சனி, 8 ஆகஸ்ட், 2020

மண் சரிவில் பலியான குடும்பங்களுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூபாய் 25 லட்சமாக உயர்த்த வேண்டும்- கே.எஸ். அழகிரி

கேரள மாநிலம் மூணாறு அருகே கன மழையால் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் தமிழகத்தைச் சேர்ந்த தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் 85 பேர் மண்ணில் புதைந்து பலியாகி இருக்கிற செய்தி நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது. கண்ணன் தேவன் நிறுவனத்திற்கு சொந்தமான தேயிலை தோட்டப் பகுதியில் தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் தொகுப்பு வீடுகளில் வசித்து வந்த தமிழர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது இரவு 11 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 20 வீடுகளும் மண்ணில் புதைந்துள்ளன. தூங்கிக் கொண்டிருந்த அனைவரும் மண்ணில் புதைந்து மரணமடைந்துள்ளனர்.

தேயிலை தோட்டம் இருக்கும் மலைப் பகுதிகளில் கட்டப் பட்டிருக்கிற வீடுகள் இத்தகைய பேரிடர்களை எதிர் கொள்கிற வகையில் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து உறுதி செய்கிற பொறுப்பு கேரள அரசிற்கு இருக்கிறது. இதுகுறித்து தனியார் தேயிலை தோட்ட நிறுவனம் கவலை கொண்டதாக தெரியவில்லை. பிழைப்பிற்காக தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் அப்பாவி 85 தமிழர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.

மண் சரிவில் பலியான குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கலைத் தெரிவித்து விட்டு எந்த இழப்பீடும் அறிவிக்கவில்லை. கேரள முதல்வர் பினராய் விஜயன் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூபாய் 5 லட்சம் நிவாரணம் வழங்கியிருக்கிறார். இந்த தொகையை ரூபாய் 25 லட்சமாக உயர்த்த வேண்டும். நிலச்சரிவில் பலியான 85 தமிழர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே போல, துபாயிலிருந்த வந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று கோழிக்கோடு விமான நிலையத்தில் 35 அடி பள்ளத்தில் விழுந்து விமானி உள்பட 18 பேர் பலியாகிவுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகிவுள்ளது. கோழிக்கோடு விமான நிலையத்தில் ஓடுதளங்கள் போதிய அளவில் இல்லாததால் இத்தகைய விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விமான விபத்தில் பலியான 18 பயணிகளின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக