புதன், 5 ஆகஸ்ட், 2020

அயோத்தியில் நடைபெற்ற பூமி பூஜையை முன்னிட்டு குடியரசுத் துணைத் தலைவர் தனது மனைவியுடன் குடியரசுத் துணைத் தலைவர் மாளிகையில் ராமாயணம் படித்தார்


அயோத்தியில் நடைபெற்ற பூமி பூஜையை முன்னிட்டு குடியரசுத் துணைத் தலைவர் தனது மனைவியுடன் குடியரசுத் துணைத் தலைவர் மாளிகையில் ராமாயணம் படித்தார்

அயோத்தியில் இன்று நடைபெற்ற ராமர் கோவிலின் பூமி பூஜை புனித விழாவை முன்னிட்டு குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கைய நாயுடு தனது மனைவி திருமதி. உஷா நாயுடுவுடன் குடியரசுத் துணைத் தலைவர் மாளிகையில் ராமாயணம் படித்தார். 

பின்னர் ஒரு முகநூல் பதிவில், பகவான் ராமருக்கு அவரது பிறந்த இடமான அயோத்தியில் கோவில் கட்டுவதென்பது, அந்த மரியாதைக்குரிய புனிதர் தனது வாழ்நாளில் கடைபிடித்த உயரிய மனித கோட்பாடுகளான உண்மை, அறநெறி மற்றும் லட்சியங்களுக்கு மீண்டும் முடிசூட்டுவது போன்றதாகும் என்று குடியரசுத் துணைத் தலைவர் குறிப்பிட்டார். "அயோத்தியின் மன்னராக, சாதாரண மக்களும், பதவியில் உள்ளவர்களும் பின்பற்றக்கூடிய முன்மாதிரியான வாழ்க்கையை அவர் வாழ்ந்தார்," என்று கூறினார். 

அனைத்துப் பாகுபாடுகளையும் கடந்த, இன்றைக்கும் பொருந்தக்கூடிய பகவான் ராமரின் நடத்தையும், லட்சியங்களும் இந்தியாவின் அடிப்படை உணர்வைக் குறிப்பதாக அவர் கூறினார். ராமர் கோவிலின் கட்டுமானம் ஒரு ஆன்மிக விழாவைத் தாண்டியது என்று திரு. நாயுடு கூறினார். காலத்தை கடந்த மனித லட்சியங்களில் சிறப்பானவற்றுக்கு மரியாதை செய்யும் விதமாக இந்தக் கோவில் நிலைத்து நிற்கும் என்று அவர் எடுத்துரைத்தார். 

அயோத்தியில் இன்று நடைபெற்ற பூமி பூஜை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த குடியரசுத் துணை தலைவர், எந்தப் பாகுபாடும் இல்லாமல் உலகத்துக்கே பொருந்தக் கூடிய நமது தாய்நாட்டின் நெறிமுறைகளை அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில் நினைவூட்டி வலியுறுத்தும் என்றார். 

"நமது நாட்டின் வரலாற்றின் பக்கங்களில் ஒரு மிக முக்கியமான நாளாக இந்த நினைவுச் சின்னத்துக்கு பூமி பூஜை செய்யப்பட்ட தினமான ஆகஸ்டு 5 திகழும்," என்று மேலும் கூறிய அவர், நீண்ட காலமாக நிலவிய பிரச்சினைக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காண உதவி இந்தக் கோவிலை உண்மையாக்கிய, நில உரிமை வழக்குக்கு தொடர்புடையவர்கள் உட்பட அனைவரையும் பாராட்டினார்.

கடந்த காலத்தை மறந்து, இந்தியாவின் உண்மையான உணர்வோடு முன்னேறி செல்லுமாறு மக்களை கேட்டுக் கொண்டதற்காக நில உரிமை வழக்கின் வாதிகளில் ஒருவரான திரு. ஹஷிம் அன்சாரியின் மகனான திரு. இக்பால் அன்சாரியையும் திரு. நாயுடு பாராட்டினார். அவரது அறிவுப்பூர்வமான வார்த்தைகள் அனைவருக்கும் பயனளிக்கக் கூடிய வழிகாட்டுதலை வழங்குகின்றன என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக