திங்கள், 3 ஆகஸ்ட், 2020

இந்தியக் குடியரசுத் தலைவர் செவிலியர்கள் சங்கம், ராணுவ செவிலியர்களுடன் ரக்சா பந்தன் கொண்டாடினார்.


இந்தியக் குடியரசுத் தலைவர் செவிலியர்களுடன் ரக்சா பந்தன் கொண்டாடினார்.

இந்தியக் குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த், குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஆகஸ்ட் 3, 2020) செவிலியர் சமுதாய உறுப்பினர்களுடன் ரக்சா பந்தன் விழாவைக் கொண்டாடினார்.  இந்தியப் பயிற்சி பெற்ற செவிலியர்கள் சங்கம், ராணுவ செவிலியர் சேவை, குடியரசுத் தலைவரின் எஸ்டேட் கிளினிக்  ஆகியவற்றின் பிரதிநிதிகள் குடியரசுத் தலைவரைச் சந்தித்து ராக்கி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

குறுகிய கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது, செவிலியர்கள் ராக்கிகளை குடியரசுத் தலைவருக்கு வழங்கினர். கோவிட்-19 தொற்றைச் சமாளிப்பதில் பெற்ற அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். மக்களின் உயிரைக் காப்பாற்றும்  கடமையை நிறைவேற்றும் போது, தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் பணியாற்றி வரும் அவர்களை மீட்பர்கள் எனக் குறிப்பிட்டு குடியரசுத் தலைவர் பாராட்டினார்.  கோவிட் முன்களப் பணியாளர்களான செவிலியர்கள், கடமையை திறம்படச் செய்து வரும் போது காட்டும் அர்ப்பணிப்பு உணர்வு மிகப்பெரும் மரியாதையைப் பெற்றுத் தந்துள்ளதாக அவர் பாராட்டினார்.

பாரம்பரியமாக  ரக்சா பந்தன் பண்டிடிகையின் போது, சகோதரிகள்  தங்கள் சகோதரர்கள் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்வது வழக்கம் என்று குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், செவிலியர்கள் விஷயத்தில், அவர்கள் தங்களது அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய சேவை மூலம் தங்கள் சகோதரர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருவதுடன், அனைத்து மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்கின்றனர் என்று கூறினார்.

ராணுவ செவிலியர் சேவைப் பிரிவைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது, தொற்றால் பாதிக்கப்பட்டு, விரைவில் குணமடைந்து, புதுப்பிக்கப்பட்ட உத்வேகத்துடன் பணிக்குத் திரும்பியுள்ளது பற்றி குறிப்பிட்ட குடியரசுத் தலைவர் , கோவிட் தொற்று காலத்தில், சக குடிமக்களுக்கு அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாட்டுடன் பணியாற்றி வரும் செவிலியர்கள் சமுதாயத்தினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். ரக்சா பந்தனையொட்டி, அனைத்து செவிலியர் சமுதாயத்தினருக்கும் அவர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

முன்னதாக, கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து உதவுவதில் ஏற்பட்ட தங்கள் அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். ஒவ்வொருவரும் தங்களது அனுபவங்களைக் கூறும் போது, கோவிட்-19 நோயாளிகள் தீவிர மன அழுத்தத்துக்கு  ஆளாவதாக ஒரே குரலில் தெரிவித்தனர்.  நோய் பற்றிய தவறான எண்ணம் காரணமாக இந்த அழுத்தம் ஏற்படுகிறது என்றும், இந்தப் பிரச்சினைக்கு  மருத்துவ ரீதியிலும், ஆலோசனை மூலமாகவும், தீர்வு காண வேண்டியது அவசியம் என்றும் அவர்கள்  வலியுறுத்தினர். அவர்களது கருத்துகளைப் பொறுமையுடன் கேட்ட குடியரசுத் தலைவர், நாட்டுக்கு அவர்கள் ஆற்றி வரும் மகத்தான சேவையைப் பாராட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக