வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

74வது விடுதலை நாள் கொண்டாடும் இந்நேரத்தில் காஷ்மீர் மாநிலம் கொடும் சிறைக் கூடமாக மாற்றப்பட்டுள்ளது. - கே.பாலகிருஷ்ணன்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
விடுதலைத் திருநாள் வாழ்த்து

தமிழ்நாடு உட்பட ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் விடுதலைத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  அந்நிய ஆட்சியிலிருந்து இந்த மண்ணை விடுவிக்க உடல் பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்த தியாகிகளுக்கு இந்நாளில் வீர வணக்கம் செலுத்துவோம். 

நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரை இல்லாத முறையில் இந்த ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறோம். கொரோனா எனும் கொள்ளை நோயின் பிடியில் உலகம் சிக்கித்தவிக்கிறது. நம்முடைய இந்தியா கொரோனா நோய் பாதிப்பில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. 

இந்த கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ஒட்டுமொத்த ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் அனைத்துப்பகுதி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக சிதைக்கப்பட்டுள்ளது. 

பொது சுகாதார நெருக்கடி, பொருளாதார நெருக்கடி எனும் இரட்டை வளையத்திற்குள் மக்கள் சிக்கித்தவிக்கின்றனர். இவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கு பதிலாக, இந்த நெருக்கடியை பயன்படுத்திக்கொண்டு தன்னுடைய நிகழ்ச்சி நிரலையும், பிற்போக்கு மக்கள் விரோத திட்டங்களையும் செயல்படுத்துவதிலேயே மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு முனைப்பாக உள்ளது. ஏற்கெனவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்த மக்களின் வாழ்வாதாரம் கொரோனா நோய் மற்றும் ஊரடங்கால் தாங்க முடியாத அளவுக்கு சென்றுள்ளது. 

74வது விடுதலை நாள் கொண்டாடும் இந்நேரத்தில் காஷ்மீர் மாநிலம் கொடும் சிறைக் கூடமாக மாற்றப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அரசை எதிர்த்து குரல் கொடுத்த எண்ணற்றோர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் சாசனம் வழங்கியுள்ள அனைத்து ஜனநாயக உரிமைகளும் ஒவ்வொன்றாக பறிக்கப்படுகின்றன. வாழ முடியாமல் தவிக்கும் மக்களின் பெரும் கோபம் போராட்டமாக உருவெடுத்துள்ளது. அதை ஒடுக்குவதற்காகவும் போராடி பெற்ற கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமையைப் பறிப்பதற்காகவும் அடுக்கடுக்காக காட்டாட்சி சட்டங்கள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன.

தேசத்தின் பாதுகாப்பு அரண்களாக விளங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் ஒவ்வொன்றாக சூறையாடப்படுகிறது. அந்நிய மூலதனம் அனைத்துத் துறைகளிலும் வகைதொகையின்றி அனுமதிக்கப்படுகிறது. மறுபுறத்தில் நாட்டை சுயசார்பை நோக்கி நடத்திச் செல்வதாக பசப்பு வார்த்தைகள் பிரதமர் நரேந்திர மோடியால் கூறப்படுகின்றன. 

தொழிலாளர் நலச்சட்டங்கள் முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்தப்படுகின்றன.புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் பழைய சனாதனக் கல்வி முறை திணிக்கப்படுகிறது. நாட்டின் இயற்கை வளத்தை சூறையாடும் வகையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை எனும் பேராபத்து புகுத்தப்படுகிறது. 

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிநாதமாக விளங்குகிற கூட்டாட்சிக் கொள்கையை சிதைக்கும் வகையில் மாநிலங்களின் உரிமைகள் அடுத்தடுத்து பறிக்கப்படுகின்றன. மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கத்தின் அடிப்படையாக விளங்கும் மதச்சார்பின்மையை சிதைத்து சகிப்புத்தன்மையற்ற மதவெறி நாடாக இந்தியாவை மாற்ற மத்திய ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர். இந்தியாவின் பாரம்பரிய பன்மைத்துவத்தை சிதைத்து “ஒரே மொழி, ஒரே  மதம், ஒரே நாடு” என்ற பெயரில் ஒருமைப்பாடு சிதைக்கப்படுகிறது. 

மக்களை பிளவுபடுத்தும் வெறுப்புப்பிரச்சாரம் விதைக்கப்படுகிறது. பெண்கள், குழந்தைகள், சிறுபான்மை மக்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு எதிரான தாக்குதல் அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்திய விடுதலைப்போராட்டத்தில் பங்கேற்காத ஒரு கூட்டத்திடம் ஆட்சி அதிகாரம் சிக்கிக்கொண்டுள்ள நிலையில், விடுதலைப் போராட்ட வீரர்களின் கனவுகள் சிதைக்கப்படுகின்றன. இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 

இந்தியா தன்னுடைய விடுதலையை கொண்டாடும் இந்நாளில் இந்த மகத்தான தேசத்தை பாதுகாக்க அனைத்துப் பகுதி மக்களும் உறுதியேற்க வேண்டும். சுதந்திரம், ஜனநாயகம், மத நல்லிணக்கம், மதச்சார்பின்மை, மக்கள் ஒற்றுமை, கூட்டாட்சி, மாநில உரிமைகள், பெண்ணுரிமை, பன்முகத்தன்மை போன்ற அரசியல் சாசனத்தின் விழுமியங்களை பாதுகாக்க இந்நாளில் உறுதியேற்போம். சுதந்திரம் என்பது வெறும் சொல் அல்ல; வாழ்வின் ஒவ்வொரு  நொடியிலும் அதை உறுதிப்படுத்துவதற்கான பெரும் போராட்டத்தை நடத்திட இந்நாளில் சூளுரைப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக