திங்கள், 3 ஆகஸ்ட், 2020

சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டுவது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு அளித்தனர்


சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டுவது தொடர்பாக இன்று(03/08/2020) சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து நானும்,சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.SR.சிவலிங்கம் அவர்களும், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் திரு.P.கௌதமசிகாமணி அவர்களும்,

சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் SRபார்திபன் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் திரு.DNV.செந்தில்குமார் அவர்களும், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.AKP.சின்ராஜ் அவர்களும் மனு அளித்தனர்.

மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில்,

"1. சென்னை - சேலம் இடையே 277 கி.மீ எட்டு வழி சாலை திட்டம் அமைக்க மத்திய அரசு 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி சேலம்,தருமபுரி கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை,காஞ்சிபுரம் மாவட்டங்களில் சுமார் 7,500 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்பதால், இந்த திட்டத்திற்கு பொதுமக்கள்,விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பதை தாங்கள் அறிவீர்கள்.

2. சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தால் விவசாயநிலங்கள், வனப்பகுதிகள்,ஆறுகள்,ஏரிகள் மற்றும் நீர் பாசன பகுதிகள் முற்றிலுமாக அழிந்து போகும்.விவசாய தொழிலையே நம்பி வாழும் விவசாயகூலிகள், விவசாயிகள் என 30-ஆயிரத்திற்கும்  மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிலை இழந்து நடுத்தெருவில் நிற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

3. விவசாயிகளின் நலனை பாதுகாத்து சென்னை உயர்நீதிமன்றம் எட்டு வழி சாலை திட்டத்திற்கு தடை ஆணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக்கூடாது என தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவரும்,இந்திய நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியுமான திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மாண்புமிகு.தளபதி அவர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகள்,பொதுமக்களின் சார்பில் மத்திய,மாநில அரசுகளை வலியுறுத்தினார்.இதனை அலட்சியப்படுத்திய மத்திய,மாநில அரசுகள் விவசாயிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தீவிரம் காட்டி வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் இடையே தொடர்ந்து கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

4.சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டியும்,இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் திமுக தலைவர் மாண்புமிகு.தளபதி அவர்களின் வழிகாட்டுதலோடு இந்திய நாடாளுமன்ற இரு அவைகளிலும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களால் இந்தத்திட்டத்தை கைவிட வேண்டி வலியுறுத்தி பேசப்பட்டது. மேலும் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்களை நேரில் சந்தித்து, தமிழக விவசாயிகளின் சார்பில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள்.

5.இந்நிலையில் சென்னை - சேலம் எட்டு  வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு முன்பாக இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க அனுமதி கட்டாயம் இல்லை என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதால், சேலம்,தர்மபுரி,கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாழும் பொதுமக்கள், விவசாயிகளிடத்தில் பதற்றத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது என்பதை மாவட்ட ஆட்சித்தலைவர் நன்கு அறிவீர்கள்.

6.எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இந்த மாவட்டத்தில் நடக்கும் உண்மை நிலையையும்,விவசாயிகள்,பொதுமக்கள் இந்த திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு காட்டி வருவதாலும்,போராட்டம் நடத்துவதாலும் பதற்றமான சூழ்நிலை ஏற்படுகிறது.

சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை விவசாய நிலங்கள்,வனங்கள் பாதிக்காத வகையில் இத்திட்டத்தை செயல்படுத்திடவும்,மாவட்டத்தில் நடக்கும் உண்மை நிலையை மத்திய,மாநில அரசுகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவராகிய தாங்கள் உண்மை நிலையை விவசாயிகளை பாதுகாக்கின்ற வகையிலும்,மாவட்டத்தில் அமைதி ஏற்படுத்திடவும் அறிக்கையாக அனுப்ப வேண்டும்.நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற முறையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக