சனி, 9 மே, 2020

144 தடை உத்தரவை மீறி பெருந்திரளாக டாஸ்மாக் கடைகள் முன்பு கூடியவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவுசெய்யாத ஏன் ? - கே.எஸ்.அழகிரி


மக்கள் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்போது மே 7 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததை தொடர்ந்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் அதே நாளில் அவரவர் வீட்டு முன்பாக கறுப்பு சின்னம் அணிந்து 5 பேருக்கு மிகாமல் கூடி கண்டன முழக்கங்கள் எழுப்புவதென முடிவு செய்யப்பட்டது . அதையொட்டி கடலூர் மாவட்டம், கீரப்பாளையம் பிரதான சாலையில் அமைந்துள்ள எனது வீட்டின் முன்பாக 5 பேருக்கு மிகாமல் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் எனது தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 5 பேருக்கும் அதிகமாக பங்கேற்றதாக கூறி காவல்துறையினர் என் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நேரத்தில் பிரதான சாலையாக இருப்பதால் வேடிக்கை பார்ப்பதற்காக ஒரு சிலர் அங்கே கூடியதற்கு நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பல்ல.

தமிழக அரசு டாஸ்மாக் கடைகள் திறந்ததும் கடந்த இரண்டு நாட்களாக ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக்கொண்டு நின்றவர்கள் மீது தமிழக காவல்துறையினர் ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை?

144 தடை உத்தரவை மீறி பெருந்திரளாக டாஸ்மாக் கடைகள் முன்பு கூடியவர்கள் மீது வழக்கு பதிவுசெய்யாத காவல்துறை, மக்கள் ஊரடங்கை மதித்து 5 பேருக்கு மிகாமல் அமைதியாக 15 நிமிடங்கள் மட்டுமே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய எங்கள் மீது வழக்கு போட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த வழக்கை காவல்துறையினர் உடனடியாக கைவிடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எதிர்கட்சிகளை பழிவாங்கும் நோக்கத்தோடு வழக்கு புனையப்பட்டிருந்தால் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக