வியாழன், 6 ஆகஸ்ட், 2020

தமிழக அரசு செய்ய வேண்டிய பணியை வலியுறுத்துகிற வகையில் நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது - கே.எஸ்.அழகிரி


சத்துணவு திட்டத்தின் மூலமாக மாணவர்களுக்கு முட்டைகளை விநியோகம் செய்யவேண்டு மென்று  சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்ததை வரவேற்கிறேன். தமிழக அரசு செய்ய வேண்டிய பணியை வலியுறுத்துகிற வகையில் நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. கொரோனா தொற்று பரவலால் மார்ச் 25 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 50 லட்சம் மாணவ, மாணவியர் சத்துணவு திட்டத்தில் பயன் பெற்று வருகின்றனர். மேலும் அங்கன்வாடியில் 20 லட்சம் குழந்தைகள் பயன் பெறுகின்றனர்.

கொரோனா தொற்று காரணமாக அரசு பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் சத்துணவு திட்டத்திற்கு மாணவர்களுக்கு முட்டை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த 6 மாதமாக கோழிப் பண்ணைத் தொழில் கடும் பின்னடைவை சந்தித்து வருகின்றது. நாமக்கல் மண்டலத்தில் உள்ள 1100 கோழி பண்ணைகளில் 4 கோடி முட்டைகள் உற்பத்தியாகி வந்தன. ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக 3.50 கோடி முட்டைகளே உற்பத்தியாகி வருகின்றன.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அரசு அமல்படுத்தும் போது சுமார் 50 கோடி முட்டைகள் பள்ளிக்கு செல்லுகிற சூழ்நிலை ஏற்படும். இதனால் மாணவர்கள் மட்டுமின்றி கோழிப்  பண்ணையாளர்களும் பயனடைந்து கோழிப் பண்ணைத் தொழிலும் மீண்டும் வளர்ச்சி அடைய வாய்ப்பு ஏற்படும். நாள்தோறும் சத்துணவு மாணவர்களுக்கு 50 லட்சம், அங்கன்வாடி குழந்தைகளுக்காக 15 லட்சம் முட்டைகள் தினசரி 1 முட்டை வீதம் கொள்முதல் செய்தால் மிகப் பெரிய அளவில் கோழி பண்ணையாளர்கள் பயனடைய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களில் ஏறத்தாழ 30 லட்சம் பேருக்கு அரிசி மற்றும் பருப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு சத்தான உணவுடன் வாரத்தின் 5 நாள்களும் முட்டை வழங்கப்பட்டு வந்தது. கொரோனா தொற்று காரணமாக முட்டை வழங்குவது நிறுத்தப்பட்டது. இதை ஈடுகட்டும் வகையில் அரிசி மற்றும் பருப்பு மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தோடு நீதிமன்றம் ஆணையின் படி மாணவர்கள் ஊட்டச்சத்து பெறுகிற வகையில் முட்டைகளை அவசியம் வழங்க வேண்டும்.
அரசு பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உடனடியாக வழங்க 50 கோடி முட்டைகள் தயாராக இருப்பதாக தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்து இருக்கின்றனர். எனவே சென்னை உயர்நீதி மன்றத்தின் ஆணையை நிறைவேற்றி சத்துணவு திட்டத்தில் 50 லட்சம் மாணவர்களுக்கும், 15 லட்சம் அங்கன்வாடி குழந்தைகளுக்கும் முட்டைகளை வழங்குவதற்கு உடனடியாக ஆணை பிறப்பிக்கும்படி தமிழக முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.  

தற்போது வாரம் 3 கோடி வீதம் மாதம் 12 கோடி முட்டைகளை சத்துணவு திட்டத்திற்காக தமிழக அரசு கொள்முதல் செய்கிறது. கொரோனா தொற்று காரணமாக முட்டை கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது.  நீதிமன்ற ஆணையின்படி மாதம் 12 கோடி முட்டைகள் கொள்முதல் செய்தால் கோழி உற்பத்தியாளர்கள் சந்திக்கும் இழப்பை ஈடுகட்ட முடியும். கொரோனா காலத்தில் ஏழை, எளிய மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் முட்டைகள் வழங்குவது தமிழக அரசின் கடமையாகும். இதை நிறைவேற்றுவதில் காலதாமதம் செய்யாமல் உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் ஆர். சுதா தொடுத்த பொதுநல வழக்கில் தான் சத்துணவு திட்டத்தில் மாணவர்களுக்கு முட்டை வழங்க வேண்டுமென்று நீதிமன்றம் ஆணையிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக