சனி, 8 ஆகஸ்ட், 2020

கேரளத்தில் இரட்டை சோகம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரங்கல் - நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்க வேண்டும்! - DR. அன்புமணி ராமதாஸ்

கேரளத்தில் இரட்டை சோகம்: பாதிக்கப்பட்ட  மக்களுக்கு இரங்கல் - நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்க வேண்டும்!                                                     - DR. அன்புமணி ராமதாஸ்

கேரள மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து இரு துயரங்கள் ஏற்பட்டுள்ளன. இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 18 தமிழர்கள் உயிருடன் புதைந்து உயிரிழந்த நிலையில், கோழிக்கோடு விமான நிலையத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வருவதற்கான வந்தே பாரத் இயக்கத்தின்படி துபையிலிருந்து 10 குழந்தைகள் உள்ளிட்ட 181 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, மோசமான வானிலை காரணமாக இரண்டாக உடைந்து ஓடு தளத்திற்கு அப்பால் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் விமானி உள்ளிட்ட 19 பேர் உயிரிழந்தனர். விமான விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் திரண்டு சென்று தீயவிப்புப் படையினருடன் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அதனால் மீட்புப் பணிகள் 3 மணி நேரத்தில் முடிவடைந்தன. காயங்களுடன்  போராடிக் கொண்டிருந்த 153 பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த உடனடி நடவடிக்கையால், படுகாயமடைந்த பலருக்கு சரியான நேரத்தில் மருத்துவம் அளிக்கப்பட்டு, காப்பாற்றப்பட்டுள்ளனர். இதற்குக் காரணமான மீட்புக் குழுவினர் மற்றும் பொதுமக்களின் தன்னலம் கருதாத துணிச்சலான மீட்பு நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை ஆகும்.

விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பா.ம.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு விமான விபத்துக் காப்பீடு விதிகளின்படி இழப்பீடு வழங்கப்பட வேண்டும். விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் உலகத்தரமான மருத்துவம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மற்றொருபுறம், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ராஜமலை பகுதியில் உள்ள பெட்டிமுடி பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் அங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றி வந்த தோட்டத் தொழிலாளர்கள் குடியிருந்த வீடுகள் அடித்துச் செல்லப் பட்டன. அவர்களில் 82 பேர் உயிருடன் மண்ணில் புதைந்தனர். அவர்களில் 12 பேர் உயிருடன் மீட்கப் பட்டுள்ளனர். 18 பேர் உயிரிழந்து விட்டனர். மீதமுள்ள 52 பேர் மண்ணில் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்களை கண்டுபிடித்து மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்து நடந்து 24 மணி நேரத்திற்கும் மேலாகி விட்ட நிலையில் மீட்புப் பணிகளை விரைவுபடுத்தி, நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்க கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள அரசுக்கு தேவையான உதவிகளை வழங்க தமிழக அரசும், மத்திய அரசும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக