சனி, 1 ஆகஸ்ட், 2020

நாமே நமது வரலாற்றுப் பண்பாட்டுத் தமிழ் இலக்கியச் சின்னமாக விளங்கும் வள்ளல் வேள் பாரி மன்னனின் பறம்புமலையைத் தகர்ப்பதா? - தி.வேல்முருகன்


நாமே நமது வரலாற்றுப் பண்பாட்டுத் தமிழ் இலக்கியச் சின்னமாக விளங்கும் வள்ளல் வேள் பாரி மன்னனின் பறம்புமலையைத் தகர்ப்பதா? 
அங்கு சென்ற ‘பறம்புமலை பாதுகாப்பு இயக்கம்’ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் முன்னணிப் 
பொறுப்பாளர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்வதா? 
மலையை உடைப்பதும் அதைக் காணும் சாட்சிகளைக் கைது செய்வதுமான சட்டவிரோத குற்றச்செயலை வன்மையாகக் கண்டிப்பதோடு, மலை உடைப்பை நிறுத்துமாறும் பொய் வழக்கு பதிவு  செய்யப்பட்டவர்களை வழக்கில் இருந்து விடுவிக்குமாறும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!  

மனிதனின் ஆசைக்கு அளவில்லையா? அவனது பேராசை பேயாசையாகவும் மாறிவிட்டிருக்கிறது. அதனால்தான் கண் மண் தெரியாத காரியங்களிலும் ஈடுபடுகிறான். செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வேறுபாடு தெரியாமல் இருக்கிறான். அப்படிப்பட்டவனுக்கு வரலாறு, பண்பாடு, இலக்கியம் எல்லாம் எங்கே புரியப்போகிறது? ஆனால் ஆட்சியாளர்களை, அதிகாரவான்களைக் கைக்குள் போடும் வித்தை மிக நன்றாகவே தெரிகிறது. அதை வைத்து சட்டவிரோத குற்றச்செயல்களையும் தாராளமாகச் செய்கிறான். 
அப்படித்தான் தமிழ்ச் சங்க இலக்கியம் கூறும் வள்ளல் வேள் பாரி மன்னன் ஆண்ட பறம்புமலையை உடைக்கும் வேலை, காவலர்கள் பாதுகாப்பில் நடந்தேறுகிறது. அதைச் செய்பவர்கள் நிச்சயம் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆளுங்கட்சிப் பிரமுகர்களாகத்தான் இருக்க வேண்டும். அதனால்தான் சட்டவிரோதாக அவர்கள் செய்யும் இந்தக் குற்றச்செயலுக்கும் கூட காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. 
அந்தப் பறம்புமலை சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. பிரான்மலை என்று அழைக்கப்படுகிறது. அங்கு அமைத்திருக்கும் தனியார் கல் குவாரிகள் மூலம் மலைக்கான பாதை உடைக்கப்படுகிறது. 

அதைத் தொடர்ந்து மலையைச் சுற்றி அதன் இதர பகுதிகளிலும் கல் குவாரிகள் அமைத்து மலையுடைப்பு நடந்துவருகிறது. பணபலம், ஆள்பலம், அதிகாரபலம் கொண்ட தனியாரின் கல் குவாரிகள் மூலம் புளூ மெட்டல் வணிகம் கொடிகட்டிப் பறக்கிறது. இது தொடர்ந்தால் கூடிய விரைவில் பறம்புமலை இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்பதில் சந்தேகமேயில்லை. 
தமிழ்ச் சங்ககாலக் கடையேழு வள்ளல்களில் ஒருவரான வள்ளல் வேள் பாரி மன்னனின் இப்பறம்புமலை பாதுகாக்கப்பட வேண்டிய தமிழரின் வரலாற்றுப் பண்பாட்டு இலக்கியச் சின்னமாகும். தமிழின உணர்வாளர்களாகிய எமக்கு இருக்கும் இந்த அக்கறை, தமிழ்க்குடி மொத்தத்திற்கும் தமிழக அரசுக்கும் அவசியம் இருந்தாக வேண்டும். எனவே தமிழக அரசு இதில் தலையிட வேண்டுகிறோம்.

பறம்புமலையைப் பாதுகாக்க வேண்டும்; அதைச் சுற்றிலும் மலையை உடைக்கும் தனியார் வணிகத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று அப்பகுதி தமிழின உணர்வாளர்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை மேல் கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் இதுவரை தமிழ்நாடு அரசு இக்கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. மலை உடைப்பு வேலை தொடர்கிறது. 
இந்நிலையில், 21.07.2020ஆம் தேதியன்று காலை, பறம்புமலை பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் முன்னணிப் பொறுப்பாளர்களும் ஆர்வலர்களும் மலையைப் பார்வையிடச் சென்றனர். அவர்களை காவல்துறையினர் வழிமறித்துக் கைது பின்பு விடுதலை செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்கள் சிறுவர், சிறுமியர் உட்பட 65 பேர். இது கண்டனத்திற்குரிய செயலாகும். இவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கில் இருந்து விடுவிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். 

பறம்புமலையுடைப்பு விடயத்தை வரலாறு, பண்பாடு, இலக்கியம் மட்டுமல்ல அறிவியல்பூர்வமாகவும் அணுக வேண்டும். அதன்படி, இயற்கை வளங்களை அழித்தால், இப்புவியில் மனிதனின் இருத்தலையே அது கேள்விக்குள்ளாக்கிவிடும். புவி வெப்பமயமாதலும் பருவநிலை மாற்றமும் மனித வாழ்வுக்கே ஆபத்தாகியிருக்கும் இன்றைய சூழலில் இயற்கையையும் சுற்றுச்சூழலையும் அழிப்பதில் இறங்கலாமா? 
ஒரு மலை உருவாக வேண்டுமென்றால் பல மில்லியன் ஆண்டுகள் பிடிக்கும்; நாம் அதைப் பெயர்த்தெடுத்துவிட்டால் மீட்டுருவாக்கவே முடியாது. புளூமெட்டல் எனப்படும் ஜல்லிக்கான குவாரிகள் வெளியேற்றும் சிலிக்கான்  துகள்கள், காற்றை மாசுபடுத்துவதோடு நுரையீரல் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கும் வழிவகுக்கும். அதோடு பாறைத்தகர்ப்புகள் பல்லுயிரின வளத்துக்கும் அச்சுறுத்தலாக அமைகின்றன. எனவேதான் பொறுப்புணர்வுடன் கேட்கிறோம்: நாமே நமது வரலாற்றுப் பண்பாட்டுத் தமிழ் இலக்கியச் சின்னமாக விளங்கும் வள்ளல் வேள் பாரி மன்னனின் பறம்புமலையைத் தகர்ப்பதா? 

அங்கு சென்ற ‘பறம்புமலை பாதுகாப்பு இயக்கம்’ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின்  முன்னணிப் பொறுப்பாளர்கள் மீது  பொய் வழக்கு பதிவு செய்வதா? 
மலையை உடைப்பதும் அதைக் காணும் சாட்சிகளைக் கைது செய்வதுமான சட்டவிரோத குற்றச்செயலை வன்மையாகக் கண்டிப்பதோடு, மலை உடைப்பை நிறுத்துமாறும் பொய் வழக்கு பதிவு  செய்யப்பட்டவர்களை  உடனடியாக வழக்கில் இருந்து விடுவிக்குமாறும்  தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக