புதன், 5 ஆகஸ்ட், 2020

மாற்றுத் திறனாளிகள் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் செய்தி, எனது இதயத்தை நிரப்பி ஈடிலா மகிழ்ச்சியைத் தருகிறது.- மு.க.ஸ்டாலின்


ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட அகில இந்தியப் பணிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி) நடத்திய குடிமைப் பணிகள் (சிவில் சர்வீசஸ்) தேர்வில் வெற்றி பெற்றுள்ள, தமிழகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த  பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் தமிழகத்தில் முதலிடத்தையும், தேசிய அளவில் 7-வது இடத்தையும், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா தமிழக அளவில் இரண்டாவது இடத்தையும் தேசிய அளவில் 47-வது இடத்தையும்  பெற்று ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றியடைந்து - நிர்வாகத்தில் பொதுப்பணியாற்ற வந்திருப்பது உள்ளபடியே பெருமகிழ்ச்சிக்குரியது. குறிப்பாக, மதுரை பூர்ணசுந்தரி, சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த  பாலநாகேந்திரன் ஆகிய மாற்றுத் திறனாளிகள் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் செய்தி, எனது இதயத்தை நிரப்பி ஈடிலா மகிழ்ச்சியைத் தருகிறது.

வெற்றி பெற்றுள்ள அனைவருக்கும்  கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பினை - நாட்டின் முன்னேற்றத்திற்கும் - நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கும் - குறிப்பாக, பிறந்த மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்திப் பணியாற்றிட எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முறை வெற்றி வாய்ப்பு கிட்டாதவர்கள், அதற்காகச் சிறிதும்  சோர்ந்து விடாமல் - இந்தப் பொன்னான வாய்ப்பு நமக்காகக் காத்திருக்கிறது என்ற நம்பிக்கையுடனும், உறுதியுடனும், தொடர்ந்து முயற்சிகளை மேலும் வலுப்படுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக