதுடெல்லியில் வெளியிட்டார். கட்டுப்பாட்டுப் பகுதியில் அனுமதிக்கப்படாத, அத்தியாவசியம் அல்லாத செயல்பாடுகளின் போது பின்பற்றும் வழிமுறைகள், நோய் தொற்றுவதற்கு அதிக ஆபத்து உள்ள அலுவலர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை அம்சங்களைப் பின்பற்றுதல், முகக் கவச உறைகள் பயன்படுத்துதல், அடிக்கடி கைகளைக் கழுவுதல், கைகளில் கிருமிநாசினிகள் பயன்படுத்துதல் உள்ளிட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப அமைச்சகம் அளித்துள்ள பொதுவான கோட்பாடுகளும் இதில் அடங்கியுள்ளன. திரைப்படத் தயாரிப்பின் போது பயன்படுத்தும் சுவாச இடைவெளி வசதிகள் பற்றியும் இதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

சர்வதேச நடைமுறைகளைக் கருத்தில் கொண்டு பொதுவான எஸ்.ஓ.பி.களை இந்த அமைச்சகம் உருவாக்கியுள்ளது. உடல் அளவில் இடைவெளியைப் பராமரித்தல், படப்பிடிப்புத் தளங்கள் மற்றும் இடங்களுக்குள் வருதல் மற்றும் வெளியேறுதலுக்கு குறிப்பிட்ட நுழைவாயிலைப் பயன்படுத்துதல், கிருமிநீக்கம் செய்தல், அலுவலர்கள் பாதுகாப்பு, நேரடித் தொடர்புகளைக் குறைந்தபட்ச அளவுக்குள் வைத்துக் கொள்வது, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தனிமைப்படுத்தல் உள்ளிட்ட பயணத்துக்கான வழிகாட்டுதல்களைப் பின்பற்றுதல் உள்ளிட்ட அம்சங்கள் இதில் அடங்கியுள்ளன. குறிப்பாக, முகக் கவச உறை அணிவதைப் பொருத்த வரையில், சர்வதேச நடைமுறைகளைப் போல, கேமராவுக்கு எதிரே நடிப்பவர்களைத் தவிர மற்ற அனைவரும் அதை அணிந்திருக்க வேண்டும் என்று இதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

வழிகாட்டும் கோட்பாடு மற்றும் எஸ்.ஓ.பி. ஆகியவற்றை அனைத்து மாநிலங்களிலும் படப்பிடிப்புகள் தொடங்கும் போது, அந்த மாநிலங்களும், இதில் தொடர்புடையவர்களும் பின்பற்ற வேண்டும்.

வழிகாட்டு நெறிகளை வெளியிட்ட மத்திய அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர், ``சர்வதேச நியதிகளைப் பின்பற்றி இந்த எஸ்.ஓ.பி.கள் உருவாக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் காரணமாக சுமார் 6 மாதங்களாக முடங்கி இருக்கும் திரைத்துறையினருக்கு இது புதிய ஊக்கம் தருவதற்கு உதவிகரமாக இருக்கும். அமைச்சகத்தின் இந்த நடவடிக்கையை அனைவரும் வரவேற்பார்கள்'' என்று கூறினார். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறைகள் மூலம் பெருமளவிலான மக்கள் வேலைவாய்ப்பு பெறுவதால், இந்த நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அனைத்து மாநிலங்களும் இந்த எஸ்.ஓ.பி.களை ஏற்றுக் கொண்டு அமல் செய்யும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். தேவை இருந்தால் மாநிலங்களும் கூடுதல் அம்சங்களை இதில் சேர்த்துக் கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், உள்துறை அமைச்சகங்களின் ஆலோசனைகளைப் பெற்று இந்த எஸ்.ஓ.பி. வெளியிடப்படுவதாக அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக