திங்கள், 17 ஆகஸ்ட், 2020

புதிய கல்விக் கொள்கை இந்தியாவை உலகப் படிப்பு மையமாக மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.- திரு.எம்.வெங்கையா நாயுடு


ஐஐடி மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் சமூகப் பிரச்சினைகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என குடியரசுத் துணைத்தலைவர்     திரு.எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தல்

ஐஐடிக்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி சமுதாயத்துக்கு பொருத்தமானதாக இருப்பதுடன், பருவநிலை மாற்றம் முதல் சுகாதாரப் பிரச்சினைகள் வரை மனிதகுலம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் கவனம் செலுத்துவதாகவும் இருக்க வேண்டும் என குடியரசுத் துணைத்தலைவர் திரு. எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்

தில்லி ஐஐடி-யின் வைர விழாக் கொண்டாட்டத்தைக் காணொளிக் காட்சி மூலம் தொடங்கிவைத்த அவர், இந்தியக் கல்வி நிறுவனங்கள், உலகின் சிறந்த நிறுவனங்களுடன் போட்டியிடும் அளவுக்கு சிறந்து விளங்க வேண்டுமெனில், நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு, ஏற்ற  நிலைத்த தீர்வுகளை வகுத்து, தங்களைச் சுற்றியுள்ள சமுதாயத்துக்குத் தாக்கம் ஏற்படுத்தத் துவங்க வேண்டும் என்று கூறினார்.

சமுதாயப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதில் கவனம் செலுத்தும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களில் அதிக முதலீடு தேவை என வலியுறுத்திய குடியரசுத் துணைத் தலைவர், தனியார் துறையினர், கல்வித்துறையினருடன் சேர்ந்து, இத்தகைய திட்டங்களைக் கண்டறிந்து, அவற்றுக்குத் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆராய்ச்சிகள் மக்களின் வாழ்க்கையை வசதியாகவும், விரைந்து முன்னேற்றுவதிலும் கவனம் செலுத்துவதுடன், உலக நிலைக்கு ஏற்ற வகையில் அவற்றை உறுதி செய்யவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கிராமப்புற இந்தியா மற்றும் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள் மீது ஐஐடி மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய குடியரசுத் துணைத்தலைவர் திரு. நாயுடு, விவசாய உற்பத்தியை அதிகரிப்பதுடன், ஊட்டச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவை உற்பத்தி செய்வதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

உயர் கல்வி நிறுவனங்கள் ஒரு வட்டத்துக்குள் செயல்படாமல், தொழில் துறையினருடன் கூட்டுறவை ஏற்படுத்தி, நவீன தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்துறை நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு வழிகாட்டுபவர்களாக செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.’’ இத்தகைய கூட்டுறவு, திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், விரைவான பயன்களை ஏற்படுத்தவும் பெரிதும் உதவும்’’ , என்று அவர் கூறினார்.

புதிய கல்விக் கொள்கை இந்தியாவை உலகப் படிப்பு மையமாக மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது குறித்து மகிழ்ச்சி வெளியிட்ட திரு. நாயுடு,  உலக அளவில் 500 கல்வி நிறுவனங்களில், இந்திய நிறுவனங்கள் எட்டு மட்டுமே இடம் பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்த நிலை மாற வேண்டும் என்றும், நமது உயர்கல்வி நிறுவனங்களின் கல்வி தரமானதாக இருக்க, அதிக முன்னேற்றத்தைக் கொண்டுவர , அரசுகள், பல்கலைக்கழகங்கள், கல்வியாளர்கள், தனியார் துறையினர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் ஒன்றுபட்ட, கூட்டுமுயற்சி  அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பல்வேறு தொழில்நுட்பக் களங்களில், உலகத் தலைமை ஏற்பதற்கான ஆற்றலும், மக்கள்தொகை அனுகூலமும், உயர் திறன் மிக்க இளைஞர் சக்தியும், இந்தியாவுக்கு உள்ளது என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத்தலைவர், “இப்போதைய அவசியத்தேவை, தரமான கல்வியை வழங்குவதுதான்’’,  என்று கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக