வியாழன், 13 ஆகஸ்ட், 2020

"இந்திய தேசமும், தமிழ் சமுதாயமும் வறுமை, பிணி, சாதிய, சமூகக் கொடுமை, ஊழல் எனும் எண்ணற்ற கொடுமைகளில் சிக்கித் தவிக்கிறது", இளைஞர்களே இந்தியாவுக்கு வழிகாட்டுங்கள்! - DR. K. கிருஷ்ணசாமி

இளைஞர்களே இந்தியாவுக்கு வழிகாட்டுங்கள்!

கோடான கோடி தமிழக இளைஞர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் அமையவும் வளமான, வலுவான தமிழகத்தையும், இந்திய தேசத்தையும் கட்டியமைக்கவும் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இன்றைய இளைஞர்கள் தான் நாளைய மருத்துவர்கள், சட்ட நிபுணர்கள், பொறியியல் வல்லுனர்கள், பொருளாதார மேதைகள், தொழில் முனைவோர், நேர்மையான காவல்துறையினர், கல்வியாளர்கள்,  விளையாட்டு வீரர்கள், இசை உள்ளிட்ட பல்கலை நிபுணர்கள், பத்திரிகையாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள் என பல துறைகளிலும் தலைசிறந்து விளங்கவும், வழிகாட்டிகளாகத் திகழவுவும், தலைமை தாங்கவும் தகுதி வாய்ந்தவர்கள் ஆவர். 

இந்திய தேசமும், தமிழ் சமுதாயமும் வறுமை, பிணி, சாதிய, சமூகக் கொடுமை, ஊழல் எனும் எண்ணற்ற கொடுமைகளில் சிக்கித் தவிக்கிறது. ஆண்டொன்று போனால் வயதொன்று போகும். எனவே வயதால் மட்டுமே அன்றி, தகுதியாலும், திறமையாலும், நல்ல குணங்களாலும், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் மனிதநேய அடிப்படை அம்சங்களாலும் அடையாளப்படுத்தக் கூடியவர்களாக இருந்தால் மட்டுமே, வருங்கால இந்திய தேசத்திற்கு வழிகாட்டக் கூடியவர்களாக விளங்கமுடியும். தாங்கள் எந்த அடிப்படையில் உயர்வு பெற்றாலும், வளர்ச்சி பெற்றாலும், அந்த உயர்வையும், வளர்ச்சியையும் பிரிவினையற்றும், பாகுபாடற்றும் மக்களுக்கும், தேசத்திற்கும் அர்ப்பணிக்கக் கூடியவர்களாக பரிணமிக்க வேண்டும் என்பதே சர்வதேச இளைஞர் தினத்தன்று நமது இளைஞர்களுக்கு நான் வைக்கக்கூடிய வேண்டுகோளாகும்.

போலித்தனங்கள் ஒழிக்கப்பட வேண்டும்; கயமைத்தனங்கள் கலையப்ப்பட வேண்டும்; வீண் வீராப்புக்கள் ஒழிக்கப்பட வேண்டும்; ஊழலும், சுரண்டலும்  துடைத்தெறியப்பட வேண்டும்; பிறப்பு, இனம், மொழி, நிறம், பொருளாதார பேதம் என்ற அனைத்து வேறுபாடுகளும் வேரோடு பிடுங்கி எறியப்பட வேண்டும். இளைஞர்கள் சாதிய, மத, மது, மாது, காமம், களவு, கொலை போன்ற எவ்வித தீங்கும் தங்களை தீண்டாமல் பாதுகாத்துக் கொண்டு, உயரிய குணங்களோடு இந்திய தேசத்திற்கு வழிகாட்டிகள் எனும் விடிவெள்ளிகளாக மிளிர வேண்டும் என்பதே எனது விருப்பமும், வேண்டுகோளும், வாழ்த்துக்களும் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக