புதன், 6 மே, 2020

மருந்துகளுக்காக நாடே பரிதவிக்கும் போது அமெரிக்காவுக்கு ஏற்றுமதியா?-சு.வெங்கடேசன் எம்.பி


கொரோனா இந்திய நாட்டின் சக்கரங்களையே சுழல விடாமல் நிறுத்தி வைத்திருக்கிற நேரம். மருத்துவ மனைகள் போதுமா? படுக்கைகள் போதுமா? வென்டிலேட்டர்கள் போதுமா? முக மறைப்புகள் போதுமா? சானிட்டைசர் போதுமா? இப்படி பல கேள்விகளால் பரிதவித்து நிற்கிறார்கள் அல்லும் பகலும் அயராது போராடும் மருத்துவர்கள். 

மாநில அரசுகளோ நிலமையை கையாள்வதில் திணறிக்கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் கொரொனா சிகிச்சைக்கு பயன்படத்தக்க ஹைட்ரொக்சிக்ளோரோகுயின் மருந்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய மோடி அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்தியா இம் மருந்து ஏற்றுமதிக்கு உடன்படாவிட்டால் "எதிர் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்" என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டியிருந்தார். டிரம்ப் மிரட்டல் வெளி வந்த சில மணி நேரத்திற்குள்ளாகவே மோடி அரசு ஏற்றுமதிக்கான முடிவை எடுத்திருப்பது அப்பட்டமான சரணாகதி ஆகும். 

நாம் அமெரிக்க மக்களையும் நேசிப்பவர்கள்தான். ஆனால் அமெரிக்காவைப் போன்று நான்கு மடங்கு மக்கள் தொகை கொண்ட
இந்தியாவின் கைவசம் இருக்கிற மருத்துவ இருப்புகளை இழக்காமல் பாதுகாக்க வேண்டிய தருணமல்லவா இது.

ஈரானில் மக்கள் கொரோனா தொற்றால் செத்து மடிகிற வேளையிலும், கியூபா உலகின் பல நாடுகளுக்கும் மனித குலத்தை காப்பாற்ற மருத்துவர்களை அனுப்புகிற வேளையிலும் அந்த நாடுகளின் மீதான தடைகளை நீக்க மறுக்கிற அமெரிக்காவின் ஆணவத்திற்கு இந்தியா ஏன் அடி பணிய வேண்டும்?

ஜனவரி மாதமே கொரோனாவின் அபாயத்தை உலகம் உணரத்துவங்கிய நிலையில் மார்ச் மாதம் வரை நாம் ஏற்றுமதியை அனுமதித்தது கடும் விமர்சனத்துக்கு உரியது. இந்நிலையில் மீண்டும் ஏற்றுமதிக்கு அனுமதித்தது இந்திய மக்களின் மருத்துவ சேவையை பதட்டத்துக்கு உட்படுத்தும் முடிவாகும்.

தன் நாட்டு மக்களின் தேவையை கேட்டுப்பெற அந்நாட்டின் அதிபர் எவ்வளவும் முயற்சிசெய்யலாம். ஆனால் மிரட்டித்தான் உதவியை கேட்பார் என்றால் அதற்கு செவிசாய்ப்பது அடிபணிவதற்க்கு ஒப்பானதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக