புதன், 6 மே, 2020

கே.எஸ்.அழகிரி அறிக்கை



நீண்ட நெடுங்காலமாக கன்னியாகுமரி மாவட்டத்திலும் கேரள மாநிலத்திலும் உள்ள மக்களுக்கு பல்வேறு விதமான நெருங்கிய தொடர்புகள் உண்டு. வர்த்தக போக்குவரத்துகளும் நாள்தோறும் நிகழ்ந்துகொண்டிருந்தன. திருவனந்தபுரத்தில் உள்ள பிராந்திய புற்றுநோய் மையத்தில் மருந்துகள் பெறுவதற்காக கன்னியாகுமரி மாவட்ட மக்கள் அங்கு செல்வதுண்டு. அதேபோல கேரள மாநிலத்தில் இருந்தும் மக்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருவதுண்டு. ஆனால், மக்கள் ஊரடங்கு காரணமாக தமிழ்நாடு, கேரள மாநில எல்லைகள் தற்போது மூடப்பட்டுள்ளன. அங்கே தடுப்பு காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு இரு மாநில மக்களிடையே எந்த தொடர்பும் இல்லாமல் காவல்துறையினர் தடுத்து வருகின்றனர். இதனால் இரு மாநில மக்களும் கடும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர்.

இப்பிரச்சினையை அறிந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் திரு கே.சி.வேணுகோபால் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இரு மாநில மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்காக தமிழ்நாடு - கேரள எல்லை பகுதியில் உள்ள களியக்காவிளை பகுதியில் தகவல் சேவை மையத்தை சட்டமன்ற காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் திரு எஸ்.ராஜேஷ்குமார், திரு ஜெ.ஜி.பிரின்ஸ் ஆகியோர் திறந்துவைத்தனர். இந்த மையத்தின் மூலமாக தமிழ்நாட்டில் இருந்து கேரளா செல்ல விரும்புபவர்களுக்கு தமிழ்நாடு அரசும், கேரள மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வர விரும்புபவர்களுக்கு கேரள அரசும் அனுமதி அட்டை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

ஆனால் காங்கிரஸ் கட்சியின் சார்பாக தொடங்கப்பட்ட தகவல் சேவை மையம் செயல்படுத்துவதற்கு மக்கள் ஊரடங்கு இருக்கும் நேரத்தில் அனுமதிக்க முடியாது என்று மாவட்ட காவல்த்துறை கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினர் தடை உத்தரவை பிறப்பித்தனர். தகவல் சேவைமையம் செயல்பட கூடாது என்று கூறியதோடு சட்டமன்ற உறுப்பினர்களான திரு எஸ்.ராஜேஷ்குமார், திரு ஜெ.ஜி.பிரின்ஸ் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கொரோனா நோயினால் மக்கள் துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் மக்களுக்கு இணையதளம் மூலமாக உதவி செய்வதற்காக தகவல் சேவை மையத்தை திறப்பதை தடுப்பது அப்பட்டமான மக்கள் விரோத செயலாகும். இந்த செயலை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக