சனி, 9 மே, 2020

கொரோனா நோய் முழுமையாக கட்டுப்படாத சூழலில் மதுபான கடைகளை தமிழக அரசு திறக்கக்கூடாது - டாக்டர் K. கிருஷ்ணசாமி


திறக்கபட்ட டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டிருப்பதை வரவேற்கிறேன். 
இது தற்காலிகமாக இருந்துவிடக் கூடாது என்பதே நமது கவலை. 
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD 

கொரோனா நோய் முழுமையாக கட்டுப்படாத சூழலில் மதுபான கடைகளை தமிழக அரசு திறக்கக்கூடாது என்று மூன்று தினங்களுக்கு முன்பு வேண்டுகோள் விடுத்திருந்தோம். இதேபோல பல அரசியல் கட்சிகளும் வலியுறுத்தியிருந்தார்கள். எனினும் இதையெல்லாம் மீறி தமிழ்நாட்டில் மதுபான கடைகள் திறக்கப்பட்டன. 

கொரோனா தொற்று நோய் பரவக் கூடாது என்பதற்கான முதல் விதியே, ”சமூக விலகல்” என்று அழைக்கப்படக்கூடிய ஒரு நபருக்கும் இன்னொரு நபருக்கும் உள்ள 2 மீட்டர் இடைவெளியாகும். ஆனால் நேற்றைய தினம் எல்லாவிதமான விதிமுறைகளையும் மீறி, ஆயிரக்கணக்கானோர் டாஸ்மாக் கடைகள் முன்பு, இம்மியளவும் இடைவெளி இல்லாமல் முட்டி மோதி நின்றதை அனைத்து தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பின. 

நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகமெங்கும் பல கொலைகள் நடந்துள்ளன. தாயைக் கொன்ற தமையன், தங்கையை கொன்ற தனையன், குடும்பங்களில் கணவன், மனைவி மோதல் போன்ற எண்ணற்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் என்பதால்தான் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என எச்சரித்திருந்தோம். டாஸ்மாக் கடைகளில் நடைபெற்ற அத்துமீறல்களை கண்ணுற்ற நீதிமன்றம் இனிமேலும் டாஸ்மாக் கடைகளை நடத்த அனுமதித்தால் விளைவுகள் விபரீதமாகும் என்று உணர்ந்து இன்று டாஸ்மாக் கடைக்கு தடை விதித்திருக்கிறது. இது தற்காலிகமாக இருந்துவிடக் கூடாது என்பதே நமது கவலை. 

கடந்த பல பத்து வருடங்களாக நிலவி வந்த குடிப்பழக்கத்தால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள், உடல் ரீதியான பாதிப்புக்கள், சமூக குடும்ப சச்சரவுகள், சமூக பிணக்குகள், பொருளாதார பின்னடைவுகள்  ஆகியன குறித்து தமிழகம் தழுவிய தலை சிறந்த மருத்துவர்கள், அறிஞர்கள், மனோதத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவின் மூலமாக முழுமையான, சுதந்திரமான ஆய்வு செய்யப் பட வேண்டும். 

இந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே, இனிமேல் வரும்காலங்களில் மதுபான கடைகளை திறப்பது குறித்து தமிழக அரசு எந்த முடிவுக்கும் வர வேண்டும். இப்பொழுது ஆன்லைன் மூலமாக டாஸ்மாக் வாங்கிக் கொள்ளலாம் என்ற உத்தரவை கூட நிறுத்தி வைத்தால் முழுமையான பலன் கிடைக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசு மதுபான கடைகளை திறக்க எவ்வளவு முயற்சி செய்தாலும், மக்களின் மீது அக்கறை கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்திருக்ககூடிய இந்த தீர்ப்பு அனைத்து வழிகளிலும் பாராட்டுக்குரியது. இது இடைக்கால உத்தரவாக இல்லாமல் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக