வியாழன், 20 ஆகஸ்ட், 2020

பல்வேறு மொழி வழி தேசிய இன நாடுகளின் (மாநிலங்கள்) ஒன்றியத்தில் போய் ‘ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு’ என்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானது! - தி.வேல்முருகன்

 

மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கும் வங்கிப் பணிகளுக்கும் இனி ஒன்றிய அரசின் பொது நுழைத் தேர்வாம்! 

பல்வேறு மொழி வழி தேசிய இன நாடுகளின் (மாநிலங்கள்) ஒன்றியத்தில் போய் ‘ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு’ என்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானது! 

இதற்கு நிலையான தீர்வாக, மாநிலங்கள் தன்னாட்சி பெற வேண்டும் அல்லது ஒரே நாடு என்பதிலிருந்து விடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! 

பிரிட்டிஷார் அன்று, பல்வேறு மொழிகள் பேசும் தேசிய இனங்கள் கொண்ட நாடுகள் - சமஸ்தானங்கள் - இனக்குழுக்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து வணிகச் சந்தைக்காக உருவாக்கியதுதான் இந்தியா என்ற நாடு. ஆனால் சுதந்திரம் பெற்றபின் தனி அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு, அதில் மாநிலங்களின் ஒன்றியம் (Union of States) எனக் குறிப்பிடப்பட்டு, கூட்டாட்சி முறை வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகாறும் வந்த அரசுகள் இதைச் சிதைக்க பெரிதாக முயற்சி எதுவும் மேற்கொண்டதில்லை. ஆனால் ஆர்எஸ்எஸ்-பாஜக மோடி அரசு வந்ததிலிருந்து கூட்டாட்சி முறை என்ன, அரசமைப்புச் சட்டத்துக்கே வேட்டு வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. மோடி எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் அதைத் தெளிவாக்குகிறது. 

அப்படி ஒரு நடவடிக்கைதான் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் நேற்று (19.08.2020) ஒப்புதல் வழங்கிய “ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு” எனும் மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கும் வங்கிப் பணிகளுக்கும் பொது நுழைத் தேர்வு ஆகும். இந்தக் கொரோனா காலத்தில் மக்கள் சாவதைப் பற்றிய கவலையே இல்லாமல் இத்தகைய நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டிருக்கிறார் மோடி. 

இந்த ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு முறையின் முதல் கட்டமாக, ரயில்வே பணியாளர் தேர்வு, வங்கிப் பணியாளர் தேர்வு, மத்திய அரசுப் 

பணியாளர் தேர்வு ஆகியவற்றிற்கு  இந்த ஒரே நுழைவுத் தேர்வினை ஆன்லைன் மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

நாட்டிலுள்ள அனைத்துப் பணிகளுக்குமே பொது நுழைவுத் தேர்வு; அதை ஒன்றிய அரசே நடத்தும் என்பதில் மாநிலங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றாகிறது. அவ்வளவு ஏன், மாநிலங்களுக்கான அவசியமே இல்லை; எந்த வேலையுமில்லாத மாநிலங்களைப் பேசாமல் கலைத்துவிடலாம் என்பதுதான் இதிலிருந்து தெரியவரும் அல்லது இது சொல்லாமல் சொல்லும் செய்தி. இந்தச் செய்திக்கு வடிவம் கொடுக்க, நேரடியாக இல்லாமல் மறைமுகமாகச் செய்யும் முயற்சிதான் பொது நுழைவுத் தேர்வு என்பது. கல்வியைச் சந்தைமயமாக்குவதன் மூலம், அந்தச் சந்தையில் பொது நுழைவுத் தேர்வே விலையேறப் பெற்ற பொருளாகிவிடும்; அதனால் அதற்கு வகைதொகையற்ற பணத்தைக் கொட்டியழ வேண்டும். கல்வி அங்கே இரண்டாம் பட்சம், மூன்றாம் பட்சம் அல்ல; அர்த்தமற்ற பொருளாகவே ஆகிவிடும். 

என்றைக்கு “நீட்” வந்ததோ அன்றே இந்தக் கல்விச் சந்தையும் களைகட்டிவிட்டது. அதற்கான முதன்மை உதாரணம் வடக்கு டெல்லியிலுள்ள முகர்ஜி நகர் ஆகும். இந்த முகர்ஜி நகரில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் உள்ளன. இவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு விடுதி (Hostel) வசதியும் உண்டு; அப்படியென்றால் கல்லூரிக்கு முறையகச் செல்வார்களா என்றால் அது கேள்விக்குறிதான். முகர்ஜி நகரின் முக்கியத்துவம், அங்கு குடிமைப் பணித் தேர்வுகளுக்காக (ஐஏஎஸ் தேர்வு) மட்டும் சுமார் 3 லட்சம் பேர் பயில்கிறார்கள். 

டெல்லியின் முகர்ஜி நகர் தவிர, சண்டிகர், அலகாபாத், லக்னோ, மதுரா, பாட்னா, கயை, மும்பை, புனே, ஆமதாபாத், சூரத், கொல்கத்தா, அசன்சோல், புவனேஸ்வர், போபால், ஹைதராபாத், விசாகப்பட்டினம், பெங்களூரு, திருவனந்தபுரம், சென்னை என்று நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் புற்றீசல்போல் பயிற்சி மையங்கள் முளைத்திருக்கின்றன. மிகச் சிறிய மாநிலமான ஜார்கண்டின் தலைநகர் ராஞ்சியிலும் போட்டித் தேர்வு பயிற்சி அதிகம் உள்ளன. அங்குள்ள ஓர் ஐந்தடுக்குக் கட்டிட வளாகத்தின் பெயர் ‘எஜுகேஷன் மால்.’ இந்தியக் கல்வித் துறை, கல்விச் சந்தையாகத்தான் உள்ளது என்பதற்கு இதற்கு மேல் வேறு என்ன சான்று வேண்டும்? 

நீட் தேர்வு என்பது சாமானிய மக்களின் குழந்தைகளை வெளியே தள்ளும் தேர்வுமுறை என்பதை அம்பலப்படுத்தினர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் பி.வேல்முருகன். தமிழக அரசிடம் தரவுகளைக் கேட்டுப் பெற்ற இந்த இரு நீதிபதிகளும், அரசு வழக்கறிஞரைப் பார்த்துக் கேட்ட ஓர் அரிய கேள்வி: “தமிழ்நாட்டின் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2019இல் 3,081 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இவர்களில் 98.4% பேர் தனியார் பயிற்சி மையங்களில் படித்தவர்கள்; அவர்களில் அதிகம் பேர் 2ஆவது அல்லது 3ஆவது முறையாகத்தான் நீட் எழுதித் தேர்வானவர்கள். ஒரு பொதுத் தேர்வு என்றால் அது அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை அளிக்கும் விதத்தில் இருக்க வேண்டும். ஆனால் இந்தத் தேர்வு அப்படி இல்லை. தனியார் பயிற்சி மையங்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கவே இது வழிவகுக்கிறது. இந்தத் தேர்வுமுறையை ஏன் நீங்கள் திரும்பப்பெறக் கூடாது?” 

மோடி அரசின் இந்தப் பொது நுழைவுத்தேர்வு முறை, நாடு முழுவதும் உள்ள மாணவர்களை ஒன்றாக இணைக்கும் திட்டமாகும். அப்படி இணைப்பது சந்தைப்படுத்தலுக்கு மிக அவசியம். இந்தக் கல்விச் சந்தை மீது கண் வைத்திருப்பது ‘ரிலையன்ஸ்’ தொழில் சாம்ராஜ்யமாகும். மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் கல்வி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ‘எம்பைப்’ நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்க ரிலையன்ஸ் ஒப்பந்தத்தம் போட்டிருக்கிறது. “நாடு முழுவதும் உள்ள 19 லட்சம் பள்ளிகள், 58,000 கல்லூரிகளைத் தொழில்நுட்பம் வழி இணைக்க இலக்கு வைத்திருக்கிறோம்” என்றார் ஆகாஷ் அம்பானி. 

ஆக, போட்டித் தேர்வு பயிற்சி மையத் தொழிலில் கட்டற்ற கோடிகள் புரள்வதால், அந்தச் சந்தையை ஒருமுகப்படுத்தி தம் கைக்குக் கொண்டுவரப் பார்க்கிறது ரிலையன்ஸ். அதற்கு இந்திய இணையக் கல்வித் துறை முக்கியமான கருவியாக தமக்கு உதவும் என்றும் நம்புகிறது ரிலையன்ஸ். 

வெறும் 55 லட்சம் மக்கள்தொகையே கொண்ட பின்லாந்து நாடு, தொடக்கக் கல்வி முதல் மருத்துவக் கல்வி வரை தாய்மொழியான பின்னிஷ் மொழியில் அளித்து, கல்வியில் உலகின் முதன்மை நாடாகவும் உலகின் வளமிக்க நாடுகளில் ஒன்றாகவும் திகழ்கிறது. உலகின் பல முன்னணி நாடுகளைப் போல நாமும் கல்வியை உள்ளூர்மயமாக்க வேண்டும்; மக்களுக்கு நெருக்கமான உள்ளாட்சிகளிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு என்று சொல்லி கல்வியை மையப்படுத்திச் சிறுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது; பெரும்பான்மை மக்களை அதிகாரமற்றவர்களாக்கிக் கொண்டிருக்கிறது மோடி அரசு. 

பொது நுழைவுத் தேர்வு முறையானது உண்மையாகவே பொதுப் பண்பைப் பெற்றிருக்கிறதா அல்லது தனித்த பண்பைப் பெற்றிருக்கிறதா? ஏனென்றால் அறிவு ஒருமுகப்பட்டதல்ல, பன்முகப்பட்டது. எனவே அறிவை மதிப்பிடும் தேர்வு மட்டும் எப்படி ஒருமுகப்பட்டதாக இருக்க முடியும்? எல்லா வகையான நிபுணத்துவத்தையும் சோதிக்க ஒரே மாதிரியான தேர்வுகள் எப்படி மதிப்பீட்டு முறையாக இருக்க முடியும்? 

மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கும் வங்கிப் பணிகளுக்கும் இனி ஒன்றிய அரசின் பொது நுழைத் தேர்வாம்! 

பல்வேறு மொழி வழி தேசிய இன நாடுகளின் (மாநிலங்கள்) ஒன்றியத்தில் போய் ‘ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு’ என்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானது! 

இதற்கு நிலையான தீர்வாக, மாநிலங்கள் தன்னாட்சி பெற வேண்டும் அல்லது ஒரே நாடு என்பதிலிருந்து விடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக