திங்கள், 10 ஆகஸ்ட், 2020

"இயற்கையை கருவறுக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு - 2020-ஐ (EIA-2020) மத்திய அரசு உடனே திரும்பப்பெற வேண்டும்!.” - வ.கௌதமன்


"இயற்கையை கருவறுக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு - 2020-ஐ (EIA-2020) மத்திய அரசு உடனே திரும்பப்பெற வேண்டும்!.” - வ.கௌதமன்

"மனிதர்கள் வாழத்தகுந்த கிரகமாக பூமியை மாற்றவேண்டும்" இந்திய ஒன்றியத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் மதிப்புமிகு. அப்துல்கலாம் அவர்கள் இறப்பதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்பு ஆற்றிய உரையின் தலைப்பு இது. ஈவு இரக்கமற்ற முறையில் மனிதர்கள் இயற்கையை சிதைத்தனால்தான் இன்று கொடூர கொரோனா மனித குலத்தை கொத்துக் கொத்தாக வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. அதில்கூட பாடம் கற்றுக்கொள்ளாத இந்திய ஒன்றிய அரசு இயற்கையை கருவறுக்கும்  இ.ஐ.ஏ -2020 என்கிற வரைவைக் கொண்டு வருவது மனித குலத்திற்கு எதிரானது என்பதை கடும் கண்டனத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

1984 டிசம்பர் 2 மற்றும் 3 தேதிகளில் போபாலில் விஷவாயு கசிந்து 16,000 உயிர்கள் பலி எடுக்கப்பட்டிருக்கிறது. 5,58,225 நபர்கள் கடுமையான ஊனமடைந்திருக்கிறார்கள். அந்த விபத்து தந்த படிப்பினையால் இந்திய ஒன்றிய அரசு 1994 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு சட்டத்தை உருவாக்குகிறது. கடந்த மே மாதம் கூட விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிந்து மயக்கமுற்ற நிலையில் கொத்து கொத்தாக மனித உயிர்கள் சாய்ந்ததை நாம் எல்லோரும் பார்த்தோம். சம்பந்தப்பட்ட அந்த நிறுவனம் முன் அனுமதி பெறவில்லை என்றும் 100% விதிமீறலில் ஈடுபட்டிருக்கிறது என்றும் பசுமை தீர்ப்பாயம் குற்றம்சாட்டியது. நிலைமை இப்படி இருக்க மக்கள் கருத்தே தேவையில்லை என்று கூறி ஒரு சட்டம் இயற்றி அதிரடியாக கொண்டுவருவது எத்தகைய அறம்? இங்கு நடப்பது மக்களாட்சி என்றால் எப்படி ஏற்பது?

ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கும் 57% கார்ப்ரேட் நிறுவனங்கள் எந்தவித அனுமதியும் இல்லாமல்தான்   இன்றுவரை இயங்கி இயற்கையை அழித்துக் கொண்டிருக்கின்றன. புதிய சுற்றுச் சூழல் தாக்க வரைவு 2020-ன் படி தொழிற்சாலைகள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம் முப்பது நாட்களிலிருந்து  இருபதாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை 50,000 சதுர அடிக்குமேல் கட்டப்படும் கட்டிடங்களுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டுமென்றிருந்ததை 1,50,000 சதுர அடிக்குள் கட்டப்படும் எந்த கட்டிடத்திற்கும்  அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்றும் சொல்லப்படுவது எத்தகைய நியாயம்?
மேலும் நேரடியாக கட்டுமானப் பணிகளை அந்தந்த நிறுவனங்களே தொடங்கலாமென்றும் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டறிக்கை இல்லாமலே எந்த திட்டத்தையும் நடைமுறைப்படுத்தலாமென்றும், இது மட்டுமல்லாது சம்பந்தப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் மீது ஏதேனும் புகார் இருப்பின் அதனையும் அங்குள்ள அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களே புகாரளிக்க வேண்டுமென்றும், வெளிநபர் எவரும் இதுகுறித்து புகாரளிப்பதோ, இதற்கெதிரான போராட்டங்களை முன்னெடுப்பதோ கூடாது என்பதும்தான் இ.ஐ.ஏ-2020 வரைவின் முக்கிய அம்சமாகும். தான் தோன்றித்தனமாக இப்படி என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற ஆபத்தான சுதந்திரத்தை மத்திய பாஜக அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளித்திருக்கிறது.  குடியுரிமை திருத்த சட்டமான சி.ஏ.ஏ சட்டத்தை விட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவான இ.ஐ.ஏ-2020 ஆயிரம் மடங்கு கொடூரமானது. 

மக்கள் உயிருக்குப் பயந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்நிலையில் இப்படியொரு சட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டிய அவசியம் என்ன? இங்கிருக்கும் அரசுகள் மக்களுக்கானதா? அல்லது கார்ப்பரேட் முதலாளிகளுக்கானதா? தேவையற்ற144 ஊரடங்கு சட்டத்தை போட்டுவிட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதும், எங்கள் மண்ணின் வளங்களை கொள்ளை அடிப்பதற்கு தொடர்ந்து நேர்மையற்ற சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்தத் துடிப்பதும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ்ப் பேரரசு கட்சி அதன் தோழமை கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் முதல் கட்டமாக மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகளிடம் இத்தீய வரைவினை விளக்கி அவர்கள் கெடு விதித்திருக்கும் இம்மாதம் 11 ஆம் தேதி வரை நமது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக மத்திய அரசுக்கு மின்னஞ்சல் அனுப்பும் செயற்பாட்டினை இன்று முதல் தொடங்குகிறோம். நாம் அனைவரும் புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு -2020 ஐ மத்திய அரசு உடனடியாத திரும்பப் பெற எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய மின்னஞ்சல் இணைப்பு

மக்களின் எதிர்ப்பு நிலை அறிந்து மத்திய அரசு பேராபத்தான இப்புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு- 2020 ஐ உடனடியாக திரும்பப் பெற்று இயற்கை வளங்களை காப்பதற்கான முன்னெடுப்பில் இறங்க வேண்டும். தமிழக அரசும் நொடி கூட தாமதிக்காமல் அமைச்சரவையைக் கூட்டி இத்தீய வரைவிற்கு எதிராக கடுமையான தீர்மானம் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் இயற்கைக்கு எதிரான இந்தப் போரில் தமிழ்ப் பேரரசு கட்சி மாணவர்கள், இளைஞர்களோடு  விவசாயிகளையும் திரட்டி  தமிழக மக்களுடன் கைகோர்த்து அதிகார வர்க்கத்தின் அத்துமீறிய இந்த வரைவிற்கு முடிவுகட்ட சமரசமற்ற முறையில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்ட வடிவத்தினை கையிலெடுப்போம் என்பதனை  உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக